1. அப்பொழுது நாகாமத்தீத்தனான சோப்பார் பேசத் தொடங்கினான். அவன் கூறிய மறுமொழி வருமாறு:
2. சொற்களை நிரம்பப் பேசியவன் அதற்குரிய மறுமொழியைக் கேட்க வேண்டாமா? வாயாடுவதால் ஒருவன் நீதிமான் ஆகிவிடுவானா?
3. உம்முடைய வீம்புரைகள் மனிதர் வாயை அடைத்துவிடுமோ? நீர் நையாண்டி செய்கையில், பிறர் உம்மைப் பழிக்க மாட்டார்களா?
4. என் நடத்தை தூய்மையானது, கடவுளின் கண்கள் முன் நான் குற்றமற்றவன்' என்று சொல்லுகிறீர்.
5. ஆனால் கடவுள் தாமே தம் வாய் திறந்து உன்னிடம் நேரில் வந்து பேசி,
6. ஞானத்தின் மறை பொருட்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்! அது எவ்வித மதிநுட்பத்தையும் நாணச்செய்யும்; அப்போது, உமது குற்றத்திற்குரிய தண்டனைக்கும் குறைவாகவே கடவுள் உம்மைத் தண்டிக்கிறார் என்றறிந்து கொள்வீர்.
7. கடவுளின் ஆழ்ந்த மறைபொருட்களை உம்மால் அறியக்கூடுமோ! எல்லாம் வல்லவரின் எல்லையைக் காண உம்மாலாகுமோ!
8. அது வானத்தைவிட உயர்ந்தது- நீர் என்ன செய்வீர்? பாதாளத்தினும் ஆழமானது- நீர் எவ்வாறு அறிய முடியும்?
9. அதன் அளவு மாநிலத்தை விட நீளமானது. கடல் அகலத்தினும் அது அகலமானது.
10. அவர் கடந்து போனாலும் சிறையிலடைத்தாலும், நீதிமன்றத்துக்கு அழைத்தாலும், அவரைத் தடுப்பவன் யார்?
11. ஏனெனில் மனிதர் அற்பமென அவர் அறிவார்; அவனுடைய அக்கிரமத்தைக் கண்டும் அவர் கவனியாதிருப்பாரோ?
12. காட்டுக் கழுதையின் குட்டியாய்ப் பிறந்தது மனிதனாகுமானால், அறிவிலியொருவன் அறிவு பெறுவான்.
13. உமது உள்ளத்தை நீர் நேர்மைப்படுத்தி, அவரை நோக்கி உம் கைகளை உயர்த்தக்கடவீர்.
14. உம் கையில் அக்கிரமம் இருந்தால் அதை அகற்றி விடும், உம் கூடாரங்களில் அநீதி குடியிருக்க விடாதீர்.
15. அப்பொழுது தான் மாசின்றி உம் முகத்தை உயர்த்த முடியும், திடன் கொள்ளுவீர், அஞ்சாமல் இருப்பீர்.
16. உமக்கு வந்த துன்ப நிலை மறந்து போவீர், கடந்தோடிய வெள்ளம்போல் அதை நினைத்துக் கொள்ளுவீர்.
17. பட்டப் பகலிலும் ஒளி மிக்கதான உம் வாழ்வு காரிருளையும் காலையொளி போல் ஆக்கும்.
18. நம்பிக்கை நிறைந்தவராய் நீர் மனவுறுதியுடன் இருப்பீர், நல்ல பாதுகாப்புடன் அச்சமின்றி வாழ்வீர்.
19. நீர் இளைப்பாறுவீர், உம்மை அச்சுறுத்துபவன் எவனுமிரான், பலபேர் உம் தயவை நாடி மன்றாடி நிற்பர்.
20. தீயவர்களின் கண்கள் பூத்துப் போகும், தப்பிப் பிழைக்க அவர்களுக்கு வழியேதும் இராது, ஆவி பிரியுமென்பதே அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை."