1. மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2. நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது. ஒரு பெண் கருத்தாங்கி ஆண் பிள்ளையைப் பெற்றால், அவள் மாதவிடாயுள்ள பெண் விலக்கமாகியிருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழுநாள் அசுத்தமுள்ளவளாய் இருப்பாள்.
3. எட்டாம் நாளிலே குழந்தை விருத்தசேதனம் செய்யப்படும்.
4. அவளோ முப்பத்து மூன்று நாள் வரை தன் இரத்தச் சுத்திகரிப்பு நிலையில் இருந்து, சுத்திகர நாட்கள் நிறைவு பெறும்வரை யாதொரு பொருளைத் தொடாமலும், பரிசுத்த இடத்துக்குள் புகாமலும் இருக்கக்கடவாள்.
5. பெண்பிள்ளையைப் பெற்றாளாயின், மாதவிடாய் முறைமைப்படி இரண்டு வாரம் அசுத்தமுள்ளவளாய் இருந்து, தன் இரத்தச் சுத்திகரிப்பு நிலையிலே அறுபத்தாறு நாள் வரை இருக்கக்கடவாள்.
6. அவள் ஆண்பிள்ளையை அல்லது பெண்பிள்ளையைப் பெற்றிருந்தாலும், தன்னுடைய சுத்திகர நாட்கள் முடிவு பெற்ற பின் அவள் ஒருவயதான ஆட்டுக்குட்டியைத் தகனப் பலியாகவும், ஒரு புறாக்குஞ்சையோ காட்டுப்புறாவையோ பாவ நிவாரணப் பலியாகவும் சாட்சியக் கூடார வாயிலுக்குக் கொணர்ந்து குருவிடம் ஒப்புவிப்பாள்.
7. அவர் அவற்றை ஆண்டவர் திருமுன் ஒப்புக்கொடுத்து அவளுக்காக மன்றாட, அவள் தன் இரத்தப்பெருக்கின் தீட்டு நீங்கிச் சுத்தமடைவாள். ஆண் பிள்ளையை அல்லது பெண் பிள்ளையைப் பெற்றவளைக் குறித்த சட்டம் இதுவே.
8. ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்கு வசதி இல்லாதிருந்தால் இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையோ கொண்டுவந்து ஒன்றைத் தகனப் பலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணப் பலியாகவும் ஒப்புக்கொடுப்பாள். குரு அவளுக்காக மன்றாட அவள் அவ்வாறே சுத்தமாவாள் என்று திருவுளம்பற்றினார்.