1. இவை நிகழ்ந்த பின், எகிப்து மன்னனுக்குப் பானம் அமைப்போர் தலைவனும் அப்பம் படைப்போர் தலைவனும் ஆகிய அண்ணகர் இருவர் தங்கள் மன்னனுக்கு எதிராகக் குற்றஞ் செய்தனர்.
2. பாரவோன் தன் பானத் தலைவனும் அப்பத் தலைவனும் ஆகிய இருவர் மீதும் கடுங்கோபம் கொண்டு,
3. அவர்களை சூசை அடைபட்டிருந்த படைத் தலைவனின் சிறையிலே காவலில் வைத்தான். சிறைத் தலைவனோ, அவர்களை சூசைப் பொறுப்பில் ஒப்புவித்தான்.
4. இவன் அவர்களை விசாரித்து வருவான். அவர்கள் சிறை சேர்ந்த சில நாட்களுக்குப் பின்,
5. இருவரும் ஒரே இரவில் தங்களுக்கு நேரிட இளருந்தவற்றைக் குறித்து வெவ்வேறு கனவு கண்டனர்.
6. காலையில் சூசை அவர்களிடம் வந்த போது, அவர்கள் கவலையாய் இருக்கக் கண்டு:
7. உங்கள் முகம் இன்று முன்னை விட அதிகத் துக்கமாய் இருக்கக் காரணம் என்ன என்று அவர்களை வினவ, அவர்கள்:
8. நாங்கள் கனவு கண்டோம்; அதை எங்களுக்கு விளக்கிச் சொல்வாரில்லை என்று பதில் கூறினர். சூசை அவர்களை நோக்கி: கனவுக்குப் பொருள் சொல்வது கடவுளுக்குரியதல்லவா? நீங்கள் கண்டவற்றை என்னிடம் விவரித்துச் சொல்லுங்கள் என்றான்.
9. அப்பொழுது முதலில் பானத் தலைவன் தான் கண்டதைச் சொல்லத் தொடங்கினான்: ஒரு திராட்சைக் கொடி எனக்கு முன் இருக்கக் கண்டேன்.
10. அதிலே மூன்று கிளைகள் இருந்தன. அவை வரவரத் தளிர்த்து அரும்பிப் பூத்துப் பழங்கள் பழுக்கக் கண்டேன்.
11. என் கையிலே பாரவோனுடைய பானப்பாத்திரம் இருந்தது, நான் பழங்களைப் பறித்து என் கையிலிருந்த பாத்திரத்தில் பிழிந்து, (அப்) பானத்தைப் பாரவோனுக்குக் கொடுத்தேன் என்றான்.
12. சூசை அவனை நோக்கி: உன் கனவின் பொருளாவது: மூன்று கிளைகளும் மூன்று நாட்களாம்.
13. அவை கழிந்த பின் பாரவோன் உன் சேவையை மனத்தில் கொண்டு, மீண்டும் முந்தின பதவியிலே உன்னை வைப்பார். நீ முன் செய்து வந்தது போல், உன் பதவியின் முறைப்படி அவருக்குப் பானப் பாத்திரத்தைக் கையில் கொடுப்பாய்.
14. உன் காரியம் இப்படி நன்மைக்கு வந்த பின்போ, நீ என்னை மறவாமல் தயவு காட்டிப் பாரவோன் என்னை இச் சிறையிலிருந்து விடுதலையாக்கும்படி பரிந்து பேச வேண்டும்.
15. ஏனென்றால், நான் எபிரேயருடைய நாட்டிலிருந்து வஞ்சகமாய்க் கொண்டு வரப்பட்டு, யாதொரு குற்றமுமில்லாமல் இக் காவற் கிடங்கிலே அடைக்கப் பட்டிருக்கிறேன் என்றான்.
16. அப்பத் தலைவனும், அந்தக் கனவின் பொருளை (சூசை) அறிவுக்குப் பொருத்தச் சொல்லியதைக் கண்டு, அவனை நோக்கி: நானும் கனவிலே மூன்று மாவுக் கூடைகளை என் தலையில் வைத்திருந்தேன்.
17. மேற் கூடையிலே எல்லாவிதப் பலகாரங்களையும் வைத்திருந்தேன். பறவைகள் வந்து அவற்றைத் தின்றன என்றான்.
18. அதந்கு சூசை: அக்கனவின் பொருளாவது: மூன்று கூடைகளும் வரவிருக்கிற மூன்று நாட்களாம்.
19. அம்மூன்று நாட்களுக்குப் பின், பாரவோன் உனது தலையை வெட்டி உன்னை ஒரு தூக்கு மரத்திலே தொங்க வைப்பார். அப்பொழுது பறவைகள் வந்து உனது உடலைக் கிழித்துத் தின்னும் என்றான்.
20. அம்மூன்று நாட்களுக்குப் பின், பாரவோன் உனது தலையை வெட்டி உன்னை ஒரு தூக்கு மரத்திலே தொங்க வைப்பார். அப்பொழுது பறவைகள் வந்து உனது உடலைக் கிழித்துத் தின்னும் என்றான்.
21. பானத் தலைவனாயிருந்தவனைத் தனக்குப் பானப் பாத்திரம் கையில் கொடுக்கும்படி (வரச் சொல்லி), அவன் பதவியிலே அவனை மீண்டும் அமர்த்தினான்.
22. மற்றவனையோ, தூக்கு மரத்தில் தூக்கிலிட்டான். இவ்வாறு சூசை பொருள் சொல்லியபடியே எல்லாம் நிகழ்ந்தது.
23. தனக்கு நல்ல காலம் வந்திருப்பினும், பானத் தலைவன் கனவின் பொருளை விவரித்துக் காட்டிய சூசையை நினையாமல் மறந்து விட்டான்.