1. என்னுடைய நண்பருக்கொரு கவிதை பாடுவேன், அவரது திராட்சைத் தோட்டத்தைக் குறித்துக் காதல் பாட்டொன்று இசைப்பேன். வளம் நிறைந்த குன்று ஒன்றின் மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது.
2. அவர் நன்றாக அதைக் கொத்தி விட்டுக் கற்களை அகற்றி, தேர்ந்தெடுத்த திராட்சைக் கொடிகளை அதில் நட்டு வைத்தார்; அதன் நடுவில் கோபுரம் ஒன்றையும் கட்டினார், அதில் திராட்சை பிழியும் ஆலையையும் அமைத்தார்; நற் திராட்சைக் குலைகள் காய்க்குமெனக் காத்திருந்தார், காட்டுத் திராட்சைக் குலைகளே காய்த்தன.
3. இப்பொழுது யெருசலேமின் குடிமக்களே, யூதாவின் மனிதர்களே, நமக்கும் நம் திராட்சைத் தோட்டத்துக்கும் இடையில் நீதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
4. நமது திராட்சைத் தோட்டத்திற்கு இன்னும் என்ன செய்யாமல் விட்டோம்? நற் கனிகளைத் தருமென்று நாம் காத்திருக்க, நமக்குக் காட்டுக் கனிகளை அது தந்தது ஏன்?
5. இனி நமது திராட்சைத் தோட்டத்திற்கு நாம் செய்யப்போவதைக் கேளுங்கள்: நாமே அதன் வேலியைப் பிடுங்கியெறிவோம், அதுவோ பிறரால் சூறையாடப்படும்; அதன் சுற்றுச் சுவரை நாம் தகர்த்திடுவோம், அதுவோ மனிதர் கால்களில் மிதிபடும்.
6. நாம் அதனைப் பாழாக்குவோம், கிளைகள் கழிக்கப்படா, பூமி கொத்தப்படாது; முட்களும் முட்புதர்களுமே அதில் வளரும்; அதன் மீது மழை பெய்யாதிருக்கும்படி மழை மேகங்களுக்கு நாம் கட்டளை தருவோம்.
7. சேனைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ராயேல் வீட்டாரே. அவருக்கு விருப்பமான நாற்று யூதாவின் மனிதர்களே. அறம் விளையுமெனக் காத்திருந்தார், விளைந்ததோ மறம்! முறைமை தழைக்குமெனப் பார்த்திருந்தார், எழுந்ததோ முறைப்பாடு!
8. வீட்டோடு வீடு சேர்ப்பவர்களே, பிறருக்கெனக் கொஞ்சமும் இடமில்லாதபடி எல்லை வரை வயலோடு வயல் இணைத்துக் கொள்பவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! பரந்த இந்த நாட்டின் நடுவிலே நீங்கள் மட்டுமே வாழ இருப்பதாய் எண்ணமோ?
9. என் காதுகளில் கேட்கும்படிக்குச் சேனைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறினார்: "மெய்யாகவே பெருந்தொகையான வீடுகள் பாழாகிக் கிடக்கும், பெரியவையும் அழகியவையுமான வீடுகள் குடியிருக்க ஆளின்றிக் கிடக்கும்.
10. ஏனெனில் பத்துக் காணி திராட்சைத் தோட்டம் ஒரே குடம் இரசந்தான் கொடுக்கும்; ஒரு கலம் விதை நிலத்தில் போட்டால், ஒரே மரக்கால் விளைபலனே கிடைக்கும்."
11. விடியற் காலையிலேயே விழித்தெழுந்து போதை தரும் பானத்தைத் தேடியலைந்து, நள்ளிரவு வரை குடிவெறியில் இருப்பவர்களுக்கு ஐயோ கேடு!
12. அவர்களுடைய விருந்துகளில் கிண்ணாரம், வீணை, தம்புரு, குழல், திராட்சை இரசம் எல்லாமுண்டு; ஆனால் ஆண்டவரின் செயல்களை அவர்கள் நினைப்பதுமில்லை, அவருடைய கைவேலைகளை அவர்கள் காண்பதுமில்லை.
13. ஆகவே நம் மக்கள் அறிவின்மையால் அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டார்கள்; மதிப்பிற்குரிய மனிதர்கள் பசியால் வாடினார்கள், பொதுமக்கள் தாகத்தால் தவித்தார்கள்.
14. ஆதலால் பாதாளக் குழி தன் பசியை வளர்த்துக் கொண்டது, அளவு கடந்து தன் வாயைப் பிளந்துள்ளது; அதற்குள் வலிமையுடையவர்களும் பொது மக்களும் உயர்ந்தோரும் பெரியோரும் ஒருங்கே இறங்குகிறார்கள்.
15. மனிதர்கள் தலை நாணினர், அவர்கள் குன்றிப் போனார்கள்; இறுமாப்புக் கொண்டவர்களின் கண்கள் தாழ்த்தப்பட்டன.
