1. இப்படிப் பேசியபின், இயேசு வானத்தை அண்ணாந்துபார்த்து மன்றாடியதாவது: "தந்தாய், நேரம் வந்துவிட்டது: உம் மகன் உம்மை மகிமைப்படுத்துமாறு நீர் உம் மகனை மகிமைப்படுத்தும்.
2. ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் எல்லாருக்கும் அவர் முடிவில்லா வாழ்வைக் கொடுக்கும்பொருட்டு, மனுமக்கள் அனைவர்மீதும் நீர் அவருக்கு அதிகாரம் அளித்திருக்கிறீர்.
3. முடிவில்லா வாழ்வு என்பது: உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே.
4. நீர் எனக்குச் செய்யக் கொடுத்த பணியைச் செய்து முடித்து, நான் உம்மை உலகில் மகிமைப்படுத்தினேன்.
5. தந்தாய், உலகம் உண்டாகுமுன்பு, உம்மிடம் எனக்கிருந்த அதே மகிமையை அளித்து, இப்பொழுது என்னை உம்முன் மகிமைப்படுத்தும்.
6. உலகிலிருந்து பிரித்து நீர் எனக்கு அளித்த மக்களுக்கு உமது பெயரை வெளிப்படுத்தினேன். அவர்கள் உமக்கு உரியவர்களாயிருந்தார்கள்; அவர்களை என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உமது வார்த்தையைக் கேட்டார்கள்.
7. நீர் எனக்குத் தந்ததெல்லாம் உம்மிடமிருந்தே வந்ததென்பது இப்பொழுது அவர்களுக்குத் தெரியும்.
8. ஏனெனில், நீர் எனக்கு அறிவித்ததையே நான் அவர்களுக்கு எடுத்துச்சொன்னேன்; அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையாகவே அறிந்துகொண்டார்கள்; நீர் என்னை அனுப்பினீர் என்பதையும் விசுவசித்தார்கள்.
9. அவர்களுக்காக நான் உம்மை மன்றாடுகிறேன்; நான் மன்றாடுவது உலகிற்காக அன்று, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே. ஏனெனில், அவர்கள் உமக்குரியவர்கள்.
10. என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்களால் நான் மகிமை பெற்றிருக்கிறேன்.
11. இனி, நான் உலகில் இரேன்; அவர்களோ உலகில் இருக்கின்றார்கள்; நான் உம்மிடம் வருகிறேன். பரிசுத்த தந்தாய், நாம் ஒன்றாய் இருப்பதுபோல, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களும் ஒன்றாயிருக்கும்படி உமது பெயரால் அவர்களைக் காத்தருளும்.
12. நான் அவர்களோடு இருந்தபொழுது, அவர்களை உமது பெயரால் காத்து வந்தேன். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களைக் காப்பாற்றினேன். அவர்களுள் ஒருவனும் அழிவுறவில்லை. மறைநூல் நிறைவேறும்படி, அழிவுக்குரியவன்மட்டுமே அழிவுற்றான்.
13. இப்பொழுது உம்மிடம் வருகிறேன்; என் மகிழ்ச்சி அவர்கள் உள்ளத்தில் நிறைவேறும்படி, உலகிலிருக்கும்பொழுதே நான் இதைச் சொல்லுகிறேன்.
14. உமது வார்த்தையை அவர்களுக்கு அளித்தேன், உலகமோ அவர்களை வெறுத்தது; ஏனெனில், நான் உலகைச் சார்ந்தவனாய் இராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்.
15. உலகிலிருந்து அவர்களை எடுத்துவிடும்படி நான் மன்றாடவில்லை, தீயவனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே உம்மை மன்றாடுகிறேன்.
16. நான் உலகைச் சார்ந்தவனாயிராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்.
17. உண்மையினால் அவர்களை அர்ச்சித்தருளும்; உமது வார்த்தையே உண்மை.
18. நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல நானும் அவர்களை உலகிற்கு அனுப்பினேன்.
19. அவர்கள் உண்மையினாலேயே அர்ச்சிக்கப்பெறும்படி அவர்களுக்காக என்னையே அர்ச்சனையாக்குகிறேன்.
20. இவர்களுக்காகமட்டும் நான் மன்றாடவில்லை; இவர்களுடைய வார்த்தையின்வழியாக என்னில் விசுவாசம் கொள்பவர்க்காகவும் மன்றாடுகிறேன்.
21. எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக. தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்; நீர் என்னை அனுப்பினீர் என்று இதனால் உலகம் விசுவசிக்கும்.
22. நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி, நீர் எனக்கு அளித்த மகிமையை நான் அவர்களுக்கு அளித்தேன்.
23. இவ்வாறு நான் அவர்களுள்ளும், நீர் என்னுள்ளும் இருப்பதால், அவர்களும் ஒருமைப்பாட்டின் நிறைவை எய்துவார்களாக; இங்ஙனம், நீர் என்னை அனுப்பினீர் என்றும், நீர் என்பால் அன்புகூர்ந்ததுபோல் அவர்கள்மீதும் அன்புகூர்ந்தீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும்.
24. தந்தாய், நானிருக்கும் இடத்திலே நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களும் என்னோடிருக்கும்படி விரும்புகிறேன். இதனால், உலகம் உண்டாகுமுன்பு நீர் என்மேல் அன்பு வைத்து எனக்களித்த மகிமையை அவர்கள் காண்பார்கள்.
25. நீதியுள்ள தந்தாய், உலகம் உம்மை அறியவில்லை, நானோ உம்மை அறிவேன். நீர் என்னை அனுப்பினீர் என்று இவர்களும் அறிந்துகொண்டார்கள்.
26. நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்களுள் இருக்கவும், நானும் அவர்களுள் இருக்கவும் உமது பெயரை அவர்களுக்கு அறிவித்தேன், இன்னும் அறிவிப்பேன்."