1. யூதாவின் அரசர்களாகிய ஓசியாஸ், யோவத்தாம், ஆக்காஸ், எசெக்கியாஸ் ஆகியோரின் நாட்களிலும், இஸ்ராயேலின் அரசனாகிய யோவாஸ் என்பவனின் மகன் யெரொபோவாமின் நாட்களிலும் பேயேரி என்பவனின் மகனான ஓசேயுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் திருவாக்கு இதுவே.
2. ஆண்டவர் ஓசேயின் வாயிலாக முதலில் பேசிய போது, ஆண்டவர் ஓசேயை நோக்கி, "நீ போய் வேசிப்பெண் ஒருத்தியை மணந்து, வேசிப்பிள்ளைகளைப் பெற்றெடு; ஏனெனில் நாடு ஆண்டவரை விட்டு விலகி வேசித்தனத்தில் மூழ்கியுள்ளது" என்றார்.
3. அவ்வாறே அவர் போய், தேபெலாயிம் என்பவனின் மகள் கோமேர் என்பவளை மணந்து கொண்டார்; அவள் கருவுற்று அவருக்கொரு மகனைப் பெற்றாள்.
4. அப்போது ஆண்டவர் ஓசேயைப் பார்த்து, "குழந்தைக்கு எஸ்ராயேல் என்று பெயரிடு; ஏனெனில், இன்னும் சிறிது காலத்தில், எஸ்ராயேலின் இரத்தப் பழிக்காக ஜேயு குடும்பத்தைப் பழிவாங்குவோம்; மேலும் இஸ்ராயேலின் அரசுக்கு ஒரு முடிவுகட்டுவோம்.;
5. அந்நாளில், எஸ்ராயேல் பள்ளத்தாக்கில் இஸ்ராயேலின் வில்லை முறித்துப் போடுவோம்" என்றார்.
6. கோமேர் மறுபடியும் கருவுற்றுப் பெண்குழந்தை ஒன்றைப் பெற்றாள்; அப்போது ஆண்டவர் அவரைப் பார்த்து, "இவளுக்கு 'அன்பு பெறாதவள்' என்று பெயரிடு; ஏனெனில், இஸ்ராயேல் வீட்டின் மீது இனி மேல் அன்பு காட்டவே மாட்டோம்.
7. ஆனால் யூதா வீட்டின் மீது அன்பு காட்டி, அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர் பேரால் அவர்களை மீட்போம்; வில், வாள், போர், குதிரைகள் கொண்டு நாம் அவர்களை மீட்கப்போவதில்லை" என்றார்.
8. 'அன்பு பெறாதவள்' பால் மறந்த பின்பு கோமேர் திரும்பவும் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றாள்;
9. அப்போது ஆண்டவர் ஓசேயைப் பார்த்து, "இவனுக்கு 'எம் மக்கள் அல்லர்' என்று பெயரிடு; ஏனெனில், நீங்கள் எம் மக்களல்லீர், நாமும் உங்கள் கடவுளல்லோம்" என்றார்.
10. ஆயினும் இஸ்ராயேல் மக்களின் எண்ணிக்கை, அளக்கவோ எண்ணவோ இயலாத கடற்கரை மணலுக்கு ஒப்பாகும்; "நீங்கள் எம் மக்களல்லீர்" என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டதற்கு மாறாக, "உயிருள்ள கடவுளின் மக்கள்" என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
11. யூதாவின் மக்களும் இஸ்ராயேல் மக்களும் ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கப்படுவர்; தங்களுக்கென ஒரே தலைவனை ஏற்படுத்திக் கொண்டு நாடு பிடிக்க எழும்புவார்கள்; அதுவே இஸ்ராயேலின் மாபெரும் நாள்.