1. அந்நாளில் தெபோராவும் அபினேயன் மகன் பாராக்கும் பாடின பாடலாவது:
2. இஸ்ராயேல் மக்களுக்காக உங்கள் உயிரையே முழுமனத்தோடு கையளித்தவர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்.
3. மன்னர்களே, கேளுங்கள்; மக்கட்தலைவர்களே, செவி கொடுங்கள்: நானே ஆண்டவரைப் புகழ்வேன்; இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளைப் போற்றுவேன்.
4. ஆண்டவரே, நீர் செயீரினின்று புறப்பட்டு, ஏதோம் நாட்டைக் கடந்த போது நிலம் அதிர்ந்தது; விண்ணும் மேகங்களும் நீரைச் சொரிந்தன.
5. ஆண்டவர் முன்னிலையில் மலைகள் இளகின. இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளைக் கண்டு சீனாய் கூட இளகிற்று.
6. ஆனாத் புதல்வன் சாம்காரின் காலத்திலும் சாகேல் காலத்திலும் பாதைகள் ஆள் நடமாற்றமின்றிக் கிடந்தன. அதில் வழி நடந்தவரோ வேறு வழிகளில் சென்றனர்.
7. இஸ்ராயேலுக்குத் தாயாகத் தெபோரா எழும் வரை, இருந்த சிலரும் வாளா இருந்தனர்.
8. புதுப் போர்களை ஆண்டவர் தேர்ந்துகொண்டார், எதிரிகளின் கோட்டை வாயில்களைத் தகர்த்தெறிந்தார். ஆனால் இஸ்ராயேலின் நாற்பதினாயிரம் படைவீரரிடம் கேடயமோ ஈட்டியோ காணப்படவில்லை.
9. என் இதயமோ இஸ்ராயேலின் தலைவர்களுக்கே அன்பு செய்கின்றது. உங்களையே ஆபத்துக்கு விரும்பிக் கையளித்தோரே ஆண்டவரைப் புகழுங்கள்.
10. கொழுத்த கழுதைகள் மேல் சவாரி செய்வோரே, நீதி மன்றத்தில் அமர்வோரே, வழிப் பயணிகளே அவரைப் போற்றுவீர்.
11. தேர்கள் மோதியுடைந்து எதிரியின் படைகள் நசுக்கப்பட்ட இடங்களில், ஆண்டவருடைய நீதியும் இஸ்ராயேல் வீரர் மேல் அவருக்குள்ள கருணையும் பறைசாற்றப்படும். அப்போது ஆண்டவரின் மக்கள் வாயில்களுக்குச் சென்று அரசைக் கைப்பற்றினர்.
12. எழுந்திரு, தெபோரா, எழுந்திரு; எழுந்து பாமாலை பாடு. பாராக், எழுந்திரு; அபினோயனின் மகனே, கைதிகளை நீயே கொண்டு போ.
13. எஞ்சிய மக்கள் காப்பாற்றப்பட்டனர். ஆண்டவரே வலியோர் பக்கம் நின்று போர் புரிந்தார்.
14. எபிராயிமின் வழிவந்தோரைக் கொண்டு அவர் அமலேக்கை முறியடித்தார். பிறகு பெஞ்சமினரைக் கொண்டு ஓ அமலேக்கே, உன் மக்களை வென்றார். மாக்கீர், சாபுலேனிலிருந்து தலைவர்கள் புறப்பட்டுப் படையைப் போர்க்களம் நடத்திச் சென்றனர்.
15. இசாக்காரின் படைத்தலைவர்கள் தெபோராவோடிருந்தனர்; படுகுழியில் விழுவது போல் ஆபத்தைத் தேடின பாராக்கைப் பின் தொடர்ந்தனர். ஆனால் ரூபனின் பிரிவினையால் பெருமக்களிடையே பிளவு உண்டானது.
16. மந்தைகளின் அலறலைக் கேட்பதற்காகவா ஈரெல்லைகள் நடுவில் வாழ்கின்றாய்? ரூபனின் பிரிவினையால் பெருமக்களிடையே பிளவு உண்டானது.
