1. அடுத்து யோபு பேசினார்; அவர் சொன்ன மறுமொழியாவது:
2. என் வேதனை சரியாக நிறுக்கப்படுமானால் நலமாயிருக்குமே! என் இடுக்கண்கள் யாவும் தராசிலிடப்படுமானால் நலம்!
3. கடற்கரை மணலினும் என் துயர் பளுவாயிருக்கும், ஆதலால் தான் என் சொற்கள் கடுமையாயின.
4. எல்லாம் வல்லவரின் அம்புகள் என்னுள் தைத்திருக்கின்றன. என் ஆவி அவற்றின் நஞ்சை உறிஞ்சுகிறது. கடவுள் தரும் நடுக்கங்கள் எனக்கெதிராய் அணிவகுத்து நிற்கின்றன.
5. புல் கிடைத்தால் காட்டுக் கழுதை கத்துமோ? தீனி முன் நிற்கிற எருது கதறுமோ?
6. சுவையற்றிருப்பதை உப்பின்றி உண்ணமுடியுமோ? முட்டையின் வெண் கருவில் மணமுண்டோ?
7. முன்பு நான் தொடவும் விரும்பாதவை நோயின் கொடுமையில் இப்பொழுது எனக்கு உணவாயின!
8. ஐயோ! என் மன்றாட்டு கேட்கப்படாதா! கடவுள் நான் வேண்டுவதைத் தரமாட்டாரா!
9. கடவுள் என்னை நசுக்கிப் போடுவதே என் கோரிக்கை, தம் கையால் என்னை அழிக்கவேண்டுமென்பதே என் ஆவல்.
10. பரிசுத்தருடைய கட்டளைகளை நான் மறுக்கவில்லை; இது ஒன்றே எனக்கு ஆறுதல் தருகிறது, கொடிய துன்பத்திலும் இதுவே என் மகிழ்ச்சி.
11. இன்னும் காத்திருக்க எனக்கிருக்கும் மன வலிமை எவ்வளவு? எனக்கு வரும் முடிவை நோக்கும் போது, நான் ஏன் பொறுமையுடன் இருக்க வேண்டும்?
12. என்னுடலின் வலிமை கற்களின் வலிமையோ? என் சதை என்ன வெண்கலமோ?
13. இதோ, எனக்கு வலுத்தரக்கூடியது எதுவும் என்னில் இல்லை, எவ்வகையான உதவியும் என்னைக் கைவிட்டு விட்டதே!
14. தன் நண்பனுக்கு இரக்கம் காட்டாத ஒருவன் எல்லாம் வல்லவரைப் பற்றிய அச்சத்தையே தவிர்க்கிறான்.
15. காட்டாற்றின் நிலையற்ற வெள்ளம் போலும் மலையருவி போலும் என் உடன்பிறந்தார் எனக்கு ஏமாற்றம் தந்தனர்.
16. பனிக்கட்டி உருகுவதால் வெள்ளம் பெருகும், உறைபனி கரைவதால் வெள்ளம் பொங்கி எழும்.
17. வெப்பக் காலத்திலோ அவை வற்றிப்போகும், வெயில் வந்ததும் அவை இருந்த இடம் தெரியாமல் போகும்.
18. வணிகக் கூட்டத்தார் அவற்றைத் தேடி வழியை விட்டு விலகுகின்றனர்; பாலைநிலைத்தில் அலைந்து மாண்டு போகின்றனர்.
19. தேமாவின் வணிகக் கூட்டத்தார் இவற்றைக் காண்கின்றனர், சாபாவின் வழிப்போக்கர் இவற்றை நம்புகின்றனர்.
20. நம்பி வருகிற அவர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள், அவ்விடம் வந்து கலங்கிப் போகிறார்கள்.
21. என் மட்டில் நீங்களும் அவ்வாறே இருக்கிறீர்கள், என் கொடிய வேதனையைக் கண்டு திகிலடைகிறீர்கள்.
22. எனக்கு நன்கொடை தாருங்கள்' என்றோ, 'உங்கள் செல்வத்திலிருந்து எனக்காகக் கையூட்டு கொடுங்கள்' என்றோ நான் கேட்டேனா?
23. அல்லது, 'எதிரியின் கையினின்று என்னை விடுவியுங்கள்' என்றோ, 'கொடியவர் கையினின்று என்னை மீட்டுவிடுங்கள்' என்றோ நான் சொன்னதுண்டா?
24. எனக்கு அறிவு புகட்டுங்கள், நான் போசாமல் கேட்கிறேன்; எவ்வகையில் தவறினேன் என்று எனக்கு உணர்த்துங்கள்.
25. நேர்மையான சொற்களின் ஆற்றல் தான் என்னே! ஆனால் உங்கள் கண்டன உரை எதை எண்பிக்கிறது?
26. வெறுஞ் சொற்களைக் கண்டனம் செய்ய எண்ணுகிறீர்களோ? நம்பிக்கையற்றவனின் சொற்கள் காற்றுடன் கலந்து விடுமே!
27. திக்கற்றவர்கள் மேல் நீங்கள் சீட்டுக்கூடப் போடுவீர்கள். உங்கள் நண்பனை விற்கத் தரகு பேசுவீர்கள்!
28. ஆனால், தயவுசெய்து என்னைக் கொஞ்சம் பாருங்கள்; உங்கள் முகத்துக்கெதிரில் நான் பொய் சொல்ல மாட்டேன்.
29. பொறுங்கள், அநியாயமாய் இராதீர்கள்; பொறுங்கள், இன்னும் நான் குற்றவாளியாகவில்லை.
30. என் பேச்சில் அக்கிரமம் காணப்படுவதில்லை, என் வாயிலிருந்து அறிவீனமான சொல் ஒலிப்பதில்லை.