1. இயேசுவோ ஒலிவமலைக்குச் சென்றார்.
2. விடியற்காலையில் அவர் கோயிலுக்கு வர, மக்கள் எல்லாரும் அவரிடம் வந்தார்கள். அவர் அமர்ந்து, அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
3. விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தியை மறைநூல் வல்லுநரும் பரிசேயரும் கொண்டுவந்து நடுவில் நிறுத்தி,
4. "போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டாள்.
5. இப்படிப்பட்டவர்களைக் கல்லாலெறிந்து கொல்லவேண்டுமென்பது மோயீசன் நமக்குக் கொடுத்த சட்டம். நீர் என்ன சொல்லுகிறீர் ?" என்றனர்.
6. அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது கண்டுபிடிக்கும்படி, அவரைச் சோதிக்க இப்படிக கேட்டனர். இயேசுவோ குனிந்து, விரலாலே தரையில் எழுதத்தொடங்கினார்.
7. அவர்கள் அந்தக் கேள்வியைத் திரும்பத்திரும்பக் கேட்டதால், அவர் நிமிர்ந்து பார்த்து, "உங்களுள் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்" என்றார்.
8. மீண்டும் குனிந்து தரையில் எழுதலானார்.
9. அவர் சொன்னதைக் கேட்டதும் முதியவர் தொடங்கி ஒருவர்பின் ஒருவராக அவர்கள் போய்விட்டார்கள். கடைசியில் இயேசுமட்டும் இருந்தார்; அப்பெண்ணோ அந்த இடத்திலேயே நின்றுகொண்டிருந்தாள்.
10. அவர் நிமிர்ந்துபார்த்து, "மாதே, எங்கே அவர்கள் ? உனக்கு எவரும் தீர்ப்பிடவில்லையா ?" என்று கேட்டார்.
11. அவளோ, "ஒருவரும் தீர்ப்பிடவில்லை, ஆண்டவரே" என, இயேசு, "நானும் தீர்ப்பிடேன். இனிமேல் பாவஞ்செய்யாதே, போ" என்றார்.
12. இதற்குப்பின் இயேசு மக்களைப்பார்த்துக் கூறினார்: "நானே உலகின் ஒளி; என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான். உயிரின் ஒளியைக் கொண்டிருப்பான்."
13. பரிசேயரோ அவரிடம், "உம்மைப்பற்றி நீரே சாட்சியம் கூறுகின்றீர்; உம்முடைய சாட்சியம் செல்லாது" என்றனர்.
14. இயேசு மறுமொழியாகச் சொன்னதாவது: "என்னைப்பற்றி நானே சாட்சியம் கூறினும் என் சாட்சியம் செல்லும். ஏனெனில், நான் எங்கிருந்து வந்தேன், எங்கே செல்கிறேன் என்று எனக்குத் தெரியும். நான் எங்கிருந்து வருகிறேன் என்றோ எங்கே செல்கிறேன் என்றோ உங்களுக்குத் தெரியாது.
15. நீங்கள் உலகுக்கு ஏற்றவாறு தீர்ப்பிடுகிறீர்கள்; நானோ எவனுக்கும் தீர்ப்பிடுவதில்லை.
16. அப்படி நான் தீர்ப்பிட்டாலும், என் தீர்ப்பு செல்லும். ஏனெனில், தீர்ப்பிடுவதில் நான் தனியாயில்லை, என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார்.
17. இருவருடைய சாட்சியம் செல்லும் என்று உங்கள் சட்டத்திலே எழுதியுள்ளது அன்றோ ?
18. என்னைப்பற்றிச் சாட்சியம் நானும் கூறுகிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் கூறுகிறார்."
19. அவர்களோ, "உம் தந்தை எங்கே ?" என்று கேட்க, இயேசு மறுமொழியாகச் சொன்னார்: "நீங்கள் என்னையும் அறிவீர்கள், என் தந்தையையும் அறிவீர்கள். என்னை நீங்கள் அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள்."
20. இயேசு கோயிலில் போதிக்கையில், காணிக்கையறை அருகில் இப்படிக் கூறினார். அவருடைய நேரம் இன்னும் வராததால், எவனும் அவரைப் பிடிக்கவில்லை.
21. இயேசு மீண்டும் அவர்களை நோக்கிக் கூறினார்: "நான் செல்கிறேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனால், உங்கள் பாவத்தில் மடிவீர்கள். நான் செல்லுமிடத்திற்கு உங்களால் வரமுடியாது."
