1. மோவாபைப் பற்றிய இறைவாக்கு. இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "நாபோவுக்கு ஐயோ கேடு! ஏனெனில், அது பாழாக்கப்பட்டு அவமானமடைந்தது; காரியத்தாயீம் பிடிபட்டது; அரண் சூழ்ந்த நகரம் மானபங்கப்பட்டு நடுங்கிற்று;
2. மோவாபுக்கு இனிப் புகழில்லை; எசேபோனில் அதற்கெதிராய்த் தீமை சூழ்ந்து, 'வாருங்கள், அதனை ஒரு நாடாய் இல்லாதவாறு சிதைப்போம்!' என்று திட்டமிட்டார்கள். மத்மேனே, நீயும் அழிக்கப்படுவாய், வாள் உன்னைத் தொடர்ந்து வரும்;
3. இதோ, ஓரோனாயீம் நகரினின்று கூக்குரல் கேட்கிறது; 'கொடுமை, பேரழிவு' என்று கேட்கிறது!
4. மோவாபு நசுக்கப் பட்டது; சோவார் வரையில் அவர்கள் அலறல் கேட்கிறது.
5. லுவித்துக்கு ஏறிப் போகும் வழியில் அழுது புலம்புகின்றார்கள்; ஓரோனாயீமுக்கு இறங்கிப் போகும் வழியில் அழிவின் புலம்பலைக் கேட்டார்கள்;
6. தப்பியோடுங்கள், உயிரைக் காத்துக்கொள்ளுங்கள்; பாலை நிலத்துக் காட்டுக் கழுதை போல் ஓடிப் போங்கள்.
7. உன் கோட்டைகளையும் கருவூலங்களையும் நம்பியிருந்தாய், ஆதலால் நீயும் கைப்பற்றப்படுவாய்; உன் தெய்வமான காமோசும், அதன் பூசாரிகளும், தலைவர்களும் அடிமைகளாய்க் கொண்டுப் போகப்படுவர்.
8. பாழாக்குவோன் ஒவ்வொரு பட்டணத்துக்கும் வருவான்; ஒரு பட்டணமும் தப்பாது; பள்ளத்தாக்குகள் பாழாகும், சமவெளிகள் அழிக்கப்படும்; ஆண்டவர் சொற்படியே நிறைவேறும்.
9. மோவாபுக்குக் கல்லறை கட்டுங்கள், அது அடியோடு பாழாய்ப் போகும்; அதனுடைய பட்டணங்கள் பாழ்வெளியாகும், குடியிருப்பார் அற்றுப் போகும்.
10. ஆண்டவருடைய அலுவலை அசட்டைத் தனத்துடன் செய்பவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாமல் தன் வாளை அடக்கி வைத்திருப்பவன் சபிக்கப்பட்டவன்.
11. மோவாபு தன் இளமை முதல் அமைதியாய் வாழ்ந்தது, தன் வண்டல்களில் இளைப்பாறிக் கொண்டிருந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்தில் வார்க்கப்படவில்லை; அடிமையாக நாடுகடத்தப் படவுமில்லை; ஆகவே அதன் சுவை அதைவிட்டுப் போகவில்லை, அதன் நறுமணமும் மாறவில்லை.
12. ஆதலால், ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாட்கள் வருகின்றன; கவிழ்க்கிறவர்களை அனுப்புவோம்; அவர்கள் அதைக் கவிழ்த்து, அதன் பாத்திரங்களை வெறுமையாக்கி, அதன் சாடிகளை உடைத்துப் போடுவார்கள்.
13. அப்போது, இஸ்ராயேல் வீட்டார் தங்கள் நம்பிக்கையாய் இருந்த பேத்தேலைக் குறித்து வெட்கத்துக்கு உள்ளானது போல, மோவாபு காமோசைக் குறித்து வெட்கத்துக்குள்ளாகும்.
14. நாங்கள் வீரர்கள், போரில் வல்லவர்கள்' என்று நீங்கள் சொல்வதெப்படி?
15. மோவாபையும் அதன் நகரங்களையும் அழிப்பவன் வந்து விட்டான், அதன் மிக சிறந்த இளைஞர்கள் கொலைக் களத்தை நோக்கிப் போகிறார்கள்; சேனைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய மன்னர் கூறும் வாக்கு இதுவே.
16. மோவாபின் அழிவு அண்மையில் இருக்கிறது, அதன் கேடு விரைந்து பறந்து வருகிறது.
