1. ஆதாமுடைய சந்ததியாரின் அட்டவணையாவது: கடவுள் தாம் படைத்த நாளில் மனிதனைத் தெய்வச் சாயலாகப் படைத்தார்.
2. அவர் ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்து ஆசீர்வதித்தார். அவர்களைப் படைத்த நாளில் அவர் மனிதன் என்னும் பெயரை அவர்களுக்குக் கொடுத்தார்.
3. நூற்றுமுப்பது ஆண்டுகள் வாழ்ந்த பின் ஆதாம் தன் உருவமும் சாயலும் கொண்ட ஒரு மகனைப் பெற்று, அவனைச் சேத் என்று அழைத்தான்.
4. சேத்தைப் பெற்ற பின் ஆதாம் எண்ணுறு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.
5. ஆதாமின் வாழ்நாள் மொத்தம் தொள்ளாயிரத்து முப்பது ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.
6. சேத் நூற்றைந்து ஆண்டு வாழ்ந்த பின் ஏனோஸைப் பெற்றான்.
7. ஏனோஸைப் பெற்ற பின் எண்ணுற்றேழு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.
8. சேத்தின் வாழ்நாள் மொத்தம் தொள்ளாயிரத்துப் பன்னிரண்டு ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.
9. ஏனோஸ் தொண்ணுறு ஆண்டுகள் வாழ்ந்த பின் காயினானைப் பெற்றான்.
10. இவன் பிறந்த பின் எண்ணுற்றுப் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.
11. ஏனோஸின் வாழ்நாள் மொத்தம் தொள்ளாயிரத்தைந்து ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.
12. காயினான் எழுபது ஆண்டு வாழ்ந்த பின் மகலாலெயேலைப் பெற்றான்.
13. மகலாலெயேலைப் பெற்ற பின் கயினான் எண்ணுற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.
14. கயினானின் வாழ்நாள் மொத்தம் தொள்ளாயிரத்துப் பத்து ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.
15. மகலாலெயேல் அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்த பின் யாரேதைப் பெற்றான்.
16. யாரேதைப் பெற்ற பின் மலலெயேல் எண்ணுற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.
17. மலலெயேலின் வாழ்நாள் மொத்தம் எண்ணுற்றுத் தொண்ணுற்றைந்து ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.
18. யாரேத் நூற்றருபத்திரண்டு ஆண்டு வாழ்ந்த பின் ஏனோக்கைப் பெற்றான்.
19. ஏனோக்கைப் பெற்ற பின் எண்ணுறு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.
20. யாரேத்தின் வாழ்நாள் மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்திரண்டு ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.
21. ஏனோக்கு அறுபத்தைந்து ஆண்டு வாழ்ந்த பின் மெத்துசலாவைப் பெற்றான்.
22. ஏனோக்கு கடவுளுக்கு உகந்த விதமாய் நடந்து, மெத்துசலாவைப் பெற்ற பின் முந்நூறு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.
23. ஏனோக்கின் வாழ்நாள் மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள்.
24. அவன் கடவுளுக்கு உகந்த விதமாய் நடந்து இவ்வுலகினின்று மறைந்தான். ஏனென்றால் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார்.
25. மெத்துசலா நூற்றெண்பத்தேழு ஆண்டு வாழ்ந்த பின் லாமேக்கைப் பெற்றான்.
26. லாமேக்கைப் பெற்ற பின் மெத்துசலா எழுநூற்று எண்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.
27. மெத்துசலாவின் வாழ்நாள் மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.
28. லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு ஆண்டு வாழ்ந்த பின்பு ஒரு புதல்வனைப் பெற்று:
29. ஆண்டவராலே சபிக்கப்பட்ட (இந்தப்) பூமியில் எங்கள் உழைப்பிலும் களைப்பிலும் இவனே எங்களுக்குத் தேற்றுபவன் ஆவான். என்று சொல்லி அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
30. நோவாவைப் பெற்ற பின் லாமேக்கு ஐந்நூற்றுத் தொண்ணுற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.
31. லாமேக்கின் வாழ்நாள் மொத்தம் எழுநூற்று எழுபத்தேழு ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.
32. (31b) நோவா ஐந்நூறு ஆண்டுகள் சென்ற பின் சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.