1. மோவாபைப் பற்றிய இறைவாக்கு: ஆர் நகரம் அழிவுற்ற அந்த இரவிலேயே மோவாப் வீழ்ச்சியுற்றது; கீர் நகரம் அழிவுற்ற அந்த இரவிலேயே மோவாப் வீழ்ச்சியுற்றது.
2. அழுது புலம்புவதற்காக அரச வீட்டாரும் தீபோன் மக்களும் உயர்ந்த இடங்களுக்குப் போகிறார்கள்; நாபோ, மேதாபா இவற்றின் அழிவைக் குறித்து மோவாப் நாட்டினர் அழுகின்றார்கள்; தலைகள் யாவும் மழிக்கப்படும், தாடிகள் அனைத்தும் சிரைக்கப்படும்.
3. தெருக்களில் கோணி உடுத்திக்கொண்டு திரிவார்கள், வீடுகளின் மாடிகளிலும் பொதுவிடங்களிலும், அனைவரும் புலம்பிக் கண்ணீர் வடிக்கின்றார்கள்.
4. எசேபோன், எலயாலே ஓலமிடுகின்றன, யாசா வரை அவற்றின் குரல் கேட்கின்றது; அதைக் கேட்டு மோவாப் வீரர்களும் புலம்புகிறார்கள், அவர்களின் இதயமும் உள்ளுக்குள் குமுறுகிறது.
5. மோவாபுக்காக என்னுள்ளமும் கதறுகிறது, தப்பிப் பிழைத்தவர்கள் சேகோர், எக்லாத் - ஷூலிஷியா முதலிய இடங்களுக்கு ஓடுகின்றனர்; லூவித் குன்றின் மேல் அழுது கொண்டே ஏறுகின்றனர், ஒரோநாகிம் வழியிலெல்லாம் உள்ளம் உருகும்படி புலம்புகின்றனர்.
6. நெம்ரிம் நீர் நிலைகள் வறண்டு போயின. புல் உலர்ந்தது, முளைகள் கருகிவிட்டன, பசுமை என்பதே இல்லாமற் போனது.
7. ஆதலால் தங்கள் சொத்தில் மிகுந்திருந்ததையும், தாங்கள் சேமித்து வைத்திருந்ததையும், அராவிம் நீரோடையின் அக்கரைக்குத் தூக்கிக் கொண்டு கடக்கிறார்கள்.
8. மோவாபின் எல்லையெங்கும் அழுகைக் குரல் கேட்கிறது, அவர்களின் புலம்பல் கல்லிம் வரையில் எட்டுகிறது, அவர்களின் ஓலம் எலிம் கேணிகள் வரைக் கேட்கிறது.
9. தீபோன் நீர் நிலைகள் இரத்தம் நிறைந்துள்ளன, தீபோன் மேல் வேதனை மேல் வேதனை கொண்டு வருவோம்; மோவாப் மக்களுள் தப்பினவர் மேலும், நாட்டிலே எஞ்சியிருப்போர் மேலும் சிங்கத்தை வரச் செய்வோம்.