1. பின்பு சாம்சன் காஜாம் நகருக்குப் போய் அங்கு ஒரு விலைமகளைக் கண்டு அவள் வீட்டிற்குள் நுழைந்தான்.
2. சாம்சன் நகருக்குள் நுழைந்தான் என்ற செய்தி உடனே பரவினது. பிலிஸ்தியர் அதைக் கேள்வியுற்று, அவனை வளைத்துப் பிடிக்க நகர் வாயில்களில் காவலரை நிறுத்தினர். இரவு முழுவதும் சத்தம் செய்யாது, பொழுது விடியும் நேரத்தில் சாம்சன் வெளியே வரும் போது, அவனைக் கொல்லக் காத்திருந்தனர்.
3. நடுநிசிவரை சாம்சன் தூங்கினான். பிறகு எழுந்து நகர வாயிலின் இரு கதவுகளையும் அவற்றின் நிலைகளையும் தாழ்ப்பாழ்களையும் பிடுங்கித் தன் தோள்மேல் வைத்துக் கொண்டு எபிரோனுக்கு எதிரேயுள்ள மலையுச்சிக்கு அவற்றைத் தூக்கிச் சென்றான்.
4. அதன் பிறகு அவன் சோரெக் பள்ளத்தாக்கில் வாழ்ந்து வந்த தாலிலா என்ற ஒருத்தியைக் காதலித்தான்.
5. பிலிஸ்தியர்களின் தலைவர்கள் அவளிடம் வந்து, அவளைப் பார்த்து, "நீ அவனிடம் நயந்து பேசி, இத்துணை வலிமை அவனுக்கு எங்கிருந்து வருகிறது என்றும், நாங்கள் எவ்விதமாய் அவனை மேற்கொண்டு கட்டித் துன்புறுத்தலாம் என்றும் அறிந்துகொள்; நீ இப்படிச் செய்தால் நாங்கள் ஒவ்வொருவரும் உனக்கு ஆயிரத்தி நூறு வெள்ளிக் காசுகளைக் கொடுப்போம்" என்றனர்.
6. அவ்வாறே தாலிலா சாம்சனைப் பார்த்து, "உனக்கு இத்துணை பெரிய வலிமை எங்கிருந்து வருகிறது என்றும், கட்டை அறுக்க உன்னை வலுவற்றவன் ஆக்கக் கூடியது என்ன என்றும் எனக்குக் கூற உன்னை மன்றாடுகிறேன்" என்றாள்.
7. அதற்குச் சாம்சன், "உலராத பச்சையான ஏழு அகணி நார்க் கயிறுகளால் என்னைக் கட்டினால் பிற மனிதரைப்போல் வலிமையற்றவன் ஆவேன்" என்றான்.
8. அவன் சொன்னபடி பிலிஸ்தியத் தலைவர்கள் ஏழு கயிறுகளை அவளிடம் கொடுத்தனர். தாலிலா அவற்றால் அவனை கட்டினாள்.
9. பக்கத்து அறையில் பிலிஸ்தியர் ஒளிந்திருந்தனர். தாலிலா சாம்சனை நோக்கி, "சாம்சன், இதோ பிலிஸ்தியர் உன்மேல் பாய இருக்கின்றனர்" என்றாள். அப்போது பழுதான சணல் நூலிலே நெருப்புப் பட்டால் இற்றுப் போவது போல், அவன் தன் கயிறுகளை அறுத்துப் போட்டான். அவனது வலிமை எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.
10. தாலிலா அவனை நோக்கி, "நீ என்னைக் கேலி செய்து பொய் சொன்னாய்; உன்னை எதனால் கட்டலாம் என்று எனக்குக் கூறு" என்றாள்.
11. அதற்கு அவன், "ஒரு வேலைக்கும் பயன்படுத்தப்படாத புதுக் கயிறுகளால் என்னைக் கட்டினால் நான் வலிமையற்றுப் பிற மனிதரைப்போல் ஆவேன்" என்றான்.