22. யூதர்களோ, " ' நான் செல்லுமிடத்திற்கு உங்களால் வர முடியாது ' என்று சொல்லுகிறானே, இவன் என்ன, தற்கொலை செய்து கொள்ளப்போகிறானோ ?" என்றார்கள்.
23. அவரோ அவர்களை நோக்கிக் கூறினார்: "நீங்கள் மண்ணைச் சார்ந்தவர்கள்; நானோ விண்ணைச் சார்ந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள்; நானோ இவ்வுலகைச் சார்ந்தவனல்லேன்.
24. ஆகையால்தான், உங்கள் பாவங்களிலே மடிவீர்கள் என்று நான் கூறினேன். நானே இருக்கிறேன் என்று நீங்கள் விசுவசியாவிடில், உங்கள் பாவங்களிலே மடிவீர்கள்."
25. அவர்களோ, "நீர் யார் ?" என்று வினவ, இயேசு கூறினார்: "நான் யாரென்று உங்களுக்குத் தொடக்கமுதல் சொல்லிவந்தேனோ, அவர்தாம் நான்.
26. உங்களைப்பற்றிப் பேசவும் தீர்ப்பிடவும் பல காரியங்கள் உள்ளன; ஆனால், என்னை அனுப்பியவர் உண்மையானவர்; நான் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகிற்கு எடுத்துச்சொல்லுகிறேன்."
27. இப்படிச் சொன்னதில் அவர் தம் தந்தையைக் குறிப்பிட்டார் என்று அவர்கள் உணரவில்லை.
28. ஆகவே இயேசு அவர்களை நோக்கிக் கூறினார்: "மனுமகனை நீங்கள் உயர்த்திய பின்பு, நானே இருக்கிறேன், நானாகவே எதையும் செய்வதில்லை; என் தந்தை எனக்குக் கற்பித்ததையே நான் எடுத்துச்சொல்லுகிறேன் என்று அறிந்து கொள்வீர்கள்.
29. என்னை அனுப்பினவர் என்னோடு இருக்கிறார்; அவர் என்னைத் தனியே விட்டுவிடவில்லை; ஏனெனில் நான் அவருக்கு உகந்ததையே எப்பொழுதும் செய்கிறேன்."
30. அவர் இவற்றைச் சொன்னபோது, பலர் அவரில் விசுவாசங்கொண்டனர்.
31. பின்னர், தம்மை விசுவசித்த யூதர்களுக்கு இயேசு கூறினார்: "நீங்கள் என் வார்த்தையில் நிலைத்திருப்பீர்களாகில், உண்மையாகவே என் சீடராயிருப்பீர்கள்.
32. உண்மையை அறிவீர்கள்; அவ்வுண்மையும் உங்களுக்கு விடுதலையளிக்கும்."
33. அவர்கள், "ஆபிரகாமின் வழிவந்தவர்கள் நாங்கள்; ஒருபோதும் யாருக்கும் அடிமைகளாயிருந்ததில்லை; அப்படியிருக்க, 'நீங்கள் விடுதலை பெறுவீர்கள்' என்று நீர் சொல்வதெப்படி?" என்று கேட்டனர்.
34. இயேசுவோ மறுமொழியாகக் கூறினார்: "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: பாவம் செய்கிற எவனும் பாவத்திற்கு அடிமை.
35. வீட்டில் அடிமைக்கு நிலையான இடமில்லை; மகனுக்கோ எப்பொழுதும் இடமுண்டு.
36. எனவே, மகன் உங்களுக்கு விடுதலையளித்தால்தான், உங்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.
37. நீங்கள் ஆபிரகாமின் வழிவந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும்; ஆயினும், என் வார்த்தை உங்களில் இடம்பெறாததால், நீங்கள் என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள்.
38. நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்லுகிறேன்; நீங்களோ உங்கள் தந்தையிடம் கேட்டறிந்ததைச் செய்கிறீர்கள்."
39. அப்பொழுது அவர்கள், "ஆபிரகாமே எங்கள் தந்தை" என்றார்கள். அவர்களுக்கு இயேசு கூறினார்: "நீங்கள் ஆபிரகாமின் மக்களாயிருந்தால், ஆபிரகாமின் செயல்களைச் செய்வீர்கள்.
40. ஆனால், கடவுள் எனக்குக் கூறிய உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை இப்பொழுது கொல்லத் தேடுகிறீர்கள்; ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.
41. நீங்கள் செய்துவருவதோ உங்கள் தந்தையின் செயல்கள்தாம்." அவர்கள், "நாங்கள் வேசித்தனத்தில் பிறந்தவர்கள் அல்ல. எங்களுக்கு ஒரே தந்தை உண்டு: கடவுளே அவர்" என்றனர்.