16. ஆனால் சேனைகளின் ஆண்டவர் நீதியினால் உயர்த்தப்பட்டார், பரிசுத்த கடவுள் நீதியால் தம்மைப் பரிசுத்தரெனக் காட்டினார்.
17. அப்போது ஆட்டுக்குட்டிகள் தங்கள் சொந்த மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போல மேயும்; கொழுத்தவையும் வெள்ளாட்டுக் குட்டிகளும் பாழடைந்த இடங்களில் மேயும்.
18. அவர் விரைந்து வரட்டும், நாம் பார்க்கும்படி தம் வேலையைத் துரிதமாய்ச் செய்யட்டும்; இஸ்ராயேலின் பரிசுத்தருடைய நோக்கம் நிறைவேறட்டும், அதுவும் நடக்கட்டும், நாம் அறிந்துகொள்வோம்" என்று சிலர் சொல்லுகிறார்கள்;
19. சொல்லி, பொய்மை என்னும் கயிற்றால் தண்டனையைத் தங்கள் மேல் இழுத்து, வண்டியைக் கயிற்றால் இழுப்பதுபோல பாவத்தை இழுக்கிற அவர்களுக்கு ஐயோ கேடு!
20. தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமாக்கி, வெளிச்சத்தை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பைக் கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ கேடு!
21. தங்கள் கண்களுக்கு மட்டும் தாங்கள் ஞானிகளாகவும், தங்கள் பார்வைக்கு மட்டும் தாங்கள் விவேகிகளாகவும் இருக்கிறவர்களுக்கு ஐயோ கேடு!
22. திராட்சை இரசம் குடிப்பதில் வீரர்களாயும், மதுபானம் கலப்பதில் வல்லவர்களாயும் இருப்பவர்களுக்கு ஐயோ கேடு!
23. அவர்கள் கையூட்டு வாங்கிக் கொண்டு குற்றவாளியை நீதிமானாகத் தீர்ப்பிடுகிறார்கள், நீதிமானின் நீதியைப் பறிக்கிறார்கள்.
24. ஆதலால் நெருப்புத் தணல் வைக்கோலை விழுங்குவது போலவும், காய்ந்த புல் தீக்கிரையாவது போலவும், அவர்களுடைய ஆணிவேர் தீய்ந்து சாம்பலாகும், அவர்களின் சந்ததி துரும்பு போல பறந்துபோம்; ஏனெனில் சேனைகளின் ஆண்டவரது திருச்சட்டத்தைப் புறக்கணித்தனர்; இஸ்ராயேலின் பரிசுத்தருடைய வார்த்தையை வெறுத்துத் தள்ளிப் போட்டனர்.
25. ஆதலால் ஆண்டவரின் சினம் அவருடைய மக்களுக்கு எதிராக மூண்டெழுந்தது; அவர்களுக்கு எதிராக அவர் தம் கையை நீட்டி அவர்களை நொறுக்கினார்; மலைகள் நடுங்கின; அவர்களுடைய உயிரற்ற உடல்கள் குப்பை போல தெருக்களின் நடுவில் கிடந்தன; இதெல்லாம் செய்தும் அவர் சினம் ஆறவில்லை; நீட்டிய கோபக் கை இன்னும் மடங்கவில்லை.
26. தொலை நாட்டு மக்களுக்கு அவர் அடையாளக்கொடி காட்டுவார், உலகின் எல்லையிலிருந்து சீழ்க்கை யொலியால் கூப்பிடுவார்; இதோ, காற்றாய்ப் பறந்து வருகிறார்கள்.
27. அவர்களுள் எவனும் களைக்கவில்லை, இடறவில்லை, தூங்கவில்லை, உறக்கம் கொள்ளவில்லை, இடைக் கச்சை தளரவில்லை, மிதியடிகளின் வாரொன்றும் அறுந்து போகவில்லை.
28. அவர்களுடைய அம்புகள் கூராயுள்ளன, விற்கள் நாணேறியே இருக்கின்றன. அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கருங்கல் போல கெட்டியானவை; அவர்களுடைய தேர்களின் சக்கரங்கள் புயற் காற்றைப் போல வேகமானவை.
29. அவர்களுடைய கர்ச்சிப்பு சிங்கம் சீறுவது போலிருக்கிறது, இளஞ்சிங்கங்களைப் போல் அவர்கள் கர்ச்சிக்கிறார்கள்; உறுமிக் கொண்டு பாய்ந்து தங்கள் இரையைப் பிடிப்பார்கள்; இரை தூக்கிப் போய்விடுவர், யாரும் அதை மீட்க முடியாது.
30. கடலின் பேரிரைச்சல் போல் அந்நாளில் அவர்கள் கர்ச்சித்து உறுமுவார்கள்; இந்த உலகத்தை ஏறெடுத்துப் பார்த்தாலோ, இதோ, எங்கும் இருளும் துன்பமுமே நிறைந்திருக்கும். மேகங்கள் ஒளியை இருளச் செய்யும்.