1. பபிலோன் என்னும் மகளே, கன்னிப் பெண்ணே, அரியணை விட்டிறங்கிப் புழுதியில் உட்கார்; தரை மீது அமர்ந்துகொள்; கல்தேயர் மகளுக்கு அரியணை கிடையாது; ஏனெனில், மெல்லியலாள், இளநங்கை என இனி நீ அழைக்கப் படமாட்டாய்.
2. எந்திரக் கல்லைச் சுற்றி, மாவரைக்கக் கடவாய், முக்காட்டை அகற்றிவிடு; தோள் மீதுள்ள ஆடையை நீக்கிவிடு; உன் உடையைத் தூக்கிக் கொண்டு ஆற்றைக் கட.
3. உனது நிருவாணம் வெளிப்படும், உன் மானக்கேடு காணப்படும்; இங்ஙனம் நாம் பழிவாங்குவோம், மனிதன் எவனும் நம்மை எதிர்க்க முடியாது.
4. நம்முடைய மீட்பர்- சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்- இஸ்ராயேலின் பரிசுத்தர் ஆவர்.
5. கல்தேயரின் மகளே, இருளில் நுழைந்து மவுனமாய் உட்கார்ந்திரு; ஏனெனில், அரசுகளின் தலைவி என இனி நீ அழைக்கப்படமாட்டாய்.
6. நம் மக்கள் மீது கோபமுற்றோம், நம் உரிமைச் சொத்தைப் பங்கப்படுத்தினோம்; அவர்களை உன் கையில் விட்டுவிட்டோம், அவர்களுக்கு நீ இரக்கம் காட்டவில்லை; வயதில் முதிர்ந்தவர் மேல் கூட உன் நுகத்தை வைத்து அழுத்தினாய்
7. என்றென்றும் நான் தலைவியாய் விளங்குவேன்" என்றாய்; ஆதலால் நீ இவற்றை உன் உள்ளத்தில் சிந்தித்துப் பார்க்கவில்லை; உனக்கு வரவேண்டியதை எண்ணிப் பார்க்கவில்லை.
8. மென்மையானவளே, கலக்கமின்றி வாழ்பவளே, "நானே தனிப்பெரும் அரசி, என்னையன்றி வேறில்லை; நான் கைம்பெண்ணாய் ஆகமாட்டேன், மலடியாகவும் இருக்கமாட்டேன்" என்று உன் உள்ளத்தில் எண்ணுபவளே, நாம் சொல்வதை இப்போது கேள்:
9. மலட்டுத்தன்மை, கைம்மை இவ்விரண்டும் நெடிப்பொழுதில் ஒரே நாளில் உனக்கு நேரும்; நீ கணக்கற்ற பில்லி சூனியங்களைக் கையாண்டாலும், உன் மந்திரவாதங்களுக்கு மிதிமிஞ்சிய ஆற்றலிருப்பினும், இந்த தீமைகளெல்லாம் உனக்கு வந்தே தீரும்.
10. என்னைப் பார்க்கிறவர் ஒருவருமில்லை" என்று சொல்லிக் கொண்டு, அஞ்சாமல் கொடுமைகளைச் செய்துவந்தாய்; உன் ஞானமும் உன் கல்வியறிவும் உன்னை மோசஞ் செய்து விட்டன; நீயோ, "நானே தனிப்பெருந் தலைவி, என்னையன்றி வேறில்லை" என்று உன் உள்ளத்தில் எண்ணினாய்.
11. தீமை உன் மேல் திண்ணமாய் வரும், எங்கிருந்து வருமென உனக்குத் தெரியாது; வேதனை உன் மேல் பெருக்கெடுத்து வரும், அதற்குப் பரிகாரம் தேட உன்னால் இயலாது; அழிவு உன் மேல் திடீரென விழும், அதைப் பற்றி ஒன்றும் அறியமாட்டாய்.
12. உன் மந்திரவாதிகளோடும், நீ இளமை முதல் உன் தொழிலாய்க் கொண்டிருக்கும் பில்லி சூனியங்களோடும் நின்றுகொள்; அவை உனக்குப் பயன்படுமோ என்றும், அவற்றால் இன்னும் ஆற்றல் பெறுவாயோ என்றும் பார்ப்போம்.
13. உன் ஆலோசனைகளின் எண்ணிக்கையால் சோர்வடைந்தாய், கிரகங்களைக் கணிக்கும் சோதிட நூல் அறிஞரும், நாள் நட்சத்திரத்தை ஆராய்ந்து, எதிர் காலத்தை உனக்குச் சொல்பவரும், இப்போது வரட்டும், வந்து உன்னை மீட்கட்டும் பார்ப்போம்.
14. இதோ, அவர்கள் வைக்கோலைப் போல் இருக்கிறார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; தீயின் அழலினின்று அவர்கள் தங்கள் உயிரை விடுவிக்க மாட்டார்கள்; குளிர்காயப் பயன்படும் தீப்பொறியில்லை இவை, எதிரே உட்காரத் தக்க நெருப்புமில்லை இது.
15. யாரோடு உழைத்துழைத்துச் சோர்ந்தாயோ அவர்களும், இளமை முதல் உன்னோடு வணிகம் நடத்தியவர்களும், ஒவ்வொருவரும் ஒரு திசையில் ஓட்டமெடுப்பர், உன்னை மீட்க ஒருவனும் இருக்க மாட்டான்.