17. காலாத் யோர்தான் நதிக்கப்பால் வீணாய்க் காலம் கழித்தான். தான் கப்பல்களில் தன் நேரத்தைச் செலவழித்தான். ஆசேரோ கடற்கரை ஓரங்களில் வாழ்ந்து துறைமுகங்களில் தங்கியிருந்தான்.
18. சாபுலோனும் நெப்தலியும் மெரோமே நாட்டில் தம்மைச் சாவுக்குக் கையளித்தனர்.
19. அரசர்கள் வந்து போரிட்டனர்,. கானானைய அரசர்கள் மாகெதோ நீர்த்துறை அருகே தானாக்கில் போரிட்டனர். ஆனால் அவர்கள் எதையும் கொள்ளையடிக்கவில்லை.
20. ஏனெனில் வானத்தினின்று அவர்களுக்கு எதிராய்ப் போர் செய்யப்பட்டது, விண்மீன்கள் தத்தம் வரிசையிலும் ஓட்டத்திலும் நின்று சிசாராவை எதிர்த்தன.
21. சிசோன் நதி அவர்களுடைய சவங்களை அடித்துச் சென்றது; கதுமிம் நதியும் சிசோன் நதியும் அவ்வாறே செய்தன. என் ஆன்மாவே, வலியோரை மிதித்துத் தள்ளு.
22. அப்பொழுது எதிரிகளில் வலுவுள்ளவர்கள் ஓடிய வேகத்தினாலும், பள்ளங்களில் பாய்ந்த விரைவாலும், அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் பிளந்து போயின.
23. ஆண்டவரின் தூதர், 'மேரோஸ் நாட்டைச் சபியுங்கள், அந்நாட்டுக் குடிகளைச் சபியுங்கள்; ஏனெனில், அவர்கள் ஆண்டவருடைய மக்களுக்கு உதவிசெய்யவும் அவர் வீரருக்கு துணைபுரியவும் வரவில்லை' என்றார்.
24. பெண்களில் சினேயனான ஆபேரின் மனைவி சாகேல் பேறு பெற்றவள். அவள் தன் கூடாரத்தில் ஆசீர்வதிக்கப்படுவாளாக.
25. அவள் தண்ணீர் கேட்டவனுக்குப் பாலைக் கொடுத்தாள்; மக்கட் தலைவர்கள் உண்ணும் கோப்பையில் தயிர் கொணர்ந்தாள்.
26. இடக்கையில் ஆணியைத் தாங்கி, வலக்கையால் தொழிலாளியின் சுத்தியலை ஓங்கிச் சிசாராவின் தலையில் ஆணியிறங்குமிடம் அறிந்து கன்னப் பொட்டில் அடித்தாள்.
27. அவன் அவளது காலடியில் வீழ்ந்தான், வலுவிழந்தான், இறந்தான். அவளுடைய கால்கள் முன்பாக உருண்டு புரண்டு உயிரிழந்து இரங்கத்தக்க நிலையில் கிடந்தான்.
28. அவன் தாய் அறைக்குள் நின்று சன்னல் வழியே பார்த்துக் கொண்டு, 'அவனது தேர் இன்னும் திரும்ப வராதது ஏன்? அவன் குதிரைகள் இன்னும் வராதது ஏன்? என்று ஓலமிட்டாள்.
29. அப்போது அவன் மனைவியருள் எல்லாம், அறிவில் சிறந்தவள் தன் மாமியை நோக்கி,
30. கொள்ளையடித்த பொருட்களை ஒரு வேளை இப்போது பங்கிட்டுக் கொண்டிருப்பார்; தமக்கெனப் பேரழகி ஒருத்தியைத் தேடிக் கொண்டிருக்கக் கூடும், பல வண்ண ஆடைகள் சிசாராவுக்குக் கொடுக்கப்படலாம். தன்னை அழகு செய்யப் பலவித அணிகலன்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கலாம்' என்று பதில் உரைத்தாள்.
31. ஆண்டவரே உம் எதிரிகள் யாவரும் இப்படி அழியட்டும். உமக்கு அன்பு செய்வோரோ இளஞாயிறு போல் ஒளி வீசட்டும்." (32) பிறகு நாற்பது ஆண்டுகள் நாடு அமைதியுற்றிருந்தது.