1. இஸ்ராயேல் வீட்டாரே, ஆண்டவர் உங்களுக்குச் சொல்லும் வார்த்தையைக் கேளுங்கள்:
2. ஆண்டவர் கூறுகிறார்: "புறவினத்தாரின் நெறிகளை நீங்கள் கற்றுக் கொள்ளாதீர்கள்; அவர்கள் கண்டு அஞ்சும் வானக் குறிகளுக்கு அஞ்சவேண்டாம்.
3. ஏனெனில் புறவினத்தாரின் வழிமுறைகள் யாவும் வீண்; காட்டில் தச்சன் கோடாரியால் ஒரு மரத்துண்டை வெட்டி, வேலை செய்கிறான்;
4. மனிதர் அதனை வெள்ளியாலும் பொன்னாலும் அணி செய்கின்றனர்; கலகலத்து வெவ்வேறாய் விழாதபடி ஆணிகளைத் தைத்து, சுத்தியால் இணைக்கிறார்கள்;
5. அப்படிச் செய்த சிலைகள் வெள்ளரித் தோட்டத்தில் பறவையோட்ட வைக்கும் பூச்சாண்டிப் பொம்மைகள்; அவை பேச ஆற்றலற்றவை அவற்றால் நடக்க முடியாது; ஆதலால் மனிதர் அவற்றைத் தூக்கிச் செல்கின்றனர்; அவற்றுக்கு அஞ்ச வேண்டாம்; அவை உங்களுக்கு நன்மையும் செய்யா; தீமையும் செய்யா."
6. ஆண்டவரே, உமக்குச் சமமானவன் எவனுமில்லை, நீர் பெரியவர்; உம் பெயர் வல்லமையில் பெரியது;
7. மக்களின் மன்னரே, உமக்குப் பயப்படாதவன் யார்? ஏனெனில் அது உமது உரிமை; ஏனெனில் மக்களின் ஞானிகள் அனைவருள்ளும், அவர்களுடைய அரசுகள் அனைத்திலும் உமக்கு நிகரானவன் எவனுமே இல்லை.
8. அவர்கள் யாவரும் மூடர்கள், அறிவிலிகள்; அவர்களுடைய போதனை வீணானதாய் இருப்பதற்குச் சான்று அவர்கள் வழிபடும் மரச்சிலைகளே!
9. தார்சீசினின்று சுத்த வெள்ளியும், ஒப்பாசினின்று பொன்னும் கொண்டுவரப் படுகின்றன; அவை சிற்பியின் வேலைப்பாடுகள்; தட்டானின் கைவேலைகள்; அவற்றை அவர்களே சிலைகளாகச் செய்தனர்; அவற்றின் உடை ஊதாவாலும் செம்பருத்தியாலும் ஆனது; அவை யாவும் தொழிலாளிகளின் வேலையேயன்றி வேறில்லை.
10. ஆண்டவரே உண்மையான கடவுள்; அவரே உயிருள்ள கடவுள், முடிவில்லா மாமன்னர்; அவர் சினங் கொண்டால், நிலவுலகம் நடுங்கும் அவருடைய கோபத்தை மக்கள் தாங்க முடியாது.
11. ஆதலால் நீ அவர்களுக்குச் சொல்: "வானத்தையும் பூமியையும் படைக்காத அந்தத் தெய்வங்கள் பூமியினின்றும் வானத்தின் கீழிருந்தும் அழிந்து போவர்கள்."
12. தம் வல்லமையால் மண்ணுலகைப் படைத்தவர் அவரே; தம் ஞானத்தால் உலகை நிலைநாட்டியவர் அவரே; தம் அறிவினால் வானத்தை விரித்தவர் அவரே.
13. அவர் குரலொலி வானத்தில் வெள்ளப் பெருக்கின் இரைச்சல் போலக் கேட்கிறது; அவரே பூமியின் எல்லைகளினின்று மேகங்களை எழுப்புகின்றார்; மின்னல்களை மழைக்காக மின்னச் செய்கின்றார். தம் கிடங்குகளிலிருந்து காற்றைக் கொண்டு வருகிறார்.