12. மீண்டும் தாலிலா அவ்வாறே அவனைக் கட்டி, "சாம்சன், பிலிஸ்தியர் அறைக்குள் ஒளிந்திருந்து, இதோ உன்னைப் பிடிக்க வருகின்றனர்" என்று கூவினாள். அவனோ புடவை நூலை அறுப்பது போல் அக்கயிறுகளை அறுத்துப் போட்டான்.
13. மீண்டும் தாலிலா அவனை நோக்கி, "எதுவரை என்னை நீ ஏமாற்றிப் பொய் சொல்வாய்? உன்னை எதனால் கட்டலாம் என்று சொல்" என்றாள். அதற்கு அவன், "என் தலை மயிர்களில் ஏழு சடைகளை எடுத்து நூலோடு பின்னி ஆணியால் தரையில் அடித்தால் நான் வலிமையற்றுப் போவேன்" என்றான்.
14. தாலிலா அவ்வாறே செய்து, "சாம்சன், இதோ, பிலிஸ்தியர் உன் மேல் பாய இருக்கின்றனர்" என்றாள். அவனோ தூக்கத்தினின்று எழுந்து மயிரோடும் நூலோடும் ஆணியைப் பிடுங்கி விட்டான்.
15. ஆகையால் தாலிலா அவனை நோக்கி, "என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லாத போது நீ எனக்கு அன்பு செய்வதாகக் கூறுவது எப்படி? மும்முறை பொய் சொல்லி, மாபெரும் உன் வலிமை எங்கிருந்து வருகிறது என்று நீ கூறவேயில்லை" என்றாள்.
16. இப்படித் தாலிலா அவனைப் பல நாட்களாக அமைதியாய் இருக்க விடாது நச்சரித்து வந்ததால், அவன் மனம் தளர்வுற்று இறப்பு வரை சோர்வுற்றான்.
17. அப்போது அவன் அவளை நோக்கி, "சவரக்கத்தி இது வரை என் தலை மேல் பட்டதே இல்லை. ஏனெனில் நான் ஒரு நாசரேயன். அதாவது என் தாயின் வயிற்றில் தோன்றியது முதல் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டேன்; என் தலை சிரைக்கப்பட்டால், என் வலிமை எல்லாம் போய் ஆற்றல் இழந்து பிற மனிதரைப் போல் ஆவேன்" என்று சொல்லி உண்மையை வெளிப்படுத்தினான்.
18. அவன் தன் உள்ளத்தைத் திறந்து வெளிப்படுத்தினதைத் தாலிலா கண்டு, பிலிஸ்தியரின் தலைவர்களுக்கு ஆள், அனுப்பி, "இப்போது அவன் எனக்குத் தன் உள்ளத்தைத் திறந்து கூறின படியால், நீங்கள் இன்னொரு முறை வாருங்கள்" என்று சொன்னாள். அவர்கள் தாம் கொடுப்பதாகக் கூறின பணத்தைத் தம்முடன் எடுத்துக் கொண்டு அவளிடம் வந்தனர்.
19. அப்போது தாலிலா சாம்சனின் தலை அவளது மார்பிலே சாய்ந்திருக்க அவனைத் தன் மடியிலே தூங்க வைத்தாள். அவள் அழைத்திருந்த ஓர் அம்பட்டன் வந்து அவனது தலைமயிரின் ஏழு சடைகளையும் சிரைத்தான். சிரைத்ததும் வலுவிழந்த சாம்சனைத் தன்னை விட்டு நீங்குமாறு தாலிலா அவனைத் தள்ளத் தொடங்கினாள்.
20. அவனைத் தட்டி எழுப்பி, "சாம்சன், இதோ, பிலிஸ்தியர் வருகின்றனர்" என்றாள். அவன் விழித்தெழுந்து ஆண்டவர் தன்னை விட்டு அகன்று விட்டதை அறியாதவனாய், "நான் முன்பு செய்தது போல் வெளியேறித் தப்பித்துக் கொள்வேன்" என்று தனக்குள் கூறிக் கொண்டான்.
