1. யோபு தன்னை நீதிமான் என்று சாதித்துப் பேசுவதைக் கண்டு, அந்த மூன்று நண்பர்களும் வாதாடுவதை நிறுத்தி விட்டனர்.
2. அப்போது பூத்சி நகரத்தானும் ராமின் குலத்தானுமாகிய பாரக்கேலுடைய மகன் எலியூ என்பவன் சினங்கொண்டான். கடவுளுக்கு எதிராகத் தன்னை நீதிமான் என்று யோபு சாதித்துப் பேசினதால், எலியூ யோபின் மேல் சினங்கொண்டான்.
3. யோபின் மூன்று நண்பர்கள் மேலும் அவன் கோபங்கொண்டான். ஏனெனில் யோபு குற்றவாளி என்று தீர்ப்பிட்டார்களேயன்றி, அதற்குரிய காரணத்தை அவர்கள் காட்டவில்லை.
4. பேசிக் கொண்டிருந்தவர்கள் தன்னை விட வயதில் பெரியவர்களாதலால், யோபின் பேச்சு முடியும் வரை எலியூ காத்திருந்தான்.
5. ஆனால் அந்த மூவராலும் மறுமொழி சொல்ல இயலவில்லை என்பதைக் கண்ட எலியூ ஆத்திரமடைந்தான்.
6. ஆகவே, பூத்சி நகரத்தானாகிய பாரக்கேலின் மகன் எலியூ மறுமொழி சொல்லத் தொடங்கினான். "நான் வயதில் இளையவன், நீங்களோ வயதில் பெரியவர்கள்; ஆதலால் என் கருத்தை உங்களிடம் சொல்ல அஞ்சித் தயங்கிக் கொண்டிருந்தேன்.
7. 'முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும்' என்றிருந்தேன்.
8. ஆனால் கண்டறியும் ஆற்றலை மனிதனுக்குத் தருவது அவனுள் இருக்கும் ஆவியே- எல்லாம் வல்லவரின் மூச்சே.
9. வயதானவர் அனைவருமே ஞானிகள் என்று சொல்ல முடியாது, முதியோர் எல்லாருமே நீதியை உணர்ந்தவர்கள் என்பதில்லை.
10. ஆதலால் தான், நான் சொல்வதைக் கேளுங்கள் என்கிறேன்; என் அறிவை உங்களுக்குக் காட்டப் போகிறேன்.
11. இதோ, என்ன சொல்லலாம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்த போது, உங்கள் சொற்களைக் கேட்க நான் காத்திருந்தேன், உங்கள் ஞான வாக்குகளுக்குச் செவிமடுத்தேன்.
12. நீங்கள் சொல்லியவற்றை நான் கவனித்து வந்தேன்: இதோ, யோபுவுக்கு அவரது குற்றத்தை எண்பிக்கவோ அவர் சொற்களுக்கு மறுமொழி சொல்லவோ, உங்களுள் ஒருவருமிலர்.
13. நாங்கள் ஞானத்தைக் கண்டு பிடித்து விட்டோம், யோபுவை மேற்கொள்பவர் கடவுள்தான், மனிதல்லன்' என்று நீங்கள் சொன்னால் அது பொருந்தாது.
14. என்னை நோக்கி யோபு தன் சொற்களைப் பேசவில்லை, உங்கள் மறுமொழிகளைப் போல் நான் மறுமொழி சொல்லேன்.
15. அவர்கள் சிந்தை குலைந்தனர், மறுமொழி பேசுகிறதில்லை. பேச அவர்களுக்கு வார்த்தை வரவில்லை.
16. அவர்கள் பேசாதிருப்பதாலும், மறுமொழி சொல்லாமல் நிற்பதாலும், இன்னும் நான் காத்திருப்பேனோ?
17. நானும் எனது மறுமொழியைக் கூறுவேன், நானும் எனது கருத்தை வெளிப்படுத்துவேன்.
18. சொல்ல வேண்டியது என்னிடம் நிரம்ப உள்ளது, என்னுள்ளிருக்கும் ஆவி என்னை நெருக்கி உந்துகிறது.
19. இதோ, அடைபட்ட இரசம் போல் உள்ளது என் உள்ளம், புது இரசமடைத்த சித்தை போல் வெடிக்கப் பார்க்கிறது.
20. அமைதி கிடைக்க நான் பேசியே தீரவேண்டும், உதடுகளைத் திறந்து பதில் சொல்லியாக வேண்டும்.
21. ஆளுக்குத் தக்கபடி ஓரவஞ்சனையாய்ப் பேச மாட்டேன். எவனுக்கும் முகமன் கூறிப் புகழமாட்டேன்.
22. ஏனெனில் போலிப் புகழ்ச்சி பேச எனக்குத் தெரியாது, அப்படிச் செய்தால் என்னைப் படைத்தவர் விரைவில் என்னை அழித்து விடுவார்.