1. ஆண்டவரின் கோயிலில் தலைவராக ஏற்படுத்தப்பட்டிருந்த எம்மோர் என்பவரின் மகனும் அர்ச்சகருமான பாசூர் என்பவன் எரெமியாஸ் இவ்வார்த்தைகளை இறைவாக்காகச் சொல்லக் கேட்டான்;
2. கேட்டதும் பாசூர் எரெமியாஸ் இறைவாக்கினரை அடித்து, ஆண்டவரின் கோயிலில் பென்யமீன் வாயிலருகில் இருந்த சிறைக்கூடத்தில் அவரை அடைத்தான்;
3. மறுநாள் விடிந்த பின்னர், பாசூர் எரெமியாசைச் சிறையினின்று விடுவித்தான்; அப்போது எரெமியாஸ் அவனைப் பார்த்துச் சொன்னார்: "ஆண்டவர் உன் பெயரை இனிப் பாசூர் என்று சொல்லாமல், 'எப்பக்கமும் திகில்' என்று அழைக்கிறார்.
4. ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாம் உனக்கும் உன் நண்பர்களுக்கும் திகில் உண்டாக்குவோம்; அவர்கள் தங்கள் பகைவர்களின் வாளால் மடிவார்கள்; உன் கண்கள் அதையெல்லாம் பார்க்கும்; நாம் யூதாவை முற்றிலும் பபிலோனிய அரசன் கையில் விட்டு விடுவோம்; அவன் அவர்களைப் பபிலோனுக்கு அழைத்துக் கொண்டு போய் வாளுக்கு இரையாக்குவான்;
5. மேலும் இப்பட்டணத்தின் எல்லாச் செல்வங்களையும், ஈட்டிய எல்லாப் பொருட்களையும், விலையுயர்ந்த பொருட்களையும், யூதா மன்னர்களின் கருவூலங்கள் அனைத்தையும் அவர்களின் பகைவர்கள் கைவசம் விட்டு விடுவோம்; அவர்கள் அவற்றைப் பறிமுதல் செய்து பபிலோனுக்கு வாரிக் கொண்டு போவார்கள்.
6. பாசூர், நீயும் உன் வீட்டில் வாழ்வோர் அனைவரும் அடிமைகளாய்ப் போவீர்கள்; நீ பபிலோனுக்குப் போய், அங்கேயே செத்து, நீயும், உன் கள்ளத் தீர்க்கதரிசனங்களைக் கேட்ட என் நண்பர்கள் யாவரும் அங்குப் புதைக்கப்படுவார்கள்."
7. ஆண்டவரே, நீர் என்னை மயக்கிவிட்டீர், நானும் மயங்கிப் போனேன்; நீர் என்னை விட வல்லமை மிக்கவர், ஆகவே நீர் என்னை மேற்கொண்டு விட்டீர்; நாள் முழுவதும் நான் நகைப்புக்குள்ளானேன்; என்னை எல்லாரும் ஏளனம் செய்கிறார்கள்.
8. ஏனெனில் நான் பேசும் போதெல்லாம், உரக்கக் கத்துகிறேன்; "கொடுமை! அழிவு!" என்று தான் கூவி அறிவிக்கிறேன்; ஆண்டவருடைய வார்த்தை நாள் முழுவதும் எனக்கே நிந்தையாகவும் நகைப்பாகவும் ஆயிற்று.
9. அவரைப் பற்றிக் குறிப்பிட மாட்டேன், அவர் பேரால் இனிப் பேசவும் மாட்டேன்" என்பேனாகில், என் எலும்புகள் எரியும் நெருப்பால் பற்றி எரிவது போல் இருக்கிறது. அதனை அடக்கி வைத்து, அடக்கி வைத்துச் சோர்ந்து போனேன், என்னால் அதை அடக்கி வைக்க முடியவில்லை.
10. என்னைப் பலரும் பழித்துரைப்பதைக் கேட்கிறேன்; "எப்பக்கமும் திகில் இருக்கிறது!" "அவன் மேல் பழி சுமத்துங்கள், வாருங்கள் அவன் மேல் பழிசுமத்துவோம்" என்கிறார்கள். என்னோடு நெருங்கிப் பழகிய என் நண்பர்கள் கூட, என் வீழ்ச்சியை எதிர்ப்பார்க்கிறார்கள்: "ஒருவேளை அவன் ஏமாந்து போவான், அப்பொழுது நாம் அவனை மேற்கொள்வோம், அவன்மேல் பழித்தீர்த்துக் கொள்வோம்" என்கிறார்கள்.
11. ஆனால் ஆண்டவர் வலிமை மிகுந்த போர் வீரனைப் போல் என்னோடு இருக்கின்றார்; ஆதலால் என்னைத் துன்புறுத்துகிறவர்கள் இடறி விழுவார்கள்; என்னை அவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள். அவர்கள் மிகவும் வெட்கி நாணுவார்கள்; ஏனெனில் அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்; அவர்கள் அடைந்த இழிவு என்றென்றும் நீடிக்கும்; ஒருகாலும் அது மறக்கப்படாது.
12. சேனைகளின் ஆண்டவரே, நீதிமானைச் சோதிக்கிறவரே, உள்ளத்தையும் இதயத்தையும் பார்க்கிறவரே, நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் பார்க்க வேண்டும்; ஏனெனில் உம்மிடந்தான் என் வழக்கைச் சொன்னேன்.
13. ஆண்டவரைப் பாடிப் புகழுங்கள்; ஆண்டவரை வாழ்த்திப் போற்றுங்கள்; ஏனெனில் ஏழையின் உயிரைத் தீயோர் கையினின்று விடுவித்தார்.
14. நான் பிறந்த அந்த நாள் சபிக்கப்படுக! என் அன்னை என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப் படாதிருக்க!
15. உனக்கோர் ஆண் குழந்தை பிறந்துள்ளது" என்று என் தந்தைக்குச் செய்தி கொணர்ந்து, அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்த அந்த மனிதன் சபிக்கப்படுக!
16. ஆண்டவர் இரக்கமின்றி வீழ்த்திய நகரங்களைப் போல் அந்த மனிதன் ஆகுக! காலையில் கூக்குரலையும், நண்பகலில் போர் ஆரவாரத்தையும், அந்த மனிதன் கேட்பானாக!
17. தாய் வயிற்றிலேயே, நான் கொல்லப்பட்டிருக்கலாகாதா! என்னை வயிற்றிலேயே, சுமந்திருந்த நேரத்திலேயே அப்போது என் தாயே எனக்குக் கல்லறையாய் இருந்திருப்பாள்.
18. தாய் வயிற்றை விட்டு ஏன் தான் நான் வெளிப்பட்டேனோ! உழைப்பையும் துயரத்தையும் அனுபவிக்கவும், என் நாட்களை வெட்கத்தில் கழிக்கவுந்தான் பிறத்தேனோ!