1. பிறகு, சுகீத்தனான பால்தாத் பேசத்தொடங்கினான்:
2. இன்னும் எவ்வளவு நேரம் அலப்பி அலப்பி பேசுவீர்கள்? சிந்தித்துப் பாருங்கள். பிறகு நாங்கள் பேசுவோம்.
3. மிருகங்கள் என எங்களை நீங்களெல்லாம் கருதுவதேன்? உங்கள் கண் முன் நாங்கள் மூடராய்த் தோன்றுவதேன்?
4. ஆத்திரத்தில் நீரே உம்மைப் பீறிக் கொள்கிறீரே, உம்மை முன்னிட்டு நிலவுலகம் பாழாய்ப் போகுமோ? பாறைகள் தம் இடம் விட்டுப் பெயர்ந்துபோமோ?
5. ஆம், பொல்லாதவனின் விளக்கு அணைந்து போகும், அவனது தீயின் கொழுந்து ஒளிவிடாது.
6. அவனது கூடாரத்திலுள்ள வெளிச்சம் இருளாகும், அவனுக்கு மேலே எரியும் விளக்கு அணைக்கப்படும்.
7. அவனுடைய வீறு நடைகள் ஒடுங்கிப் போகும், அவனுடைய திட்டங்களே அவனைக் கவிழ்க்கும்.
8. அவன் கால்களே அவனை வலையில் அகப்படுத்தும், வீழ்த்துக் குழியின் மேல் அவன் நடக்கிறான்.
9. கண்ணியொன்று அவன் காலைக் கவ்விப் பிடிக்கும், பொறியொன்றில் அவன் சிக்கிக் கொள்வான்.
10. தரையிலே அவனுக்காகச் சுருக்கு மறைந்துள்ளது, வழியிலே அவனுக்காகக் கண்ணி காத்திருக்கிறது.
11. நாற்புறமும் அச்சம் அவனை நடுங்க வைக்கும். குதிக்காலை மிதிக்குமளவில் அவனை விரட்டிச் செல்லும்.
12. அவனுடைய ஆற்றல் பட்டினிக்கு இரையாகும், இடுக்கண் அவன் பக்கத்திலேயே காத்திருக்கும்.
13. கொடிய நோய் அவன் தோலைத் தின்றுவிடும், சாவின் தலைப்பேறு அவனுறுப்புகளை அரித்துத் தின்னும்.
14. அவன் நம்பியிருந்த கூடாரத்தினின்று பிடுங்கப்பட்டு, அச்சமூட்டும் அரசன் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுவான்.
15. அவனது கூடாரத்தில் பெண் பேய் சென்று தங்கும், அவன் இருப்பிடத்தில் கந்தகம் தெளிக்கப்படும்.
16. கீழே அவன் வேர்கள் காய்ந்துபோகும், மேலே அவன் கிளைகள் உலர்ந்து போகும்.
17. உலகிலிருந்தே அவன் நினைவு அழிந்து போகும், தெருவிலே அவன் பெயர் இல்லாதாகும்.
18. ஒளியிலிருந்து இருளுக்குள் தள்ளப்படுவான், உலகிலிருந்தே அவன் துரத்தப்படுவான்.
19. அவனது இனத்தாருள் வழித்தோன்றலோ சந்ததியோ அவனுக்கு இல்லாமற் போகும்; அவன் வாழ்ந்த இடத்தில் எவனும் வாழான்.
20. அவனுக்கு நேர்ந்த துன்ப முடிவைக் கேட்டு, மேற்கு நாடு திகிலடையும், கிழக்கு நாடு திடுக்கிடும்.
21. பொல்லாதவர்களின் இருப்பிடம் இப்படிப்பட்டதே, கடவுளை அறியாதவனின் இடம் இத்தகையதே" என்றான்.