21. ஆனால் பிலிஸ்தியர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, சங்கலிகளால் அவனைக் கட்டி, காஜாமுக்குக் கொண்டு போய்ச் சிறையில் அடைத்துச் செக்கிழுக்கச் செய்தனர்.
22. இதற்குள் அவனது தலைமயிர் முளைக்கத் தொடங்கினது.
23. பிலிஸ்தியரின் மக்கட் தலைவர்களோ, "நம் எதிரி சாம்சனை நம் தெய்வம் நம் கைகளில் ஒப்படைத்தார்" என்று கூறிக் கொண்டு தம் தெய்வமான தாக்கோனுக்கு மாபலிகளைச் செலுத்தவும், விருந்துண்டு களிக்கவும் ஒன்று கூடினர்.
24. இதைக் கண்ட மக்களும், "நம் நாட்டை அழித்து நம்மில் பலரைக் கொன்ற நம் எதிரியை நம் தெய்வம் நம் கைகளில் ஒப்படைத்தார்" என்று அத்தெய்வத்தை வாழ்த்திப் போற்றினர்.
25. இப்படி அவர்கள் மாவிருந்துண்டு களித்திருக்கையில், அவர்கள் முன்னிலையில் சாம்சன் வேடிக்கை காட்டும்படி அவனைக் கொண்டு வரக் கட்டளையிட்டனர். அவ்வாறே சாம்சன் சிறையிலிருந்து கொண்டு வரப்பட்டான். அவனும் அவர்கள் முன்பாக வேடிக்கை காட்டினான். பிறகு அவனை இரு தூண்களுக்கு நடுவே நிறுத்தினர்.
26. அப்போது சாம்சன் தனக்கு வழிகாட்டி வந்த சிறுவனை நோக்கி, "வீட்டைத் தாங்குகிற தூண்களின் மேல் நான் சாய்ந்து சற்று இளைப்பாறும்படி நான் அவற்றைத் தொட வை" என்றான்.
27. அவ்வீடு ஆண் பெண்களால் நிறைந்திருந்தது; பிலிஸ்தியர்களின் மக்கட் தலைவர்கள் அனைவரும் அங்கு இருந்தார்கள். அத்துடன் மெத்தையிலிருந்து சாம்சன் ஆடுவதைப் பார்க்க ஆணும் பெண்ணுமாக ஏறக்குறைய மூவாயிரம் பேர் அங்கு இருந்தனர்.
28. அவனோ ஆண்டவரின் பெயரைச் சொல்லி, "என் ஆண்டவராகிய கடவுளே, என்னை நினைவுகூரும். இதோ என் இரு கண்களைப் பிடுங்கினவர்களையும், என் எதிரிகளையும் பழிங்கினவர்களையும், என் எதிரிகளையும் பழிவாங்கும்படி இந்த ஒரு முறை மட்டும் முன்பிருந்த வலிமையை எனக்குத் தாரும்" என்று வேண்டினான்.
29. பின், அவ்வீட்டைத் தாங்கின இரு தூண்களை வலக்கையாலும் இடக்கையாலும் பிடித்துக்கொண்டு,
30. பிலிஸ்தியரோடு நானும் சாகக்கடவேன்" என்று கூறித் தூண்களை வன்மையுடன் அசைக்கவே, வீடு இடிந்து மக்கட் தலைவர்கள் மேலும், அங்கு இருந்த மற்றவர்மேலும் விழுந்தது. இவ்வாறு சாம்சன் வாழ்ந்த காலத்தில் அவனால் கொல்லப்பட்டவரை விட, அவன் சாகும் போது கொல்லப்பட்டவரே அதிகம்.
31. பிறகு அவன் சகோதரரும் உறவினரும் வந்து அவன் உடலை எடுத்துச் சென்று சாரவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவழியிலே அவன் தந்தை மனுவேயின் கல்லறையில் அவனைப் புதைத்தார்கள். அவன் இஸ்ராயேலுக்கு இருபது ஆண்டுகள் நீதி வழங்கினான்.