1. இரண்டு ஆண்டுகளுக்குப் பின், பாரவோன் ஒரு கனவு கண்டான். அது என்னவென்றால்: தான், நதிக் கரையில் நிற்பதாகக் கண்டான்.
2. நதியிலிருந்து அதிக அழகும் கொழுமையுமுள்ள ஏழு பசுக்கள் கரையேறி வந்து சதுப்பு நிலங்களில் மேய்ந்து கொண்டிருந்தன.
3. பிறகு மெலிந்து நலிந்திருந்த வேறு ஏழு பசுக்கள் நதியிலிருந்து எறிவந்து, கரையிலே பசும்புல் இருந்த இடங்களில் மேய்ந்து கொண்டிருந்தன.
4. இவை அழகிய மேனியும் கொழுமையுமுள்ள ஏழு பசுக்களையும் விழுங்கி விட்டன. இதைக் கண்டு பாரவோன் விழித்துக் கொண்டான்.
5. மறுபடியும் அவன் தூங்கினான். தூக்கத்திலே மற்றொரு கனவு கண்டான். அதாவது: ஒரே தாளிலிருந்து செழுமையும் அழகுமுள்ள ஏழு கதிர்கள் ஓங்கி வளர்ந்திருந்தன.
6. பின், வாடிச் சாவியாய்ப் போயிருந்த வேறு ஏழு கதிர்களும் வெளிப்பட்டு,
7. முந்திய செழுமையும் அழுகுமுள்ள நல்ல கதிர்களை விழுங்கி விட்டன. பாரவோன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டான்.
8. பொழுது விடிந்த போது, அஞ்சித் திடுக்கிட்டு, எகிப்து நாட்டிலுள்ள எல்லா மந்திரவாதிகளையும் ஞானிகளையும் வரவழைத்துக் கனவை விவரித்துச் சொன்னான். ஆனால், அதன் பொருளைச் சொல்ல ஒருவராலும் கூடாது போயிற்று.
9. அப்போது பானத்தலைவன், முன் தனக்கு நேரிட்டதை நினைத்து, பாரவோனை நோக்கி: என் குற்றத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
10. நம் அரசர் தம் ஊழியர் மீது கோபம் கொண்டு, அடியேனையும் அப்பத் தலைவனையும் படைத் தலைவரின் காவற் கிடங்கிலே அடைக்கக் கட்டளையிட்ட காலத்தில்,
11. அவனுக்கும் எனக்கும் இனி நிகழப் போவதைக் காட்டும் வெவ்வேறு கனவை நாங்கள் இருவரும் கண்டோம்.
12. அங்கே படைத்தலைவரின் ஊழியனாகிய எபிரேய இளைஞன் ஒருவன் இருந்தான். நாங்கள் அவனிடம் கனவுகளைத் தெரிவித்தோம்.
13. அவன் எங்களுக்குச் சொன்னபடியே எல்லாம் நிறைவேறின, உண்மையிலேயே, நான் திரும்ப என் பதவியை பெற்றேன்; மற்றவன் கழுமரத்திலே தூக்கப் பட்டான் என்றான்.
14. அதைக் கேட்டு அரசன் சூசையை அழைத்து வரக் கட்டளையிட்டான். காவற் கிடங்குகளிலிருந்து அவனை விரைவில் கொண்டு வந்து, சவரம் பண்ணிப் புத்தாடை அணிவித்து, அரசன் முன் நிறுத்தினர்.
15. அரசன் அவனை நோக்கி: நான் கனவுகள் கண்டேன். அவற்றின் பொருளைச் சொல்ல ஒருவருமில்லை. நீயோ, அப்படிப்பட்டவற்றிற்கு மிக்க அறிவு நுணுக்கத்தோடு பொருள் சொல்ல வல்லவன் என்று கேள்விப் பட்டேன் என்றான்.
16. சூசை மறுமொழியாக: நானல்ல, கடவுளே பாரவோனுக்குச் சாதகமான விளக்கம் அளிப்பார் என்றான்.
17. அப்பொழுது பாரவோன் தான் கண்டதை விவரிக்கத் தொடங்கினான்: நான் நதிக்கரையில் நிற்பது போல் கண்டேன்.
18. மிக அழகும் செழுமையுமிக்க ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளிப்பட்டு, சதுப்பு நில மேய்ச்சல்களில் பசும் புல்லை மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது,
19. வேறு ஏழு பசுக்கள் அவற்றைத் தொடர்ந்து வந்தன. இவை எவ்வளவு மெலிந்து நலிந்திருந்தன. என்றால், அவற்றைப்போல் எகிப்து நாடெங்கும் நான் ஒரு போதும் கண்டதில்லை.
20. இவை முன் சொன்ன பசுக்களை விழுங்கி விட்டன.
