1. தங்கள் துன்பத்திலே அவர்கள் நம்மைத் தேடுவார்கள். வாருங்கள் ஆண்டவரிடம் திரும்புவோம்;
2. ஏனெனில், நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார்.
3. இரண்டு நாளைக்குப் பிறகு நமக்கு அவர் புத்துயிரூட்டுவார், மூன்றாம் நாள் அவர் நம்மை எழுப்பி விடுவார்; அதன் பின் அவர் முன்னிலையில் நாம் வாழ்ந்திடுவோம். ஆண்டவரைப் பற்றி அறிந்திடுவோம், அவரைப் பற்றி அறிய முனைந்திடுவோம்; அவருடைய வருகை விடி வெள்ளிப் போலத் திண்ணமானது, மழை போலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார்" என்றார்கள்.
4. எப்பிராயீமே, உன்னை நாம் என்ன செய்வோம்? யூதாவே, உன்னை நாம் என்ன செய்வோம்? விடியற்காலையின் மேகம் போலும், கதிரவனைக் கண்ட பனி போலும் உங்கள் அன்பு இருக்கிறதே!
5. ஆதலால் தான் இறைவாக்கினர்களைக் கொண்டு நாம் அவர்களை வெட்டி வீழ்த்தினோம்; நமது வாய் மொழிகளால் அவர்களைக் கொன்றொழித்தோம், நமது தீர்ப்பு வெட்ட வெளிச்சம் போல வெளிப்படுகிறது.
6. ஏனெனில், நாம் விரும்புவது பலியை அன்று, அன்பையே நாம் விரும்புகிறோம்; தகனப் பலிகள் நமக்கு வேண்டியதில்லை, கடவுளை அறியும் அறிவே நாம் விரும்புகிறோம்.
7. அவர்களோ ஆதாமைப் போல் உடன்படிக்கையை மீறினர், அதனால் நமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தனர்.
8. காலாத் கொடியவர்கள் நிறைந்த பட்டணம், இரத்தக் கறை அங்கே படிந்துள்ளது.
9. வழிப்போக்கருக்காகக் காத்திருக்கும் கள்ளர் போல் அர்ச்சகர்களின் கூட்டம் சிக்கேம் வழியில் காத்திருந்து கொலை செய்கிறது; கொடுமையன்றோ அவர்கள் செய்வது!
10. குலை நடுங்கும் செயலொன்றை நாம் இஸ்ராயேல் வீட்டாரிடம் கண்டோம்; அங்கே எப்பிராயீமின் வேசித்தனம் கண்டோம், இஸ்ராயேல் தீட்டுப்பட்டிருந்தது.
11. யூதாவே, உனக்கும் அறுவடைக்காலம் குறிக்கப்பட்டுள்ளது, நம் மக்களை நன்னிலைக்கு மறுபடியும் கொணரும் போது அக்காலம் வரும்.