1. ஆண்டவரின் ஆவி என்மேலே, ஏனெனில் ஆண்டவர் என்னை அபிஷுகம் செய்துள்ளார்; எளியோர்க்கு நற்செய்தி அறிவித்து, உள்ளம் நொந்தவர்களைக் குணப்படுத்தவும்: சிறைப்பட்டவர்களுக்கு விடுதலைச் செய்தியும், கட்டுண்டவர்களுக்கு மீட்புச் செய்தியும் அறிவிக்கவும்;
2. ஆண்டவர் தம் அருளைத் தரும் ஆண்டையும், நம் கடவுள் பழிவாங்கும் நாளையும் தெரிவிக்கவும், அழுகிறவர்கள் அனைவர்க்கும் ஆறுதல் அளிக்கவும்;
3. சீயோனில் அழுகிறவர்களை மகிழ்விக்கவும், சாம்பலுக்கு பதிலாய் மணிமுடியையும், அழுகைக்குப் பதிலாய் மகிழ்ச்சியின் தைலத்தையும், நைந்த உள்ளத்திற்குப் பதிலாய்ப் புகழ் என்னும் போர்வையையும் தரவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அவர்கள் நீதியில் அசையாதிருக்கும் மரங்கள் எனவும், ஆண்டவரை மகிமைப்படுத்த அவரால் நடப்பட்டது எனவும் அழைக்கப் படுவார்கள்.
4. பன்னெடுங்காலம் பாழாய்க் கிடந்தவற்றைக் கட்டுவார்கள், பண்டைக் காலத்திலிருந்து இடிந்து கிடந்தவற்றை எழுப்புவார்கள்; பாழாய்க் கிடந்த பட்டணங்களைப் பழைய நிலையில் ஏற்படுத்தி, தலைமுறை தலைமுறையாய்ச் சிதறுண்டவற்றைச் சீர்ப்படுத்துவார்கள்.
5. அந்நியர்கள் வந்து உங்கள் மந்தைகளை மேய்ப்பர், பிறநாட்டினரின் மக்கள் உங்களுக்கு உழவர்களாகவும், உங்கள் திராட்சைத் தோட்டக்காரராகவும் இருப்பர்.
6. நீங்களோ ஆண்டவருடைய அர்ச்சகர்கள் எனப்படுவீர்கள், நம் கடவுளின் திருப்பணியாளர்கள் எனப் பெயர் பெறுவீர்கள். புறவினத்தாரின் செல்வங்களைக் கொண்டு நீங்கள் சாப்பிடுவீர்கள், அவர்களுடைய மகிமையை உரிமையாக்கிக் கொள்வீர்கள்.
7. நீங்கள் அடைந்த வெட்கத்திற்குப் பதிலாக உங்களுக்கு இரு மடங்கு நன்மை விளையும்; உங்களுக்குக் கிடைத்த அவமானத்திற்குப் பதிலாக உங்கள் பாகத்தைக் குறித்து அகமகிழ்வீர்கள்; ஆதலால் உங்கள் நாட்டில் எல்லாவற்றையும் இரு மடங்கு பெறுவீர்கள்; முடிவில்லா மகிழ்ச்சி உங்களுக்குக் கிடைக்கும்.
8. ஏனெனில், ஆண்டவராகிய நாம் நேர்மையை விரும்புகிறோம், கொள்ளையையும் தவறுகளையும் வெறுக்கிறோம், உண்மையாய் அவர்களுக்குக் கைம்மாறு கொடுப்போம், அவர்களோடு முடிவில்லாத உடன்படிக்கை செய்வோம்.
9. அவர்களின் சந்ததி புறவினத்தார் நடுவிலும் அவர்களின் இனத்தார் மக்களினங்கள் மத்தியிலும் தெரிந்திருப்பர். அவர்களைப் பார்ப்பவர்கள் அனைவரும் ஆண்டவர் ஆசீர்வதித்த மக்களினம் இதுவே என அறிந்து கொள்வார்கள்.
10. ஆண்டவரில் நான் அகமகிழ்ந்து அக்களிப்பேன், என் கடவுளிடம் எனதான்மா களிகூரும்; மணிமுடி சூட்டப்பட்ட மணவாளனைப் போலும், அணிகலன்களால் அழகு செய்யப்பட்ட மணவாட்டியைப் போலும் மீட்பின் ஆடைகளை எனக்கு உடுத்தினார், நீதியின் மேலாடையை எனக்குப் போர்த்தினார்.
11. ஏனெனில், நிலமானது தன் விதைகளை முளைக்கச் செய்வது போலும், தோட்டமானது தன்னில் நட்டதைத் தளிர்க்கச் செய்வது போலும், எல்லா இனத்தாரின் முன்னிலையில் நீதியையும் புகழ் மொழியையும் கடவுளாகிய ஆண்டவர் தளிர்க்கச் செய்வார்.