1. நீதியைக் கடைப்பிடித்து ஆண்டவரைத் தேடுகிறவர்களே, நமக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் எந்தப் பாறையினின்று செதுக்கப்பட்டீர்களோ, எந்தக் குழியினின்று வெட்டியெடுக்கப் பட்டீர்களோ, அவற்றைச் சிந்தித்துப் பாருங்கள்.
2. உங்கள் தந்தை ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராவையும் கருதுங்கள்; தனியனாய் அவனை அழைத்தோம், ஆனால் ஆசிர்வதித்துப் பலுகச் செய்தோம்.
3. ஆம், ஆண்டவர் சீயோனுக்கு ஆறுதல் தருவார், பாழடைந்த அந்நகரத்துக்கு ஆறுதல் தருவார்; அதனுடைய பாழ்வெளியை இன்பமான இடமாக்குவார், அதன் பாலை நிலத்தை ஆண்டவரின் சோலையாய் மாற்றுவார்; அக்களிப்பும் மகிழ்ச்சியும் எப்பக்கமும் காணப்படும், நன்றியறிதல் பாடலும் புகழொலியும் கேட்கப்படும்.
4. நம் மக்களே, நமக்குச் செவிசாயுங்கள், நம் இனத்தாரே, நமது வார்த்தையைக் கேளுங்கள்; ஏனெனில் திருச்சட்டம் நம்மிடமிருந்தே புறப்படும், நமது நீதி மக்களினங்களுக்கு ஒளியாய் விளங்கும்.
5. நாம் தரும் விடுதலை அருகில் இருக்கிறது, நாம் அளிக்கும் மீட்பு வந்துகொண்டிருக்கிறது; நம்முடைய கைவன்மை மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்கும், தீவுகள் நம்மை எதிர்பார்த்திருக்கின்றன, நம்முடைய வல்லமைக்காகக் காத்திருக்கின்றன.
6. வானத்தை நோக்கிக் கண்களை உயர்த்திப் பாருங்கள், பூமியை நோக்கிப் பார்வையைத் தாழ்த்துங்கள்; ஏனெனில் வானம் புகை போல மறைந்து போகும், பூமி பழந்துணிபோல நைந்து போகும்; அதன் குடிகளும் இவற்றைப்போல் அழிந்து போவர், நாம் அளிக்கும் மீட்போ என்றென்றும் நிலைத்திருக்கும், நாம் வழங்கும் விடுதலைக்கு முடிவே இராது.
7. நீதியை உணர்ந்திருக்கும் மக்களே, நம் திருச்சட்டம் எழுதப்பட்ட இதயத்தைக் கொண்டவர்களே, நாம் சொல்வதைக் கேளுங்கள்: மனிதர்களின் நிந்தைக்கு அஞ்சவேண்டா, அவர்களுடைய பழிப்புரைக்குக் கலங்க வேண்டா.
8. ஏனெனில், ஆடையைப் போல் அவர்களைப் பூச்சிகள் தின்னும், ஆட்டு மயிரைப் போல் அவர்களை அரி புழுக்கள் தின்று விடும். நாம் அளிக்கும் விடுதலை என்றென்றைக்கும் இருக்கும், நாம் தரும் மீட்பு தலைமுறை தலைமுறையாய் நிலைக்கும்."
9. ஆண்டவரின் புயமே, விழித்தெழு, விழித்தெழு, ஆற்றலை அணிந்துகொள்: பண்டை நாட்களில் கிளம்பியது போல முந்தின தலைமுறைகளில் எழுந்தது போல விழித்தெழு. ராகாபை முன்னாளில் சிதைத்து வாட்டியதும், பறவை நாகத்தை ஊடுருவக் குத்தியதும் நீ தானன்றோ?
10. பாதாளம் வரை ஆழமான கடல்நீரை வற்றச் செய்து, மீட்கப்பட்டவர்கள் கடக்கும்படி கடலின் ஆழத்தில் வழியமைத்ததும் நீ தானன்றோ?
11. அவ்வாறே இப்பொழுதும் ஆண்டவரால் மீட்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியாய்ப் பாடிக்கொண்டு சீயோனுக்குத் திரும்புவார்கள்; முடிவில்லா மகிழ்ச்சி அவர்களுக்கு மணிமுடியாகச் சூட்டப்படும், அக்களிப்பும் அகமகிழ்ச்சியும் அடைவார்கள்; துன்பமும் அழுகையும் ஒழிந்துபோம்.