17. அதனைச் சூழ்ந்திருப்பவர்களே, நீங்கள் அனைவரும் அதனைக் குறித்து அழுது புலம்புங்கள்; அதன் பெயரை அறிந்த அனைவரும் கூடியழுங்கள்; 'வலிமை மிக்க செங்கோல் முறிந்ததெவ்வாறு? மகிமையான கோல் உடைந்ததெப்படி?' என்று சொல்லுங்கள்.
18. தீபோன் என்னும் குடிமகளே! உன் மகிமையை விட்டுக் கீழிறங்கு, வறண்ட நிலத்தில் உட்கார்ந்து கொள். ஏனெனில் மோவாபை அழிப்பவன் உனக்கெதிராய் வந்து விட்டான், உன் அரண்களைத் தகர்த்து விட்டான்.
19. அரோவேர் என்னும் குடிமகளே! நீ வழியருகே நின்று பார்த்துக் கொண்டிரு: ஓட்டம் பிடிக்கிறவனையும் தப்பியோடுகிறவனையும் நோக்கி, 'என்ன நடந்தது?' என்று கேள்.
20. மோவாபு தோல்வியுற்றதால், மானமிழந்தது! அழுது புலம்புங்கள், கூக்குரலிடுங்கள்; அர்னோனில் நின்று, 'மோவாபு பாழானது!' என்று அறிவியுங்கள்.
21. ஆண்டவருடைய நீதிக்கேற்ற தண்டனை சமவெளி நாட்டின் மேலும் ஏலோனின் மேலும் யாசாவின் மேலும் மேப்பாத்தின் மேலும்,
22. தீபோனின் மேலும் நாபோவின் மேலும் தேபிளாத்தாயிம் மேலும்,
23. காரியத்தாயீம் மேலும் பெட்கமுலின் மேலும் பெத்துமாவேனின் மேலும்,
24. கரியோத்தின் மேலும் போஸ்ராவின் மேலும், தொலைவிலும் அருகிலுமுள்ள மோவாபு நாட்டின் பட்டணங்கள் எல்லாவற்றின் மேலும் வந்து விட்டது.
25. இவ்வாறு, மோவாபின் கொம்பு முறிந்தது, கையும் ஒடிந்தது, என்கிறார் ஆண்டவர்.
26. அவனைப் போதை ஏறி வெறி கொள்ளச் செய்யுங்கள்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராகத் தன்னையே பெரியவனாக்கிக் கொண்டான்; தான் வாந்தி எடுத்ததில் மோவாபு புரளுவான்;
27. உன்னுடைய நகைப்புக்கு ஆளாகவில்லையா? அவனைப் பற்றிப் பேசும் போதெல்லாம் தலையை ஆட்டிப் பழித்தாயே, அவன் என்ன, திருடர்கள் கூட்டத்திலா இருந்தான்?
28. மோவாபின் குடிமக்களே, பட்டணங்களை விட்டு வெளியேறுங்கள், பாறைகளிலே போய்க் குடியேறுங்கள்; உயர்ந்த பாறைகளின் வெடிப்பு பொந்துகளில் கூடு கட்டி வாழும் புறாவைப் போல் இருங்கள்.
29. மோவாபின் செருக்கு எவ்வளவெனக் கேள்வியுற்றோம், பெரிதே அதன் இறுமாப்பு? தன் மேட்டிமை, செருக்கு, இறுமாப்பு, உள்ளத்தின் அகந்தை இவற்றைக் கேள்விப்பட்டோம்.
30. அதனுடைய தற்புகழ்ச்சிகள் யாவும் பொய், அதனுடைய செயல்கள் யாவும் பொய்.
31. ஆதலால் மோவாபை முன்னிட்டு அலறியழுவேன், மோவாபு நாடு முழுவதையும் குறித்துப் புலம்புவேன், கிர்கேரஸ் ஊராருக்காகப் பெருமூச்சு விடுவேன்.
32. சபாமாவின் திராட்சைக் கொடியே, யாஜேருக்காக அழுவதை விட மிகுதியாய் உனக்காக அழுகிறேன்; உன்னில் கிளைத்த கொடிகள் கடல் கடந்து படர்ந்தன; யாஜேர் கடல் மட்டும் போய் எட்டின. பாழாக்குவோன் உன் கோடைக்கால கனிகள் மேலும், திராட்சைப் பழ அறுவடை மேலும் பாய்ந்து விட்டான்.
33. மோவாபு நாட்டினின்று, அக்களிப்பும் அக மகிழ்ச்சியும் அற்றுப் போயின; திராட்சை ஆலைகளில் இரசம் வற்றிப் போயிற்று, பழமிதிப்பவன் எவனுமில்லை; மகிழ்ச்சியின் ஆரவாரமுமில்லை!
