1. இதோ நீதியோடு ஓர் அரசர் ஆட்சி செய்வார், அவருடைய தலைவர்கள் அனைத்தையும் நேர்மையாய் நடத்துவர்.
2. ஒவ்வொருவரும் காற்றிலிருந்து காப்பாற்றும் ஒதுக்கிடமாகவும், புயலுக்கு மறைந்து கொள்ளும் புகலிடமாகவும், வறட்சியான இடத்திலே நீரோடை போலவும், பாலை நிலத்தில் கற்குகையின் நிழல் போலவும் இருப்பர்.
3. காட்சி காண்போரின் கண்கள் மறைக்கப்பட்டிருக்கா; கேட்பவர்களின் செவிகள் கூர்ந்து கவனமாய்க் கேட்கும்.
4. பேதைகளின் உள்ளம் அறிவைக் கண்டுணரும், தெற்று வாயர்களின் நாக்கு விரைவாயும் தெளிவாயும் பேசும்.
5. அறிவிலி இனி மேல் பெருந்தலைவர் என்று பெயர்பெற மாட்டான். கயவன் இனி மேல் பெரிய மனிதன் என்று சொல்லப்படான்.
6. ஏனெனில் அறிவிலி மடமையானவற்றைப் பேசுவான், அவன் உள்ளம் அக்கிரமத்தைச் சிந்திக்கும்: அவனுடைய சிந்தனையெல்லாம் அக்கிரமம் செய்வதும், ஆண்டவரைக் குறித்துக் கபடமாய்ச் பேசுவதும், பசியுற்றவனின் ஆவலை நிறைவு செய்யாமலே விடுவதும், தாகமுற்றவனுக்கு நீர் தராமல் மறுத்து விடுவதுமே.
7. கயவனின் கயமைச் செயல்கள் பொல்லாதவை; ஏனெனில் எளியவனின் வழக்கு நீதியானதாலும், இவன் அந்த ஏழையைப் பொய் வார்த்தைகளால் கெடுக்கும்படி வஞ்சகத் திட்டங்களை வகுத்துக் கொள்ளுகிறான்.
8. ஆனால் சான்றோன் சான்றோனுக்குத் தகுதியானவற்றையே சிந்திப்பான், சான்றாண்மையினின்று நிலை பெயரான்.
9. சோம்பிக் கிடக்கும் பெண்களே, எழுந்திருங்கள்; நான் சொல்வதைக் கேளுங்கள். மிஞ்சின நம்பிக்கை கொண்ட மங்கையரே, என் சொற்களுக்குச் செவிசாயுங்கள்.
10. ஓராண்டும் சில நாட்களும் கடந்த பின்னர், மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த நீங்கள் கலக்க மடைவீர்கள்; ஏனெனில் திராட்சை அறுவடை முடிந்து விட்டது, கனி கொய்தலும் இனி வராது.
11. சோம்பிக் கிடக்கிறவர்களே, அஞ்சி நடுங்குங்கள், மிஞ்சின நம்பிக்கையுள்ளவர்களே, பயந்து கலங்குங்கள்; உடைகளை உரித்து விடுங்கள், ஆடைகளை அகற்றி விடுங்கள்; இடையில் மயிராடையை வரிந்து கட்டுங்கள்;
12. செழிப்பான நாட்டைக் குறித்தும், வளமான திராட்சைத் தோட்டத்தைக் குறித்தும் மாரடித்துக் கொண்டு புலம்புங்கள்.
13. முட்களும் முட்புதர்களும் கிளம்புகின்ற நம் மக்களின் நிலத்தைப் பற்றியும், மகிழ்ச்சி பொங்கிய நகரத்தின் இன்பம் நிறைந்த வீடுகள் அனைத்தைப் பற்றியும் புலம்புங்கள்.
14. ஏனெனில் அதன் அரண்மனை கைவிடப்படும், மக்கள் மலிந்த நகரம் வெறுமையாய் விடப்படும்; ஒப்பெல் குன்றும் காவல் கோட்டைகளும் என்றென்றைக்கும் குகைகளாய் மாறி விடும்; காட்டுக் கழுதைகளுக்கு உல்லாச இடமாகவும், மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாகவும் ஆகிவிடும்.
15. உன்னதத்திலிருந்து மீண்டும் ஆவியானது நம் மேல் பொழியப்படும், பாலை நிலம் வளமான வயலாகவும், வளமான வயல் காடாகவும் மாறும்.
16. நேர்மை பாழ்வெளியில் குடிகொள்ளும், நீதியானது செழிப்பான வயல் வெளியில் வீற்றிருக்கும்.
17. நீதியால் விளையும் பயன் சமாதானம், நீதியின் பலன் அமைதியும், என்றென்றும் நீடிக்கும் அச்சமில்லா வாழ்வுமே.
18. சமாதானமான இருப்பிடத்திலும், அச்சமறியாத கூடாரங்களிலும், அமைதி நிறைந்த இல்லங்களிலும் நம் மக்கள் குடியிருப்பார்கள்.
19. காடு அழிக்கப்படும், பட்டணம் தாழ்த்தப்படும்.
20. நீங்கள் பேறு பெற்றவர்களாய் இருப்பீர்கள், நீரருகிலெல்லாம் விதைப்பீர்கள், மாடுகளையும் கழுதைகளும் தாராளமாய் மேய விடுவீர்கள்.