1. எத்தியோப்பியா ஆறுகளுக்கு அப்பாலுள்ள சிறகடிக்கும் ஒலி நிறைந்த நாட்டுக்கு ஐயோ கேடு!
2. அது நாணல் படகுகளில் நீரின்மேலே கடல் கடந்து தூதுவரை அனுப்புகின்றது! விரைந்தோடும் தூதர்களே, உயர்ந்து வளர்ந்த, வலிமை மிக்க மக்களைக் கொண்டதும், அருகிலும் தொலைவிலும் அச்சம் விளைக்கும் மக்களுள்ளதும், படைப்பலத்தால் பல நாடுகள் மேல் வெற்றி கொண்டதும், ஆறுகளால் பிரிக்கப்படுவதுமான அந்த நாட்டுக்கு விரைந்து செல்லுங்கள்.
3. உலகமெலாம் பரவியிருக்கும் குடிமக்களே, பூமியின் மேல் வாழ்ந்து வரும் நீங்களனைவரும், மலைகள் மேல் கொடியேற்றப்படும் போது உற்று நோக்குங்கள்! எக்காளம் ஊதப்படும் போது கூர்ந்து கேளுங்கள்!
4. ஏனெனில் ஆண்டவர் என்னிடம் இவ்வாறு சொன்னார்: "பட்டப்பகலின் வெப்பம் போலும் அறுவடைக்கால வெயிலில் படரும் பனி மேகம் போலும், நம் இருப்பிடத்தில் இருந்து கொண்டே நாம் கலக்கமின்றிக் கவனித்துப் பார்ப்போம்."
5. ஏனெனில் அறுவடைக்கு முன் பூக்கள் பூத்து மாறிய பின், பூக்கள் காய்த்துத் திராட்சைக் கனிகள் பழுக்கும் போது, இளந்தளிர்கள் அரிவாளால் தறிக்கப்படும், படர்ந்தோடும் கிளைகளெல்லாம் கழிக்கப்படும்.
6. அவையனைத்தும் மலைகளில் பிணந்தின்னும் பறவைகளுக்கும், பூமியிலே வாழும் மிருகங்களுக்கும் விடப்படும்; பிணந்தின்னும் பறவைகள் கோடைக் காலத்திலும், பூமியின் மிருகமெல்லாம் குளிர் காலத்திலும், அவற்றின் மேல் வந்து தங்கியிருக்கும்.
7. அந்நாளில், உயர்ந்து வளர்ந்த வலிமை மிக்க மக்களைக் கொண்டதும், அருகிலும் தொலைவிலும் அச்சம் விளைக்கும் மக்களுள்ளதும், படைப்பலத்தால் பல நாடுகள் மேல் வெற்றி கொண்டதும், ஆறுகளால் பிரிக்கப்படுவதுமான அந்த நாட்டிலிருந்து காணிக்கைகள் சேனைகளின் ஆண்டவருக்குக் கொண்டு வரப்படும்; சேனைகளின் ஆண்டவரது திருப்பெயர் போற்றப்படும் இடமாகிய சீயோன் மலைக்குக் கொண்டு வரப்படும்.