1. ஆதாம் தன் மனைவி ஏவாளோடு கூடி வாழ்ந்தான். அவள் கருத்தரித்துக் காயினைப் பெற்று: கடவுள் அருளால் ஓர் ஆண்மகனைப் பெற்றேன் என்றாள்.
2. பின் அவனுடைய தம்பியாகிய ஆபேலைப் பெற்றாள். ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான். காயினோ நிலத்தைப் பயிரிடுபவன் ஆனான்.
3. நீண்ட நாட்களுக்குப் பின் நிகழ்ந்ததாவது: காயின் தன் விளைச்சலின் பலனை ஆண்டவருக்குக் காணிக்கையாய்ச் செலுத்தினான்.
4. ஆபேலோ தன் மந்தையின் தலையீற்றுக்களில் மிகக் கொழுத்த ஆடுகளைக் காணிக்கையாய்க் கொடுத்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கைகளையும் ஏற்றுக் கொண்டார்.
5. காயினையோ அவன் காணிக்கைகளையோ அவர் கண்ணோக்கவில்லை. அதனால் காயின் மிக்க சினம் கொண்டான். அவன் முகம் வாடியது.
6. அப்போது ஆண்டவர் அவனை நோக்கி: நீ ஏன் கோபமாய் இருக்கிறாய்? உன் முகம் வாடியிருப்பது ஏன்?
7. நீ நன்மை செய்தால் உனக்கு வெகுமதி கிடைக்கும்; தீமை செய்தால் உடனே பாவம் உன் வாயிலில் வந்து பதுங்கி நிற்குமன்றோ? அதன் ஆசை உன் மேல் இருக்கும்; நீயோ அதை அடக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
8. ஒரு நாள் காயின் தன் தம்பி ஆபேலைப் பார்த்து: வெளியே போகலாம் வா என்றான். வயல்வெளியில் இருந்த போது காயின் தன் தம்பி ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்று விட்டான்.
9. அப்பொழுது ஆண்டவர் காயினை நோக்கி உன் தம்பி ஆபேல் எங்கே என்று வினவ, அவன்: நான் அறியேன்; என் தம்பிக்கு நான் என்ன காவலாளியா? என்றான்.
10. அதற்கு அவர்: உன் தம்பியின் இரத்தக் குரல் பூமியினின்று நம்மை நோக்கிக் கூக்குரலிடுகிறதே;
11. நீ என்ன செய்தாய்? இதோ கேள்; பூமி தன் வாயைத் திறந்து, உன் கையால் சிந்திய உன் தம்பியின் இரத்தத்தை உட்கொண்டது. ஆகவே, இன்று முதல் நீ அந்தப் பூமியில் சபிக்கப்பட்டவனாய் இருப்பாய்.
12. அதனை நீ பயிரிட்டால் அது உனக்குப் பலன் தராது. பூமியில் நீ நிலையற்றவனும் நாடோடியுமாய் இருப்பாய் என்றார்.
13. அப்போது காயின் ஆண்டவரை நோக்கி, என் பாவம் மன்னிக்கப்படக் கூடுமானதன்று; அது அத்தனை பெரிது.
14. இதோ, இந்நாட்டிலிருந்து என்னை இன்று துரத்தி விடுகிறீர். இனி நான் உம் கண்ணிற்கு மறைந்தவனாய்ப் பூமியில் நிலையற்றவனும் நாடோடியுமாய் இருப்பேன். அப்படியானால் என்னைக் காணும் எவனும் என்னைக் கொல்வானே என்றான்.
15. ஆண்டவர்: அப்படி நடக்கவே நடக்காது; காயினைக் கொல்பவன் ஏழு மடங்கு பழியைச் சுமப்பான் என்று காயினுக்குச் சொல்லி, அவனைக் கண்டு பிடிப்பவன் எவனும் அவனைக் கொல்லாதபடிக்கு அவனுக்கு ஓர் அடையாளம் இட்டார்.
16. அப்போது காயின் ஆண்டவருடைய திருமுன்னின்று விலகி, ஏதேனுக்குக் கிழக்கேயுள்ள நாட்டில் அகதியாய் அலைந்து திரிந்தான்.
17. பின் காயின் தன் மனைவியோடு சுடி வாழ்ந்தான். அவள் கருத்தரித்து ஏனோக்கைப் பெற்றாள். அப்போது காயின் ஒரு நகரை எழுப்பி, அதற்குத் தன் மகன் ஏனோக்கின் பெயரை இட்டான்.
18. ஏனோக் இராத்தைப் பெற்றான். இராத் மவியயேலைப் பெற்றான். மவியயேல் மத்துசயேலைப் பெற்றான். மத்துசயேல் இலாமேக்கைப் பெற்றான்.
19. இலாமேக் இரண்டு மனைவியரைக் கொண்டான்: ஒருத்தியின் பெயர் ஆதாள், மற்றவள் பெயர் செல்லாள்.
20. ஆதாள் யாபேலைப் பெற்றாள்: கூடாரவாசிகளுக்கும் ஆயர்களுக்கும் தந்தை இவனே. இவன் தம்பி பெயர் யூபால்:
21. வீணையும் கின்னரமும் வாசிப்பவர்களுக்கு அவனே தந்தை.
22. செல்லாளும் துபால் காயினைப் பெற்றாள். இவன் இரும்பு, பித்தளைகளைக் கொண்டு வேலை செய்யும் கருமானும் கன்னானும் ஆனான். துபால் காயினின் சகோதரி நொஎமாள்.
23. இலாமேக் தன் மனைவியராகிய ஆதாளையும் செல்லாளையும் நோக்கி: இலொமேக்கின் மனைவியரே, என் வார்த்தையைக் கேளுங்கள்; என் சொல்லுக்குச் செவிகொடுங்கள்: என்னைக் காயப்படுத்திய ஒரு மனிதனை நான் கொன்றேன்; என்னைத் துன்புறுத்திய ஒரு இளைஞனையும் சாகடித்தேன்;
24. எனவே, காயின் பொருட்டு ஏழு மடங்கு பழியென்றால், இலாமேக்கின் பொருட்டு ஏழெழுபது மடங்கு பழி வந்து சேரும் என்றான்.
25. மீண்டும் ஆதாம் தன் மனைவியோடு கூடிவாழவே, அவள் ஒரு மகனைப் பெற்றாள்: காயின் கொலை புரிந்த ஆபேலுக்குப் பதிலாகக் கடவுள் எனக்கு வேறொரு மகனைத் தந்தருளினார், என்று சொல்லி, அவள் அவனுக்குச் சேத் என்று பெயரிட்டாள்.
26. சேத்துக்கும் ஒரு மகன் பிறந்தான். சேத் இவனுக்கு ஏனோஸ் என்று பெயரிட்டான். இவனே ஆண்டவருடைய (திருப்) பெயரைச் சொல்லி வழிபடத் தொடங்கினான்.