14. மனிதர் யாவரும் மூடர்கள், அறிவில்லாதவர்கள்; தட்டான் ஒவ்வொருவனும் தன் சிலைகளால் மானமிழந்தான்; ஏனெனில் அவன் செய்த படிமங்கள் பொய்; அவற்றில் உயிர் இல்லை.
15. அவை பயனற்றவை; நகைப்புக்குரிய வேலைகள்; தண்டனைக் காலத்தில் அவை பாழாய்ப் போகும்.
16. யாக்கோபின் பங்காயிருப்பவர் அப்படிப்பட்டவர் அல்லவர்; ஏனெனில் அவரே யாவற்றையும் படைத்தவர்; இஸ்ராயேல் கோத்திரம் அவருடைய உரிமைச் சொத்து; சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்.
17. நாட்டில் எங்கும் திகில்: முற்றுகையிடப்பட்ட (நகரே), உன் பொருட்களைத் தரையிலிருந்து சேர்த்துக் கொள்.
18. ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, இந்த முறை இந்நாட்டுக் குடிகளை வெகு தொலைவில் வீசியெறிவோம்; அவர்கள் என்னைக் கண்டுணர்கிறார்களா என அறிய அவர்களைத் துன்பப்படுத்துவோம்."
19. எனக்கு ஐயோ கேடு! நான் நொறுங்கிப் போனேன்; என் காயம் கொடிதாயிற்று; ஆயினும், "மெய்யாகவே இந்த வேதனையை நான் அனுபவித்தே தீரவேண்டும்" என்று சொன்னேன்.
20. என் கூடாரம் தகர்க்கப்பட்டது; என் கயிறுகளெல்லாம் அறுந்துபோயின; என் மக்கள் என்னை விட்டகன்றார்கள்; மாண்டு போனார்கள்; என் கூடாரத்தை எடுத்து உயர்த்துவார் இல்லை; என் திரைச் சீலைகளை மறுபடியும் பொருத்துவார் இல்லை.
21. ஆயர்கள் அறிவில்லாதவர்கள்; அவர்கள் ஆண்டவரைத் தேடி விசாரிக்கவில்லை; ஆதலால் அவர்களுக்கும் வள வாழ்வில்லை; அவர்களுடைய மந்தை முற்றிலும் சிதறிப் போயிற்று.
22. கேளுங்கள், இதோ பேரொலி கேட்கிறது! வட நாட்டிலிருந்து மக்களின் ஆர்ப்பரிப்பு கேட்கிறது! யூதாவின் பட்டணங்களைப் பாழாக்கவும், குள்ள நரிகளின் குகையாக்கவும் வருகிறார்கள்.
23. ஆண்டவரே, மனிதன் தனக்குத் தானே தன் வழியை ஏற்படுத்துதல் இயலாது என்றறிவேன்; நடக்கிறவன் தன் காலடிகளை நடத்திக் கொள்வதுமில்லை.
24. ஆண்டவரே, என்னைத் திருத்தியருளும்; உமது நீதிக்கேற்பத் தண்டியும்; உமது கடுங்கோபத்தோடே தண்டித்து விடாதேயும்; ஏனெனில் ஒரு வேளை நான் ஒன்றுமில்லாமை ஆகிவிடுவேன்.
25. உம்மை அறியாத இனத்தார் மேலும் உம் திருப்பெயரை வேண்டிக் கொள்ளாத மக்கள் மேலும் உமது கடுஞ்சினத்தைக் காட்டியருளும்; ஏனெனில், அவர்கள் யாக்கோபை விழுங்கி விட்டார்கள், விழுங்கி முற்றிலும் அழித்தார்கள்; அவன் குடியிருப்பையும் பாழாக்கினார்கள்.