21. ஆயினும், சிறிதுகூட வயிறு புடைக்காமல் முன்போலவே எலும்பும் தோலுமாகத் தள்ளாடிக் கொண்டிருந்தன. நான் அந்நேரம் விழித்துக் கொண்டு, மறுபடியும் தூக்க மயக்கத்தில் ஆழ்ந்தவனாய்,
22. வேறொரு கனவு கண்டேன்: செழுமையும் அழகுமுள்ள ஏழு கதிர்கள் ஒரே தாளில் ஓங்கி வளர்ந்திருந்தன.
23. பின் வாடிச் சாவியாய்ப் போயிருந்த வேறு ஏழு கதிர்கள் தாளினின்று முளைத்தன.
24. இவை முன் சொன்ன எழிலும் செழுமையும் உள்ள நல்ல கதிர்களை விழுங்கிவிட்டன. இக்கனவை நான் மந்திரவாதிகளிடம் சொன்னேன். ஆனால், அதன் பொருளைச் சொல்ல எவனாலும் இயலவில்லை என்றான்.
25. அதற்கு சூசை: அரசரின் இரு கனவுகளும் ஒன்றுதான், கடவுள் எது செய்யக் கருதியிருக்கிறாரோ, அதைப் பாரவோனுக்கு அறிவித்திருக்கிறார்.
26. அழகிய ஏழு பசுக்களும், நிறைந்த மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களும் ஏழு வளமான ஆண்டுகளாம். அவ்விரண்டு கனவுகளுக்கும் கருத்து ஒன்றே.
27. இவற்றின் பின் (கரையில்) ஏறிய எலும்பும் தோலுமான ஏழு பசுக்களும், சாவியாய் விளையாத ஏழு கதிர்களும் வரவிருக்கும் பஞ்சத்திற்குரிய ஏழு ஆண்டுகளாம்.
28. அவை எந்த முறைப்படி நிறைவேறுமென்று கேட்டால்,
29. இதோ எகிப்து நாடெங்கும் மிக வளமான ஏழு ஆண்டுகள் வரப் போகின்றன;
30. அதன்பின் வேறு ஏழாண்டுகள் பஞ்சம் நிலவும். அது எப்படிப்பட்ட பஞ்சமென்றால், முந்தின வளமுள்ள ஆண்டுகள் மறக்கப்பட்டுப் போம். அது நாடு முழுவதையும் பாழாக்கும்.
31. வறுமையின் மிகுதியால் செழிப்பின். மிகுதி தோல்வியுறும்.
32. நீர் கண்ட இரண்டாவது கனவும் மேற்சொன்ன நிகழ்ச்சியைக் குறித்ததேயாம். அது கடவுளால் செய்யப்படுமென்றும், மிக விரைவில் நிறைவேறுமென்றும் சொல்வதற்கு ஆதாரமாய் இருக்கிறது.
33. ஆதலால், அரசர் இப்போது செய்ய வேண்டியது யாதெனில், அவர் அறிவும் திறமையுமுள்ள ஒரு மனிதனைத் தேடி, அவனை எகிப்து நாட்டிற்குத் தலைவனாய் நியமிக்கக் கடவார்.
34. இவன் எல்லா நாடுகளிலும் செயலர்களை நியமித்து, நல்ல விளைச்சலுள்ள மேற்படி ஏழாண்டுகளில் விளைச்சலின் ஐந்திலொரு பகுதியை வாங்கி,
35. இப்போதே வரவிருக்கும் ஆண்டுகளிலே களஞ்சியங்களில் சேமித்து வைக்கக்கடவான். இவ்விதமாய், விளையும் தானியங்களெல்லாம் பாரவோன் அதிகாரத்தால் நகரங்களிலே சேகரிக்கப் பட்டிருக்க வேண்டும்.
36. அவவிதமாய், எகிப்தை வருத்தும் ஏழாண்டுப் பஞ்சத்திற்காகத் தானியங்கள் தயாராயிருந்தால், நாடு பஞ்சத்தினால் பாழாகாது என்றான்.
37. இந்த வார்த்தை பாரவோனுக்கும் அவன் அமைச்சர் அனைவருக்கும் பிரியமாயிற்று.
38. அவன் அவர்களை நோக்கி: தெய்வ ஞானத்தால் நிறைந்த இந்த மனிதனைப்போல் வேறொருவன் கிடைக்கக் கூடுமோ என்று சொல்லி, பின் சூசையை நோக்கி:
39. நீர் கூறிய எல்லாவற்றையும் கடவுளே உமக்குத் தெரிவித்திருக்க, உம்மிலும் அதிக ஞானமுடையவனேனும், உமக்கு ஒத்தவனேனும் எனக்குக் கிடைக்கக் கூடுமோ?
40. நீரே என் அரண்மனைக்குத் தலைவனாய் இருப்பீர். உமது கட்டளைக்கு மக்கள் எல்லாரும் கீழ்ப்படிந்து நடப்பார்கள். அரியணையைப் பொறுத்த மட்டும் நான் உமக்கு மேற்பட்டவனாய் இருப்பேன் என்றான்.
