1. அந் நாளில் ஓர் ஆணை ஏழு பெண்கள் பிடித்துக் கொண்டு, "நாங்கள் எங்கள் சொந்த உணவைச் சாப்பிடுவோம், நாங்களே எங்கள் உடைகளைத் தேடிக் கொள்வோம், உமது பேர் எங்களுக்கு வழங்கச் செய்யும், எங்கள் நிந்தை நீங்கச் செய்தால் போதும்" என்பார்கள்.
2. அந் நாளில் ஆண்டவரின் தளிர் அழகும் மகிமையும் வாய்ந்திருக்கும்; நாட்டில் விளையும் நற்கனி, இஸ்ராயேலில் எஞ்சியோரின் மகிமையும் பெருமையுமாயிருக்கும்.
3. சீயோனில் எஞ்சி யிருப்பவர்களும் யெருசலேமில் விடப்பட்டவர்களும் புனிதர்கள் என்றே சொல்லப்படுவர்; யெருசலேமில் வாழ்வதற்கெனப் பேரெழுதப்பட்டவன் ஒவ்வொருவனும் புனிதன் எனப்படுவான்.
4. ஆண்டவர் சீயோன் மகளின் அசுத்தத்தையும், யெருசலேமின் இரத்தக் கறைகளையும், நீதியின் ஆவியாலும் நெருப்பின் ஆவியாலும், அதினின்று கழுவித் தூய்மைப் படுத்துவார்;
5. பின்னர், சீயோன் மலையின் முழுப் பரப்பின் மேலும், ஆங்கே கூடிவரும் சபைகள் மேலும், பகலில் மேகமும் இரவில் புகைப் படலமும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச்சுடரும் ஆண்டவர் தாமே படைத்தருள்வார்; ஏனெனில், அனைத்திற்கும் மேலே ஆண்டவரின் மகிமை கவிகையாகவும் கூடாரமாகவும் இருக்கும்;
6. அது பகலில் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், மழைக்கும் காற்றுக்கும் தப்பிக்கப் புகலிடமும் பாதுகாப்புமாயிருக்கும்.