1. இப்பொழுதோ என்னிலும் இளையவர்கள் என்னைப் பழித்துக் காட்டி ஏளனம் செய்கிறார்களே, அவர்களுடைய பெற்றோரை என் கிடை நாய்களோடு ஒப்பிடவும் தகுதியற்றவர்கள் என்று முன்பு நான் எண்ணியிருந்தேன்.
2. அப்படிப்பட்டவர்களின் வலிமையால் எனக்கு என்ன நன்மை கிடைத்திருக்கக் கூடும்? அவர்கள் தான் வலிமையிழந்தவர்களாயிற்றே!
3. அவர்களோ உணவு பற்றாக்குறையாலும் பட்டினியாலும் நெருக்கப்பட்டு, வறண்ட பாலைநிலத்தில் அலைந்து, பாழாய்க்கிடக்கும் நிலத்தைச் சுரண்டி,
4. செடிகளையும் தழைகளையும் பிடுங்கித் தின்கிறார்கள், நாட்டுக் கிழங்குகளை உண்ணுகிறார்கள்.
5. மக்கள் நடுவிலிருந்து அவர்கள் விரட்டப்படுகிறார்கள், கள்ளரைக் கண்டு கூச்சலிடுவது போல் அவர்களைக் கண்டு மக்கள் கூச்சலிடுகிறார்கள்.
6. அவர்கள் காட்டாறுகளின் உடைப்புகளிலும், நிலத்தின் பள்ளங்களிலும், பாறையின் வெடிப்புகளிலும் வாழ்கிறார்கள்.
7. புதர்களின் நடுவில் கிடந்து புலம்புகிறார்கள், காஞ்சொறிச் செடிகளின் கீழே படுத்துக் கிடக்கிறார்கள்.
8. அவர்கள் மடையர்களின் பிள்ளைகள், கயவர்கள்; நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள்.
9. ஆனால் இப்பொழுது அவர்களுக்கு நான் வசைப்பாடலானேன், அவர்களுக்கு நான் பழிப்புரையானேன்.
10. அவர்கள் என்னை அருவருந்து அப்பால் விலகிப் போகிறார்கள், என்னைக் கண்டதும் என் முன் காறித் துப்பவும் தயங்குவதில்லை.
11. கடவுள் என் கட்டுகளை அவிழ்த்து, என்னைத் தாழ்த்தினதால், என் முன்னிலையில் அவர்கள் கடிவாளமற்ற குதிரைகளாயினர்.
12. கலகக்காரர்கள் என் வலப்பக்கத்தில் எழும்புகின்றனர், என்னை அவர்கள் நெட்டித் தள்ளுகின்றனர், என்னை அழிக்கும்படி வழிகளை வகுக்கின்றனர்.
13. என் வழிகளைக் கெடுக்கின்றனர், எனக்கு வரும் அழிவை விரைவு படுத்துகின்றனர், அவர்களைத் தடுப்பவன் எவனுமில்லை.
14. அகன்ற வெடிப்பின் வழியாய் வருவது போல் நுழைகின்றனர், இடிபாடுகளின் நடுவில் புரளுகின்றனர்.
15. திகில்கள் என்மேல் திருப்பப்படுகின்றன, காற்றில் அகப்பட்டது போல் என் உறுதி விரட்டப்படுகிறது, கார்மேகம் போல் என் வாழ்க்கை வளம் கடந்து போனது.
16. இப்பொழுது என் உயிர் என்னுள் சொட்டுச் சொட்டாய்ச் சிதறுகிறது, துன்பத்தின் நாட்கள் என்னைப் பற்றிக்கொண்டன.
17. இராப்பொழுதில் நோய் என் எலும்புகளைத் துளைக்கிறது, வேதனை ஓயாமல் என்னை அரித்துத் தின்கின்றது.
18. கெட்டியாய் என் ஆடைகளை அது பற்றிக்கொண்டது, கழுத்துப் பட்டை போல் என்னைச் சுற்றிக்கொண்டது.
19. கடவுள் என்னைச் சேற்றில் எறிந்து விட்டார், நான் புழுவும் சாம்பலும் போலானேன்.
20. உம்மை நோக்கிக் கூவுகிறேன், நீர் பதில் கொடுக்கிறதில்லை; நான் கெஞ்சி நிற்கிறேன், நீர் ஏறெடுத்தும் பார்க்கிறதில்லை.
21. என் மட்டில் நீர் கொடுமையுள்ளவராய் மாறினீர், உம் கையில் வல்லமையால் என்னைத் துன்புறுத்துகிறீர்.
22. என்னைத் தூக்கிக் காற்றில் பறக்க விடுகிறீர், புயலின் சீற்றத்தில் என்னை அலைக்கழிக்கிறீர்.
23. ஆம், என்னை நீர் சாவுக்கே இட்டுச் செல்கிறீர் என்று அறிவேன், வாழ்வோர் அனைவர்க்கும் குறிக்கப்பட்ட இடம் அதுவே.
24. ஆயினும் இடிபாடுகளின் நடுவிலும் ஒருவன் கையுயர்த்தி, அழிவின் நடுவில் உதவிக்காகக் கூவுகிறானன்றோ?
25. துன்புற்ற ஒருவனுக்காக நான் அழுததில்லையோ? ஏழைக்காக என்னுள்ளம் வருந்தவில்லையோ?
26. ஆனால், நான் நன்மை தேடிய போது, தீமையே வந்தது, ஒளியை எதிர்பார்த்த போது, இருளே கவ்வியது,
27. என் உள்ளம் கொதிக்கிறது, அமைதியில்லை; வேதனை நாட்கள் என்னை எதிர்கொண்டு வருகின்றன.
28. சோகமே வடிவாய்த் திரிகிறேன், ஆறுதலே இல்லை; சபை நடுவில் எழுந்து உதவிக்காகக் கதறுகிறேன்.
29. குள்ளநரிகளுக்கு உடன்பிறப்பானேன், தீக்கோழிகளுக்குத் தோழனாய் இருக்கிறேன்.
30. என் தோல் கறுப்பாகி, உரிந்து விழுகிறது; வெப்பத்தால் என் எலும்புகள் தீய்கின்றன.
31. எனது யாழோசை புலம்பலாய் மாறி விட்டது. எனது குழலிசை அழுகுரலைப் போல் ஆகிவிட்டது.