41. மீண்டும் பாரவோன் சூசையை நோக்கி: இதோ எகிப்து நாடு முழுவதற்கும் உம்மைத் தலைவனாக நியமிக்கிறேன் என்று சொல்லி,
42. தன் கையினின்று முத்திரை மோதிரத்தைக் கழற்றி அதை அவன் கையில் போட்டு, மெல்லிய பட்டு நூலால் நெய்யப்பட்ட ஓர் ஆடையை அவனுக்கு உடுத்தி, பொன் கழுத்தணியை அவன் கழுத்திலே மாட்டி,
43. அவனைத் தன் இரண்டாம் தேரின்மேல் ஏற்றி: இவரைத் தெண்டனிட்டுப் பணியுங்கள். இவரே எகிப்து நாடு முழுவதற்கும் தலைவன் என்று அறிந்து கொள்ளுங்கள் என்று கட்டியக்காரன் கூறும்படி (கட்டளையிட்டான்).
44. மேலும், அரசன் சூசையை நோக்கி: நான் பாரவோன்; உம்முடைய உத்தரவின்றி எகிப்து நாடெங்கும் எவனாவது கையையோ காலையோ அசைக்கக் கூடாது என்றான்.
45. பின், (பாரவோன்) அவனுடைய பெயரையும் மாற்றி, எகிப்திய மொழியில் அவனைப் பூபாலன் என்று அழைத்து, எலியோப்பொலிஸின் குருவாகிய புத்திபாரே என்பவன் புதல்வியான ஆஸ்னேட்டை அவனுக்கு மனைவியாக அளித்தான். அப்போது சூசை எகிப்து நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்.
46. (அவர் அரசனாகிய பாரவோனின் அரண்மனையில் பணி ஏற்ற போது அவருக்கு வயது முப்பது). அவர் எகிப்திலுள்ள எல்லா நாடுகளையும் சுற்றிப் பார்த்து வந்தார்.
47. அதற்குள்ளே ஏழாண்டுகளின் மிகுதியான விளைச்சல் தொடங்கியது. அரிக்கட்டாய் அறுக்கப்பட்ட பயிரின் தானியங்கள் களஞ்சியங்களில் சேர்க்கப்பட்டன.
48. அவ்வண்ணமே மிகுதியான தானியங்களை அந்தந்த நகரங்களில் சேர்த்து வைத்தார்கள்.
49. கோதுமை எவ்வளவு மிகுதியாக விளைந்ததென்றால், கடற்கரை மணலுக்கு ஒப்பாகவும் அளவுக்கு அடங்காத திரளாகவும் இருந்தது.
50. பஞ்சம் வருமுன்னே, சூசைக்கு இரண்டு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களை எலியோப்பொலிஸின் குருவாகிய புத்திபாரேயின் புதல்வியாகிய ஆஸ்னேட் அவனுக்குப் பெற்றாள்.
51. சூசை: எல்லாத் துன்பங்களையும் எம் தந்தையின் வீட்டையும் கடவுள் மறக்கச் செய்தார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசேஸ் என்று பெயரிட்டார்.
52. பின்: நான் வறியவனாய் இருந்த இந்த நாட்டிலே கடவுள் என்னை விருத்தியாக்கினார் என்று சொல்லி, இளையவனுக்கு எபிராயிம் என்று பெயரிட்டார்.
53. எகிப்தில் உண்டான வளமான ஏழாண்டுகளும் முடிந்த பின், சூசை முன்னறிந்து சொல்லியபடி,
54. ஏழாண்டுப் பஞ்சம் தெடங்கியது. உலகமெங்கும் பஞ்சம் உண்டாயிற்று; ஆயினும், எகிப்து நாடெங்கும் உணவு கிடைத்தது.
55. பஞ்சம் சூழ்ந்த போது, எகிப்திய மக்கள் உணவுக்காகப் பாரவோனிடம் வந்து ஓலமிட, அவன்: சூசையிடம் சென்று, அவர் உங்களுக்குச் சொல்கிறபடி செய்யுங்கள் என்று அவர்களை அனுப்பி வந்தான்.
56. வரவர எல்லா நாடுகளிலும் பஞ்சம் அதிகமாகிவிட்டது. ஆகையால், சூசை களஞ்சியங்களைத் திறந்து, எகிப்தியர்களுக்குத் தானியங்களை விலைக்குக் கொடுத்து வந்தார். ஏனென்றால், அவர்களும் பஞ்சத்தால் வருந்தினார்கள்.
57. அன்றியும், பிற நாட்டாரும் பஞ்சத்தின் கொடுமையை முன்னிட்டுத் தானியங்களை விலைக்கு வாங்குவதற்கு சூசையிடம் வந்தார்கள்.