1. ஏதோமிலிருந்து வருகிற இவர் யார்? செந்நீர் தோய்ந்த ஆடையினராய்ப் போஸ்ராவிலிருந்து வருகிற இவர் யார்; மகிமையான ஆடைகளை அணிந்தவராய் வல்லமையின் பெருமிதத்தோடு நடப்பவர் இவர் யார்? "நாம் தான்; நீதியை முழங்குகிற நாமே மீட்பளிக்கவும் வல்லவர்."
2. உமது மேலாடை செந்நிறமாய் இருப்பதேன்?- உம் ஆடைகள் திராட்சைப் பழங்களை மிதிப்பவரின் ஆடை போலக் காணப்படுவதேன்?
3. திராட்சைப் பழங்களை நாம் தனியாகவே மிதித்தோம், மக்களுள் யாரும் நமக்கு உதவியாய் வரவில்லை; நம் ஆத்திரத்தில் நாம் அவர்களை மிதித்தோம், நமது கோபத்தில் அவர்களைத் துவைத்தோம்; அவர்களின் செந்நீர் நம் ஆடைகளில் தெறித்தது, நம் மேலாடைகள் எல்லாம் கறைபட்டன.
4. ஏனெனில் பழி வாங்கும் நாள் நம் மனத்தில் இருந்தது, நம்முடைய மீட்பின் ஆண்டு வந்து விட்டது.
5. சுற்றிலும் பார்த்தோம், நமக்கு உதவி செய்பவன் எவனுமில்லை; ஆச்சரியம்! நமக்குத் துணை செய்பவன் ஒருவனுமில்லை; நம்முடைய கைப் புயமே நமக்கு வெற்றி கொணர்ந்தது, நமது சினமே நமக்குத் துணை நின்றது.
6. நமது ஆத்திரத்தில் மக்களினங்களை மிதித்துத் தள்ளினோம், நம் கோபத்தைப் பருகச் செய்து அவர்களுக்குப் போதையேறச் செய்தோம்; அவர்களுடைய செந்நீரைத் தரையில் வடியச் செய்தோம்."
7. ஆண்டவரின் இரக்கச் செயல்களை நினைவு கூர்வேன்; ஆண்டவர் நமக்குச் செய்த எல்லாவற்றிற்காகவும், இஸ்ராயேல் வீட்டாருக்குத் தம் கருணைக்கேற்றவாறும், வற்றா இரக்கப் பெருக்கத்திற்கேற்றவாறும் செய்த நன்மைகளுக்காகவும், ஆண்டவருக்கு புகழ் கூறுவேன்.
8. ஏனெனில் ஆண்டவர் தம் மக்களைக் குறித்து, மெய்யாகவே அவர்கள் நம் மக்கள், நம்மை மறுதலிக்காத பிள்ளைகள் என்றும் இவ்வாறு அவர் அவர்களுக்கு மீட்பரானார்.
9. அவர்களுடைய துன்பங்களைக் குறித்து அவர் கலங்கினார், அவருடைய திருமுன் இருக்கும் தூதர் அவர்களைக் காத்தார்; தம் அன்பினாலும் இரக்கத்தினாலும் அவர்களை அவரே மீட்டார், தொன்று தொட்டு அவர்களை ஆதரித்தார், அவர்களை உயர்த்தினார்.
10. அவர்களோ அவருக்குக் கோப மூட்டினார்கள், அவருடைய பரிசுத்தரின் ஆவிக்கு வருத்தம் தந்தனர்; ஆதலால் அவர்களுக்கே பகைவராய் அவர் மாறினார், அவரே அவர்களுக்கு எதிராய்ப் போர் புரிந்தார்.
11. அப்போது தம் ஊழியனாகிய மோயீசனின் நாட்களை நினைவுகூர்ந்தார்: தம் மந்தையின் மேய்ப்பனைக் கடலினின்று வெளியே கூட்டி வந்தவர் எங்கே?தம் பரிசுத்த ஆவியை மக்களுக்குள் நிலைத்திருக்கச் செய்தவர் எங்கே?
12. தமது மாட்சிமிக்க கைவன்மை மோயீசனின் வலக்கையோடு செல்லும்படி செய்தவர் எங்கே? தமக்கு முடிவில்லாத பேரும் புகழும் உண்டாகும்படி, அவர்கள் முன்னிலையில் தண்ணீரைப் பிரித்து,
13. பாலை நிலத்தில் இடறாமல் நடக்கும் குதிரை போல், ஆழ்கடல் வழியாய் அவர்களை நடத்தி வந்தவர் யார்?
14. சமவெளியில் இறங்கிப் போகும் மந்தை போல் ஆண்டவரின் ஆவி அவர்களைக் கூட்டிப் போனது. உமக்கு மகிமையான பெயர் விளங்கும்படி இவ்வாறு நீர் உம் மக்களைக் கூட்டிப் போனீர்.
15. விண்ணகத்தினின்று கண்ணோக்கியருளும், உமது பரிசுத்த இடத்தினின்று, மகிமையின் அரியணையினின்று பாரும்; உம்முடைய ஆர்வமும் வல்லமையும் எங்கே? உமது உள்ளத்தின் அன்பும் இரக்கப் பெருக்கமும் எங்கே? என் மேல் அவை பொழியாமல் அடக்கப்பட்டனவே!
16. ஏனெனில் நீரே எங்கள் தந்தை, ஆபிரகாம் எங்களை அறியார், இஸ்ராயேலுக்கு எங்களைத் தெரியாது; ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை, நீரே எங்கள் மீட்பர், தொன்று தொட்டு உமது பெயர் அதுவே.
17. ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து நாங்கள் பிறழும்படி விட்டதேன்? உமக்கு அஞ்சாதபடி எங்கள் உள்ளத்தைக் கடினமாக்கியதேன்? உம்முடைய ஊழியர்களை முன்னிட்டும் உம் உரிமைச் சொத்தாகிய கோத்திரங்களை முன்னிட்டும் எங்கள் பக்கமாய்த் திரும்பியருளும்.
18. பொல்லாதவர் உம் பரிசுத்த இடத்தில் கால் வைத்தது ஏன்? எங்கள் எதிரிகள் உமது பரிசுத்த இடத்தைக் காலால் மிதித்தது ஏன்?
19. நீர் எங்களை ஆளத் தொடங்குவதற்கு முன்பும், எங்கள் மேல் உமது திருப்பெயர் வழங்கப்படுவதற்கு முன்பும், தொடக்கத்தில் நாங்கள் எப்படி இருந்தோமோ அப்படியே இப்பொழுது ஆகிவிட்டோம்.