1. அதற்கு யோபு சொன்ன மறுமொழி வருமாறு:
2. என்னுடைய சொற்களைக் கவனமாய்க் கேளுங்கள், அந்த ஆறுதலையாவது எனக்குக் கொடுங்கள்.
3. பொறுத்துக் கொள்ளுங்கள், நான் பேசப் போகிறேன்; நான் பேசிய பின் நீங்கள் ஏளனம் செய்யலாம்.
4. நான் மனிதனைப் பற்றியா முறையிடுகிறேன்? பின்னர் ஏன் நான் மனக்கொதிப்படையக் கூடாது?
5. என்னைப் பாருங்கள், பார்த்துத் திடுக்கிடுங்கள்; உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்ளுங்கள்.
6. இதை நினைத்தாலே என் மனம் திடுக்கிட்டுக் கலங்குகிறது, என் உடலை நடுக்கம் பீடிக்கிறது.
7. பொல்லாதவர்கள் இன்னும் உயிரோடிருப்பது ஏன்? முதிர் வயது வரை வாழ்ந்து, ஆற்றலில் வல்லவர்களாவதேன்?
8. அவர்கள் முன்னிலையில் அவர்கள் பிள்ளைகள் நிலைத்திருக்கிறார்கள், அவர்கள் கண் முன் அவர்கள் சந்ததி உயர்ந்தோங்குகிறது.
9. அவர்களுடைய வீடுகள் அச்சத்திலிருந்து காக்கப்பட்டுள்ளன, கடவுளின் தண்டனைக் கோல் அவற்றின் மேல் விழவில்லை.
10. அவர்கள் எருது பொலிந்தால் வீணாய்ப் போகிறதில்லை; அவர்கள் பசு சினை சிதையாமல் கன்று ஈனுகிறது.
11. மந்தை போலத் தங்கள் சிறுவர்களை வெளியே அனுப்புகிறார்கள், அவர்களுடைய குழந்தைகள் துள்ளி விளையாடுகின்றனர்.
12. தம்புரு, சுரமண்டலம் இசைத்துப் பாடுகின்றனர், குழலோசை கேட்டு அகமகிழ்கின்றனர்.
13. வளமான வாழ்வில் தங்கள் நாட்களைக் கழிக்கின்றனர், அமைதியாய்ப் பாதாளத்தில் இறங்குகின்றனர்.
14. கடவுளை நோக்கி, 'எங்களை விட்டகலும், உம் வழிகளை அறிய நாங்கள் விரும்பவில்லை;
15. எல்லாம் வல்லவர்க்கு நாம் ஏன் ஊழியம் செய்ய வேண்டும்? அவரிடம் மன்றாடுவதால் நமக்குப் பயனென்ன?' என்றார்கள்.
16. இதோ, இன்ப வாழ்க்கை அவர்கள் கையில் தானே இருக்கிறது! அந்தத் தீயவர்களின் ஆலோசனை எனக்குத் தொலைவாயுள்ளது.
17. பொல்லாதவர்களின் விளக்கு எத்தனைமுறை அணைந்தது? இடுக்கண் யாதும் அவர்களுக்கு நேர்ந்ததுண்டோ? கடவுள் சினங்கொண்டு அவர்களுக்கு நோய்நொடி அனுப்பியதுண்டோ?
18. காற்றில் சிக்கிய வைக்கோல் போல அவர்கள் இருப்பதுண்டோ? புயல் வாரிச் செல்லும் பதர் போல அவர்கள் ஆவதுண்டோ?
19. தந்தையின் அக்கிரமத்தை அவனுடைய பிள்ளைகளுக்காகக் கடவுள் சேர்த்து வைப்பாரோ? அவனுக்கே அந்தத் தண்டனை கிடைக்கட்டும், அப்போது தான் அவன் அதை உணர்ந்து கொள்வான்.
20. தனது அழிவைத் தானே தன் கண்களால் காணட்டும், எல்லாம் வல்லவரது சினத்தின் விளைவை அவனே அனுபவிக்கட்டும்.
21. அவனுடைய வாழ்நாட்களின் எண்ணிக்கை முடிவடைந்து இறந்தபின் அவன் வீட்டார் மட்டில் அவனுக்கு என்ன அக்கறை?
22. கடவுளுக்கு அறிவு புகட்டுபவன் எவனாகிலும் உண்டோ? உம்பர்களுக்கும் தீர்ப்பு வழங்குபவர் அவரே அன்றோ?
23. ஒருவன் வளமான வாழ்க்கை நடத்திக் கவலையின்றி இன்பமெல்லாம் துய்த்துப் பார்த்து,
24. உடல் பருத்துக் கொழுப்பேறி, எலும்புகள் சதைப்பிடிப்பேறிய நிலையில் சாகிறான்.
25. இன்னொருவனோ நன்மையொன்றையும் சுவை பாராமல் மனக்கசப்புற்ற நிலையில் சாகிறான்.
26. இருவருமே புழுதியில் புதைக்கப்படுகின்றனர், புழுக்கள் அவர்களை மூடிக்கொள்ளுகின்றன.
27. இதோ, உங்கள் எண்ணங்கள் எனக்குத் தெரியும், எனக்கெதிராய் நீங்கள் தீட்டும் திட்டங்களை அறிவேன்.
28. ஏனெனில், நீங்கள், 'பெருங்குடி மகனின் வீடு எங்கே? கொடியவர்கள் குடியிருந்த கூடாரமெங்கே?' என்கிறீர்கள்.
29. வழிப்போக்கர்களை நீங்கள் விசாரிக்கவில்லையா? அவர்கள் கண்டு சொன்ன செய்தியை ஏற்கமாட்டீர்களோ?
30. பொல்லாதவன் துன்பத்தின் நாளுக்கென விடப்பட்டுள்ளான், கோபத்தின் நாளில் அவன் தூக்கிச் செல்லப்படுவான் என்பர்.
31. அவன் முகத்தெதிரில் அவனது நடத்தையைக் கண்டிப்பவன் யார்? அவன் செய்ததற்கு ஏற்ற பலன் தருபவன் எவன்?
32. அவன் கல்லறைக்குக் கொண்டு போகப்படுவான், அவன் சமாதிக்குக் காவல் வைக்கப்படும்.
33. பள்ளத்தாக்கின் மண் அவனுக்கு இனிப்பாயிருக்கும், மனிதரெல்லாம் அவனைப் பின்தொடர்கின்றனர், அவன் முன்னால் போகிறவர்களுக்குக் கணக்கில்லை.
34. அப்படியிருக்க, வெறும் சொற்களால் எனக்கு எப்படி நீங்கள் ஆறுதல் கொடுப்பீர்கள்? உங்கள் மறுமொழிகள் யாவும் பொய்யன்றி வேறில்லை."