34. எசேபோன், எலேயாலே ஆகியவற்றின் கூக்குரல், யாஜா வரையிலும் கேட்டது; அவர்களுடைய கதறல் சேகோரிலிருந்து ஓரோனாயீம், எக்ளாத்- ஷூலீஷியா வரையில் கேட்கப்பட்டது. ஏனெனில், நேம்ரிமின் தண்ணீரும் கெட்டுப் போய் விட்டது.
35. மோவாபில் குன்றுகள் மேல் தெய்வங்களுக்குத் தூபம் காட்டிப் பலியிடுகிறவர்களை ஒழிப்போம், என்கிறார் ஆண்டவர்.
36. ஆதலால் மோவாபுக்காகத் துயரப்பட்டு என் இதயம் புல்லாங்குழலைப் போலத் துக்கமான பண்பாடும்; கிர்ரேஸ் ஊராருக்காக என் இதயம் புல்லாங்குழலைப் போலத் துயரத்தால் விம்மிப் பாடும்; அவர்கள் சேர்த்து வைத்த செல்வங்கள் அழிந்தன.
37. அவர்கள் அனைவருடைய தலைகளும் மழிக்கப்பட்டிருக்கும்; தாடிகள் சிரைக்கப்பட்டிருக்கும்; கைகள் கட்டப்பட்டிருக்கும்; இடையில் சாக்குத் துணிகள் உடுத்தியிருப்பர்.
38. மோவாபின் எல்லா வீட்டு மாடிகளிலும், அதன் தெருக்களிலும் அழுகை மயமாய் இருக்கும்; ஏனெனில் யாரும் பொருட்படுத்தாத பாத்திரத்தைப் போல மோவாபை உடைத்தெறிந்தோம், என்கிறார் ஆண்டவர்.
39. மோவாபு எவ்வாறு உடைந்து விட்டது? அவர்கள் கூக்குரலிடுகிறார்களா? மோவாபு நாணித் தலை கவிழ்ந்ததா? சுற்றிலும் இருக்கிற அனைவருடைய பழிப்புக்கும் நகைப்புக்கும் மோவாபு இலக்கானதா?"
40. ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, ஒருவன் கழுகைப் போல விரைவாய்ப் பறந்து வந்து, மோவாபின் மேல் தன் இறக்கைகளை விரிப்பான்;
41. நகரங்கள் பிடிப்பட்டன, கோட்டைகள் கைப்பற்றப்பட்டன; அந்நாளில் மோவாபு வீரர்களின் இதயம் பிரசவிக்கும் பெண்ணின் இதயத்திற்கொப்பாகும்;
42. மோவாபு அழிக்கப்படும், இனி ஒரு மக்களினமாய் இராது; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராகத் தன்னையே உயர்த்தினான்.
43. மோவாபு நாட்டில் குடியிருப்பவனே, பீதியும் படுகுழியும் வலையுமே உன் முன் இருக்கின்றன, என்கிறார் ஆண்டவர்.
44. பீதிக்குத் தப்புகிறவன் படுகுழியில் விழுவான், படுகுழி விட்டு மேடேறுபவன் வலையில் சிக்குவான்; ஏனெனில் அவர்களுடைய தண்டனைக் காலத்தில் இவற்றை மோவாபின் மேல் வரப்பண்ணுவோம், என்கிறார் ஆண்டவர்.
45. வலைக்குத் தப்பினவர்கள் எசெபோன் நிழலில் தங்கினார்கள், ஆயினும் எசெபோனிலிருந்தும் தீ புறப்பட்டது, சேகோனிலிருந்தும் நெருப்பு கிளம்பிற்று; மோவாபின் தலையை விழுங்கிற்று, அதன் கலகக்காரரின் மண்டையைப் பொசுக்கிற்று.
46. மோவாபே, உனக்கு ஐயோ கேடு! காமோசின் மக்களே, சிதைந்து போனீர்கள்; ஏனெனில் உன் புதல்வர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள்; உன் புதல்வியர் அடிமைத்தனத்திற்குப் போனார்கள்.
47. ஆயினும், கடைசி நாட்களில் மோவாபை முன்னைய நிலைக்கு மீண்டும் கொண்டு வருவோம், என்கிறார் ஆண்டவர்." மோவாபின் மேல் வரும் நீதித் தீர்ப்பின் வாக்கு இத்துடன் முற்றிற்று.