12. நாமே, நாமே உங்களைத் தேற்றுவோம், சாகக்கூடிய மனிதனுக்கு நீ அஞ்சுவானேன்? புல்லைப் போல் உலர்ந்து போகும் மனிதனுக்குப் பயப்படுவானேன்?
13. வானத்தை விரித்து மண்ணுலகை நிலைநாட்டி, உன்னையும் படைத்த ஆண்டவரை நீ மறந்தாயோ? உன்னைத் துன்புறுத்தி, உன்னை அழிக்கத் தேடியவனின் கோபத்தின் முன் நாள் முழுதும் இடை விடாது நடுங்கினாயே; இப்போது அந்தக் கொடியவனின் கோபம் எங்கே?
14. சிறைப்பட்டவர்களை மீட்க வருகிறவர் காலந்தாழ்த்தாமல் விரைந்து வருகிறார்; ஆகவே அவர்கள் செத்துப் படுகுழிக்குப் போகமாட்டார்கள்; அவர்களுக்கு உணவு இல்லாமற் போகாது.
15. ஆனால் நாமே உன் கடவுளாகிய ஆண்டவர்; கடலைக் கலக்கி அலைகள் எழச் செய்பவர் நாமே; சேனைகளின் ஆண்டவர் என்பது நமது பெயர்.
16. உன் வாயில் நம் வார்த்தைகளை ஊட்டினோம்; வான்வெளியை விரித்து, மண்ணுலகை நிலைநாட்டிய போதும், சீயோனை நோக்கி 'நீங்கள் நம் மக்கள்' என்று சொன்ன போதும் நமதுகையின் நிழலில் உன்னைப் பாதுகாத்தோம்."
17. எழுந்திரு, எழுந்திரு, ஆண்டவரின் கையிலிருந்து அவரது கோபத்தின் கிண்ணத்தைக் குடித்த யெருசலேமே, எழுந்து நில்; மயங்கி விழச் செய்யும் கிண்ணத்தின் அடிவரையில், கடைசித்துளி வரையில் குடித்தாய்.
18. அவள் பெற்ற பிள்ளைகள் அனைவருள்ளும் அவளைத் தாங்குபவன் எவனுமில்லை; அவள் வளர்த்த புதல்வர்கள் அனைவருள்ளும் அவளைக் கைதூக்கி விடுபவன் எவனுமில்லை.
19. இரண்டு தீமைகள் உனக்கு வந்து நேர்ந்தன: உன் மேல் அனுதாபம் கொள்பவன் யார்? கொடுமையும் அழிவும், பஞ்சமும் வாளும் வாட்டின; உனக்கு ஆறுதல் கொடுப்பவன் யார்?
20. உன் பிள்ளைகள் தரையில் வீழ்ந்தனர், வலையில் பட்ட கலைமான் போல் எல்லாத் தெருக்களின் முனைகளிலும் மூர்ச்சித்துக் கிடக்கிறார்கள்; ஆண்டவருடைய கோபத்திற்கும், உன் கடவுளின் தண்டனைக்கும் அவர்கள் ஆளாகிக் கிடக்கிறார்கள்.
21. ஏழ்மையானவளே, இரசத்தாலன்றித் துன்பத்தால் போதை வெறி கொண்டவளே, இதைக்கேள்.
22. தம் மக்களைப் பாதுகாக்கும் உன் இறைவனாகிய ஆண்டவர்- உன் கடவுள் கூறுகிறார்: "இதோ, உன்னை மயங்கி விழச்செய்யும் கிண்ணத்தை உன் கையினின்று எடுத்து விட்டோம்; நமது கோபத்தை அடிவரையில் குடித்த உன் கையினின்று அதை அகற்றி விட்டோம்; இனி நீ அதைக் குடிக்கும்படி நேராது.
23. நாங்கள் கடந்து போகும்படி நீ குப்புற விழுந்து கிட' என்று உன்னிடம் யார் சொன்னார்களோ, நீயும் உன் உடலைத் தரையாகவும், கடந்து செல்லும் வழியாகவும் யாருக்காக ஆக்கினாயோ, அவர்கள் கையில் - அவ்வாறு உன்ணைக் கொடுமைப் படுத்தியர்வர்கள் கையில், அந்தக் கிண்ணத்தைக் கொடுப்போம்."