1. ஆண்டவர் எனக்குச் சொன்ன வாக்கு: "நீ போய்க் குயவனிடம் மட்கலம் ஒன்றை வாங்கிக் கொண்டு, மக்களின் மூப்பர்களுள் சிலரையும், அர்ச்சகர்களுள் முதியோர் சிலரையும் உன்னுடன் கூட்டிக் கொண்டு,
2. இன்னோம் மகனின் பள்ளத்தாக்குக்குச் சென்று, 'பானை ஓட்டு வாயில்' அருகே நின்று, நாம் உனக்குச் சொல்லும் வார்த்தைகளை அறிவி:
3. நீ சொல்ல வேண்டியது: 'யூதாவின் மன்னர்களே, யெருசலேமின் குடிகளே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: கேட்பவன் எவனும் தன் காதைப் பொத்திக் கொள்ளும் அளவுக்கு மாபெரும் தீங்கை இந்த இடத்தின் மேல் கொண்டு வருவோம்;
4. ஏனெனில், அவர்கள் நம்மைக் கைவிட்டு, இந்த இடத்தை அசுத்த இடமாக்கி, தாங்களும் தங்கள் முன்னோரும், யூதாவின் அரசர்களும் அறியாத அந்நிய தெய்வங்களுக்கு இவ்விடத்தில் தூபங்காட்டினார்கள்; மேலும் இந்த இடத்தை மாசற்றவர்களின் இரத்தத்தால் நிரப்பினார்கள்;
5. பாகாலுக்குத் தகனப் பலிகளாகத் தங்கள் பிள்ளைகளைச் சுட்டெரிக்க, பாகாலுக்கெனப் பீடங்களைக் கட்டினார்கள்; அவற்றை நாம் அவர்களுக்குக் கற்பிக்கவுமில்லை; சொல்லித் தரவுமில்லை; நமது மனத்தில் கருதவுமில்லை.
6. ஆதலால், இதோ நாட்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர்; அப்போது இவ்விடம் இனி தோப்பேத்து என்றோ, இன்னோம் மகனின் பள்ளத்தாக்கு என்றோ சொல்லப்படாது; ஆனால் படுகொலையின் பள்ளத்தாக்கு என்றே சொல்லப்படும்.
7. இவ்விடத்தில் யூதாவின் திட்டங்களையும், யெருசலேமின் எண்ணங்களையும் அழிப்போம்; அவர்களின் பகைவர் முன்னிலையில் அவர்களை வாளால் வீழ்த்துவோம்; அவர்கள் உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்களின் கையில் அவர்களை ஒப்புவிப்போம்; அவர்களுடைய உடல்களை வானத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகப் போடுவோம்.
8. இப்பட்டணத்தைத் திகைப்புக்கும் நகைப்புக்கும் இலக்காகச் செய்வோம்; அதன் வழியாய்ப் போகிறவன் எவனும் அதன் ஆக்கினைகளையெல்லாம் கண்டு,
9. திகைத்து நிந்தை கூறுவான். தங்களுடைய சொந்தப் புதல்வர், புதல்வியரின் சதையையே அவர்கள் தின்னும்படி செய்வேன்; அவர்களுடைய பகைவர்கள் முற்றுகையிட்டு, வளைத்துக் கொண்டு, நெருக்கி, அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுகையில், ஒவ்வொருவனும் தன் அயலானின் சதையைப் பிடுங்கித் தின்பான்.'
10. அப்போது உன்னுடன் வந்த அந்த மனிதர்களின் முன்னிலையில் மட்கலத்தை உடைத்துப் போட்டு, அவர்களுக்குச் சொல்:
11. 'சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: திரும்பச் செப்பனிட முடியாத விதமாய் உடைந்து போன குயவனின் மட்கலத்தைப் போல். இந்த மக்களையும், இந்தப் பட்டணத்தையும் உடைப்போம்; அவர்களைப் புதைக்க வேறிடமில்லாமையால் தோப்பேத்திலேயே புதைப்பார்கள்;
12. இந்த இடத்தின் மட்டிலும், இதன் குடிகள் மட்டிலும் இவ்வாறே நடந்து கொள்வோம்; இப்பட்டணத்தைத் தோப்பேத்தைப் போலாக்குவோம், என்கிறார் ஆண்டவர்.
13. யெருசலேமின் வீடுகளும், யூதா மன்னர்களின் வீடுகளும்- எந்த வீடுகளின் கூரைகளில் வான் படைகளுக்குத் தூபம் காட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பானப் பலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளனைத்தும், தோப்பேத்து என்னும் இடத்தைப் போலத் தீட்டுப்படுத்தப்படும்."
14. ஆண்டவர் இறைவாக்குரைக்கும்படி அனுப்பின தோப்பேத்து என்னும் இடத்திலிருந்து எரெமியாஸ் திரும்பி வந்து, ஆண்டவரின் கோயில் தலைவாயிலில் நின்று கொண்டு, மக்கள் அனைவருக்கும் அறிவித்தார்:
15. இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் இந்தப் பட்டணத்திற்கு விரோதமாய் அறிவித்த எல்லாத் தீமைகளையும், இப்பட்டணத்தின் மீதும், இதைச் சுற்றியுள்ள நகரங்கள் மீதும், கொண்டு வருவோம்; ஏனெனில் அவர்கள் நம்முடைய வார்த்தைகளைக் கேளாமல் வணங்காக் கழுத்தினராயினர்."