42. இயேசுவோ அவர்களை நோக்கிக் கூறினார்: "கடவுள் உங்கள் தந்தையாயிருப்பின் எனக்கு அன்பு செய்வீர்கள்; ஏனென்றால், நான் கடவுளிடமிருந்து புறப்பட்டு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவர்தாம் என்னை அனுப்பினார்.
43. நான் சொல்வதை ஏன் நீங்கள் கண்டுணர்வதில்லை? நான் சொல்வதை கேட்க உங்களால் முடியாமற்போவதால்தான்.
44. அலகையே உங்களுக்குத் தந்தை; உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்களுக்கு விருப்பம். ஆதிமுதல் அவன் ஒரு கொலைகாரன்: அவனிடம் உண்மையில்லாததால் அவன் உண்மையின்பால் நிலைத்துநிற்கவில்லை. அவன் பொய் சொல்லும்பொழுது தன்னுள் இருப்பதையே பேசுகிறான். ஏனெனில், அவன் பொய்யன், பொய்க்குத் தந்தை.
45. நான் உண்மையைக் கூறுவதால்தான் நீங்கள் என்னை விசுவசிப்பதில்லை.
46. என்னிடத்தில் பாவமுண்டென உங்களுள் யார் எண்பிக்கக்கூடும்? நான் உங்களுக்கு உண்மையைக் கூறினால், என்னை ஏன் விசுவசிப்பதில்லை?
47. கடவுளால் பிறந்தவன் அவருடைய சொல்லுக்குச் செவிமடுக்கிறான். நீங்களோ கடவுளால் பிறக்கவில்லை. ஆதலால் செவிமடுப்பதில்லை" என்றார்.
48. யூதர்களோ அவரைப் பார்த்து, "நீ சமாரியன், பேய்பிடித்தவன் என்று நாங்கள் சொன்னது சரிதானே?" என்றனர்.
49. இயேசுவோ, "நான் பேய்பிடித்தவன் அல்லேன் என் தந்தைக்கு நான் மதிப்பளிக்கிறேன். நீங்களோ என்னை அவமதிக்கிறீர்கள்.
50. நான் என் மகிமையைத் தேடுவதில்லை. அதை எனக்குத் தேடித்தருபவர் ஒருவர் இருக்கிறார், இதில் தீர்ப்பிடுகிறவர் அவரே.
51. உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஒருவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பானாகில் என்றுமே சாகான்" என்றார்.
52. எனவே யூதர்கள், "நீ பேய்பிடித்தவன் என்பது இப்பொழுது தெளிவாகிறது. ஆபிரகாம் இறந்தார், இறைவாக்கினர்களும் அவ்வாறே இறந்தனர். நீயோ, 'ஒருவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பானாகில் என்றுமே சாவுக்குள்ளாகமாட்டான்' என்று சொல்லுகிறாய்.
53. நம் தந்தை ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் இறந்தார். இறைவாக்கினர்களும் இறந்தனர். உன்னை யாரென நினைத்துக்கொள்கிறாய்?" என்று வினவினர்.
54. அதற்கு இயேசு, "நான் என்னையே மகிமைப்படுத்தினால், என் மகிமை வீண் மகிமை. என் தந்தையே என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரையே நீங்கள் நம் கடவுள்' என்று சொல்லுகிறீர்கள்.
55. எனினும், நீங்கள் அவரை அறியவில்லை, நானோ அவரை அறிவேன். அவரை நான் அறியேன் என்றால் உங்களைப்போல நானும் பொய்யனாவேன். ஆனால் நான் அவரை அறிவேன்; அவருடைய வார்த்தையையும் கடைப்பிடிக்கிறேன்.
56. உங்கள் தந்தை ஆபிரகாம் எனது நாளைக் காட்சியில் கண்டு களிகூர்ந்தார்; அந்நாளைக் கண்டார்; பெருமகிழ்ச்சி கொண்டார்" என்றார்.
57. யூதர்கள், "உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைப் பார்த்திருக்கிறாயோ?" என்றனர்.
58. இயேசுவோ அவர்களிடம், "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆபிரகாம் உண்டாவதற்கு முன்பே நான் இருக்கிறேன்" என்றார்.
59. இதைக் கேட்டு அவர்கள் அவர்மேல் எறியக் கல் எடுத்தனர். இயேசுவோ மறைவாக நழுவிக் கோயிலிலிருந்து வெளியேறினார்.