1. இந்த மெல்கிசேதேக் சாலேம் ஊர் அரசர்; உன்னத கடவுளின் குரு; அரசர்களை வெட்டி வீழ்த்தித் திரும்பி வந்துகொண்டிருந்த ஆபிரகாமை எதிர்கொண்டு போய் அவருக்கு ஆசி அளித்தவர்.
2. ஆபிரகாமிடமிருந்து எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைப் பெற்றுக் கொண்டவர். முதலாவது, நீதியின் அரசர் என்பது அவருடைய பெயரின் பொருள்; பின்னர் அவர் சாலேம் அரசர்; அதற்கு அமைதியின் அரசர் என்பது பொருள்.
3. இவருக்குத் தந்தையில்லை, தாயில்லை, தலைமுறை வரலாறில்லை, வாழ்நாளுக்குத் தொடக்கமுமில்லை, முடிவுமில்லை; இவர் கடவுளின் மகனுக்கு ஒப்பானவர்: அவரைப்போல் என்றென்றும் குருவாக நிலைத்திருக்கிறார்.
4. குலத்தந்தையாகிய ஆபிரகாமே போரில் கைப்பற்றிய பொருட்களுள் சிறந்தவற்றில் பத்தில் ஒரு பங்கை அவருக்கு அளித்தாரெனில், அவர் எத்துணை உயர்ந்தவர் என்பதை எண்ணிப் பாருங்கள்.
5. பொதுமக்களிடமிருந்து திருச்சட்டப்படி பத்திலொரு பங்குபெற, லேவியின் குலத்தவருள் குருப்பணி ஏற்பவர்களுக்குக் கட்டளையுண்டு. ஆபிரகாமின் மரபில் தோன்றிய தம் சகோதரர்களிடமிருந்தும் லேவியர் இவ்வாறு பெறுகின்றனர்.
6. ஆனால் அவர்களுடைய மரபைச் சாராத மெல்கிசேதேக் ஆபிரகாமிடமிருந்து பத்திலொரு பங்கு பெற்றார்; இறைவனின் வாக்குறுதிகளைப் பெற்றிருந்த ஆபிரகாமுக்கே ஆசி அளித்தார்.
7. சிறியவனுக்குப் பெரியவன் ஆசி அளிப்பதே முறை. 'இதை யாரும் மறுக்க முடியாது.
8. மேலும் பத்திலொரு பங்கு வாங்கும் லேவியர்கள் மாண்டுபோகும் மனிதர்கள்; ஆனால் மெல்கிசேதேக் உயிருள்ளவர் எனச் சாட்சியம் பெற்றவர்.
9. அன்றியும், பத்திலொரு பங்கு வாங்கும் லேவியும் ஆபிரகாமின் வழியாகப் பத்திலொரு பங்கு கொடுத்தார் என்று சொல்லலாம்.
10. ஏனெனில், மெல்கிசேதேக் ஆபிரகாமை எதிர்கொண்டபோது, லேவி தம் முப்பாட்டனுக்குள் இருந்தார்.
11. லேவியக் குருத்துவத்தின் வழியாக நிறைவு உண்டானதெனில் ஆரோனின் முறைமைப்படி யென்றில்லாமல், 'மெல்கிசேதேக்கின் முறைமைப்படி' மற்றொரு குருவை ஏற்படுத்தவேண்டிய தேவையென்ன? -- மக்களுக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டம் இந்த லேவியக் குருத்துவத்தையே ஆதாரமாகக் கொண்டிருந்தது.
12. இனி, குருத்துவம் மாற்றமடைந்தால், சட்டமும் கட்டாயமாக மாற்றம் அடைய வேண்டும்--
13. உள்ளபடி, இவையெல்லாம் யாரைக் குறித்துச் சொல்லப்பட்டனவோ, அவர் வேறொரு மரபைச் சேர்ந்தவர். அம்மரபில் எவருமே பீடத்தில் திருப்பணி செய்ததில்லை.
14. நம்முடைய ஆண்டவர் யூதாவின் மரபில் தோன்றினார் என்பது தெரிந்ததுதானே? மோயீசன் குருக்களைப் பற்றிப் பேசியபோது, அந்த மரபைக் குறித்து ஒன்றும் குறிப்பிடவில்லை.
15. இப்படித் தோன்றிய அவ்வேறொரு குரு மெல்கிசேதேக்குக்கு ஒப்பானவராய்த் திருச் சட்டத்திலுள்ள கட்டளைப்படி இயல்பான பிறப்பினாலன்று,
16. அழியாத உயிரின் வல்லமையால் குருவாய்த் தோன்றினார் என்பதை நினைக்கும்போது, மேற்கூறியது இன்னும் தெளிவாகிறது.
17. "நீர் மெல்கிசேதேக் முறைமைப்படி, என்றென்றும் குருவாயிருக்கிறீர் " என்னும் சாட்சியம் உண்டன்றோ?
18. ஆம், முன்னைய கட்டளைக்கு வலிமையோ பயனோ இல்லாததால் அது நீக்கப்பட்டது.
19. ஏனெனில், திருச்சட்டம் எதையும் நிறைவுள்ளதாக்கவில்லை. அதைவிடச் சிறந்ததொரு நம்பிக்கை இப்போது தோன்றுகிறது. இந்த நம்பிக்கையால் நாம் கடவுளை அணுகுகிறோம்.
20. மேலும், ஆணையிட்டு அளிக்கப்பட்ட குருத்துவம் எவ்வளவோ உயர்ந்ததன்றோ?
21. லேவியர்கள் குருக்கள் ஆனபோது ஆணை எதுவும் இடப்படவில்லை. இவரோ, "ஆண்டவர் ஆணையிட்டார்; மனம் வருந்தார்; நீர் என்றென்றும் குருவாயிருக்கிறீர்" என்று தமக்குக் கூறியவரின் ஆணையால் குருவானார்.
22. இங்ஙனம் இயேசு எவ்வளவோ மேலான உடன்படிக்கையின் பிணையாகியுள்ளார்.
23. அன்றியும், அந்தக் குருக்கள் நிலைத்திராதபடி சாவு தடுத்ததால் குருக்கள் பலர் ஏற்படலாயினர்.
24. இவரோ என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவத்தைப் பெற்றுள்ளார்.
25. ஆகையால் தம் வழியாகக் கடவுளை அணுகிச் செல்வோரை முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார். அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே வாழ்கிறார்.
26. நமக்கேற்ற தலைமைக் குரு எத்தகையவரெனில்: புனிதர், குற்றமில்லாதவர், மாசற்றவர், பாவிகளினின்று பிரிக்கப்பட்டு வானகங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர்.
27. ஏனைய தலைமைக் குருக்கள் செய்வதுபோல், இவர் முதன்முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும், பின்பு மக்களுடைய பாவங்களுக்காகவும் நாள்தோறும் பலி ஒப்புக்கொடுக்கத் தேவையில்லை. ஏனெனில், தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தபோது ஒரே முறையில் எக்காலத்திற்குமே பலியை நிறைவேற்றிவிட்டார்.
28. திருச்சட்டம் குறைபாடுள்ள மனிதர்களையே தலைமைக் குருக்களாக ஏற்படுத்துகிறது. அச் சட்டத்துக்குப்பின் வந்த ஆணையோடு கூடிய திருவாக்கு என்றென்றும் நிறைவு பெற்ற மகனையே குருவாக ஏற்படுத்துகிறது.