1. இறைவாக்கினர் அபாக்கூக் என்பவரின் மன்றாட்டு; புலம்பல்களுக்குரிய பண்ணில் பாடுக:
2. ஆண்டவரே, உமது புகழைப்பற்றிக் கேள்விப்பட்டேன், ஆண்டவரே, உம் செயல்களைக் கண்டு அஞ்சுகிறேன். காலப்போக்கில் அவற்றை மீண்டும் செய்யும், காலப்போக்கில் அவற்றை அனைவரும் அறியச் செய்யும்; கோபத்திலும் இரக்கத்தை நினைவுகூரும்.
3. தேமானிலிருந்து கடவுள் வருகிறார், பாரான் மலையிலிருந்து பரிசுத்தர் வருகிறார்; அவருடைய மகிமை வானத்தை மூடியுள்ளது, அவர் புகழால் மண்ணுலகம் நிறைந்துள்ளது.
4. அவருடைய பேரொளி பகலைப் போல் இருக்கிறது, அவர் கையினின்று ஒளிக்கதிர்கள் வெளிப்படுகின்றன, அவை அவரது வல்லமையைப் போர்த்தியுள்ளன.
5. அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் வருகிறது; அவருடைய அடிச்சுவடுகளில் காய்ச்சல் தொடர்கிறது.
6. அவர் நின்றால், நிலம் நடுங்குகிறது; அவர் பார்த்தால் மங்களினங்கள் திடுக்கிடுகின்றன. அப்போது, தொன்று தொட்டிருக்கும் மலைகள் சிதறுகின்றன, பண்டுமுதல் அவர் மலரடிகளைத் தாங்கி நின்ற பழங்காலக் குன்றுகள் அமிழ்ந்து போகின்றன.
7. கூஷாவின் கூடாரங்கள் அஞ்சுவதைக் கண்டேன், மாதியான் நாட்டுக் கூடாரங்கள் நடுங்குகின்றன.
8. ஆண்டவரே, நீர் உம்முடைய குதிரைகள் மேலும், வெற்றித் தேர் மேலும் ஏறி வரும் போது, ஆறுகளின் மீதோ நீர் சினங் கொண்டீர்? ஆறுகள் மேலோ உமது ஆத்திரம் பொங்கிற்று? கடல் மீதோ நீர் சீற்றம் கொண்டீர்?
9. நாணேற்றிய வில்லைக் கையிலேந்துகிறீர், அம்பறாத்தூணியை நீர் அம்புகளால் நிரப்புகிறீர். நிலத்தை ஆறுகளால் கிழிக்கிறீர்.
10. உம்மைப் பார்க்கும் போது மலைகள் நடுங்குகின்றன, பெரும் வெள்ளங்கள் பாய்ந்தோடுகின்றன; ஆழ்கடலானது தன் ஓசையை எழுப்புகிறது, தன் கைகளை மேலே உயர்த்துகின்றது.
11. பறந்தோடும் உம் அம்புகளுடைய ஒளியின் முன்னும், மின்னலைப் போலப் பளிச்சிடும் உம் ஈட்டியினுடைய சுடரின் முன்னும் எழுந்து வரும் கதிரவனின் ஒளி மறக்கப்படுகிறது; நிலாவும் தன் இருப்பிடத்திலே நின்று விடுகிறது.
12. கோபத்தோடு மண்ணுலகின் மேல் நடந்து போகிறீர், ஆத்திரத்தோடு மக்களினங்களை நசுக்குகிறீர்.
13. உம் மக்களை மீட்கவும், நீர் அபிஷுகம் செய்தவரை மீட்கவும் நீர் புறப்படுகிறீர்; கொடியவனின் வீட்டைத் தரைமட்டமாக்குகிறீர், பாறைவரையில் அதன் அடிப்படையை வெளியே புரட்டுகிறீர்.
14. எளியவனை மறைவாக விழுங்குபவனைப் போல, மகிழ்ச்சியோடு என்னைச் சிதறடிக்கச் சூறாவளி போலப் பாய்ந்து வருகிற அவனுடைய படைவீரர்களின் தலைகளை உம் ஈட்டிகளால் பிளக்குகிறீர்.
15. உம்முடைய குதிரைகளால் பெருங்கடலை, ஆழ்கடலை மிதிக்கிறீர்.
16. நான் கேட்டதும், என் உடலெல்லாம் நடுங்கிற்று, பேரொலி கேட்டு என் உதடுகள் படபடத்தன. என் எலும்புகள் உளுத்துப் போயின, என் கால்கள் தடுமாறின. எங்கள் மேல் படையெடுக்கும் மக்கள் மீது துன்பத்தின் நாள் வரும் வரை அமைதியாய்க் காத்திருக்கிறேன்.
17. அத்திமரங்கள் பூக்காவிட்டாலும், திராட்சைக் கொடிகளில் பழமில்லாவிட்டாலும், ஒலிவமரங்களின் பலன் அற்றுப் போயினும், வயல்களில் விளைச்சல் கிடைக்காவிடினும், கிடையில் ஆடுகள் இல்லாமற் போனாலும், தொழுவங்களில் மாடுகள் இல்லாதிருந்தாலும்,
18. நான் ஆண்டவரில் அக்களிப்பேன், என் மீட்பரான கடவுளில் அகமகிழ்வேன்.
19. ஆண்டவராகிய இறைவனே என் வலிமை, என் கால்களை மான் கால்களைப் போல் அவர் ஆக்குவார், உயரமான இடங்களில் என்னை நடத்திச் செல்வார். பாடகர் தலைவனின் பண்; இசைக்கருவி: நரம்புக் கருவி.