1. ஏழாம் மாதத்தில், அரச குலத்தானாகிய எலிசாமாவின் மகனான நத்தானியாசின் மகன் இஸ்மாயேலும், அரசனின் தலைவர்கள் சிலரும் தங்களோடு இன்னும் பத்து பேரைக் கூட்டிக் கொண்டு, மஸ்பாத்திலிருந்த அயிக்காமின் மகன் கொதோலியாசிடம் வந்தார்கள்;
2. அவர்கள் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், நத்தானியாஸ் மகன் இஸ்மாயேலும், அவனோடிருந்த பத்து பேரும் எழுந்து, சாப்பான் மகன் அயிக்காமின் மகன் கொதோலியாசை- பபிலோனிய அரசன் ஆளுநனாக ஏற்படுத்தியிருந்த கொதோவியாசை- வாளால் கொலை செய்தார்கள்.
3. அன்றியும் மஸ்பாத்தில் கொதோலியாசுடன் இருந்த யூதர் அனைவரையும், அங்கிருந்த கல்தேயரையும், போர் வீரர்களையும் இஸ்மாயேல் வெட்டி வீழ்த்தினான்.
4. கொதோலியாஸ் கொலையுண்ட நாளுக்கு மறுநாள் இன்னும் அதனை யாரும் அறியாதிருக்கும் போதே,
5. சிக்கேம், சீலோ, சமாரியா முதலிய இடங்களிலிருந்து எண்பது பேர் தாடியை மழித்துக் கொண்டு, கிழிந்த துணிகளை உடுத்திக் கொண்டு, புண்பட்ட உடலுடன் வந்தார்கள். ஆண்டவரின் திருக்கோயிலில் அர்ச்சனை செய்ய, அவர்கள் கையில் காணிக்கைகளும் தூபமும் இருந்தன.
6. நத்தானியாஸ் மகன் இஸ்மாயேல் மஸ்பாத்தினின்று புறப்பட்டு அழுது கொண்டு அவர்களை எதிர் கொண்டு சென்றான்; அவர்கள் அருகில் சென்றவுடன், "அயிக்காம் மகன் கொதோலியாசை வந்து பாருங்கள்" என்றான்.
7. அவர்கள் பட்டணத்தின் நடுவில் வந்ததும், நத்தானியாஸ் மகன் இஸ்மாயேலும், அவனோடிருந்தவர்களும் அவர்களைக் கொன்று குழியில் போட்டார்கள்.
8. அவர்களுள் பத்துப் பேர் இஸ்மாயேலை நோக்கி, "எங்களைக் கொல்லாதே; ஏனெனில் வயலில் கோதுமை, வாற்கோதுமை, எண்ணெய், தேன் முதலியவற்றைச் சேர்த்து வைத்திருக்கிறோம்" என்றார்கள். அவனும் அவர்களையும், அவர்களுடைய சகோதரர்களையும் கொல்லாமல் விட்டுவிட்டான்.
9. கொதோலியாசை முன்னிட்டு இஸ்மாயேல் கொன்ற மனிதர்களின் பிணங்கள் தள்ளப்பட்ட அந்தப் பள்ளம், இஸ்ராயேலின் அரசனாகிய பாசான் என்பவனுக்குப் பயந்து ஆசாவேந்தன் தன் தற்காப்புக்காக வெட்டியது; நத்தானியாஸ் மகன் இஸ்மாயேல் அதனைப் பிணங்களால் நிரப்பினான்.
10. மஸ்பாத்தில் எஞ்சியிருந்த மக்கள் அனைவரையும் இஸ்மாயேல் சிறைப்படுத்தினான்; அவர்களுள் அயிக்காம் மகன் கொதோலியாசின் பொறுப்பில் சேனைத் தலைவன் நபுஜார்தான் ஒப்படைத்துச் சென்று, மஸ்பாத்திலேயே தங்கி விட்ட அரசிளம் பெண்களும், மற்றும் சில மக்களும் இருந்தனர்; நத்தானியாஸ் மகன் இஸ்மாயேல் அவர்களைச் சிறைப்பிடித்துக் கொண்டு, அம்மோன் மக்களை நோக்கிப் போகப் புறப்பட்டான்.
11. ஆனால் காரை மகன் யோகானும், அவனோடு இருந்த போர் வீரர்களின் தலைவர்களும் நத்தானியாஸ் மகன் இஸ்மாயேல் செய்த கொடுமைகளையெல்லாம் கேள்விப்பட்டார்கள்.
12. உடனே தங்கள் வீரர்கள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு, நத்தானியாஸ் மகன் இஸ்மாயேலுக்கு எதிராகப் போர்புரியப் புறப்பட்டார்கள்; கபாவோனிலிருக்கும் பெரிய நீர் நிலையினருகில் படையோடு அவனைச் சந்தித்தார்கள்.
13. இஸ்மாயேலோடு இருந்த மக்கள் எல்லாரும் காரை மகன் யோகானானையும், அவனோடு வந்த போர் வீரர்களின் தலைவர்கள் அனைவரையும் கண்டு அகமகிழ்ந்தார்கள்.
14. இஸ்மாயேல் மஸ்பாத்தில் சிறை பிடித்துக் கொண்டு போன மக்களெல்லாம் திரும்பி வந்து காரை மகன் யோகானானுடன் சேர்ந்து கொண்டார்கள்.
15. ஆனால் நத்தானியாஸ் மகன் இஸ்மாயேல் யோகனானிடமிருந்து தப்பியோடி, இன்னும் எட்டு பேருடன் அம்மோன் மக்களிடம் போய்ச் சேர்ந்தான்.
16. காரை மகன் யோகானானும், அவனோடிருந்த போர்வீரர்களின் தலைவர்களும், நத்தானியாஸ் மகன் இஸ்மாயேல், அயிக்காம் மகன் கொதோலியாசைக் கொன்று விட்டு மஸ்பாத்திலிருந்து கூட்டிக் கொண்டு போன பொதுமக்களில் எஞ்சியிருந்த அனைவரையும், தாங்கள் கபாவோனினின்று மீட்டுவந்த போர் வீரர், பெண்கள், பிள்ளைகள், அண்ணகர்கள் அனைவரையும் மஸ்பாத்திற்கு அழைத்துக் கொண்டு போனார்கள்.
17. வழியில் பெத்லெகேம் ஊருக்கு அருகிலிருக்கும் காமாவாமில் தங்கி, எகிப்துக்குப் போகக் கருதினார்கள்.
18. ஏனெனில், பபிலோனிய அரசன் யூதா நாட்டுக்கு ஆளுநனாய் ஏற்படுத்திய அயிக்காம் மகன் கொதோலியாசை நத்தானியாஸ் மகன் இஸ்மாயேல் கொன்று விட்டமையால், அவர்கள் கல்தேயருக்கு அஞ்சிக் கொண்டிருந்தார்கள்.