1. சூசை எகிப்து நாட்டிற்குக் கொண்டு போகப் பட்ட போது, பாராவோனின் அண்ணகனும் படைத் தலைவனுமான புத்திபார் என்னும் எகிப்து நாட்டினன் அவனை, அவ்விடத்திற்குக் கொண்டு வந்த இஸ்மாயேலியரிடம் விலைக்கு வாங்கினான்.
2. ஆண்டவர் சூசையோடு இருந்தார். எனவே, அவன் எடுத்த காரியங்களிலெல்லாம் வெற்றிக் கிட்டியது. அவன் தன் தலைவனின் வீட்டிலேயே இருந்தான்.
3. ஆண்டவர் அவனோடு இருக்கிறாரென்றும், அவன் எது செய்தாலும் அதை ஆண்டவரே (முன்னின்று) நடத்தி வாய்க்கச் செய்கிறாரென்றும் அவன் தலைவன் தெளிவாய்க் கண்டறிந்தான்.
4. சூசை மீது தயவு வைத்து, அவனை எல்லாவற்றிற்கும் மேலாளனாக நியமித்தான். ஆதலால், சூசை தன் கையில் ஒப்புவிக்கப்பட்ட வீட்டையும் அதிலுள்ள எல்லாவற்றையும் நடத்தி, தன் தலைவனுக்கு நல்லூழியம் செய்து வந்தான்.
5. ஆண்டவர் சூசையின் பொருட்டு எகிப்தியனுடைய வீட்டை ஆசீர்வதித்து, வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டான செல்வங்களையெல்லாம் பெருகச் செய்தார்.
6. ஆதலால், தான் உண்ணும் உணவைத் தவிர, மற்றொன்றைப் பற்றியும் அவன் கவலைப்படாதிருந்தான். சூசையோ அழகிய தோற்றமும் எழிலுள்ள முகமும் உடையவனாய் இருந்தான்.
7. நெடுநாள் சென்ற பின், சூசையினுடைய தலைவனின் மனைவி அவன் மேல் ஆசை வைத்து: என்னோடு படு என்றாள்.
8. அவன் அந்தத் தீச் செயலுக்கு ஒரு சிறிதும் இணங்காமல், அவளை நோக்கி: இதோ, என் தலைவர், வீட்டிலுள்ள எல்லாவற்றையும் என் கையில் ஒப்புவித்திருக்கிறார். அவர் தமக்கு உள்ளவற்றைப் பற்றிச் சிறிதும் கவலைப்படுவதில்லை.
9. இவ்விடத்தில் உள்ளவையெல்லாம் என் வசமாக்கினார். நீர் அவருடைய மனைவியாய் இருக்கிறபடியால், உம்மைத் தவிர, வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை. அப்படியிருக்க, நான் இந்தத் தீச் செயலுக்கு உடன்பட்டு, என் கடவுளுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது முறையா என்றான்.
10. அவள் நாள்தோறும் அவ்விதமாய்ப் பேசி அவனைக் கட்டாயப் படுத்தின போதிலும், இளைஞன் அவளோடு படுக்க இசையவில்லை.
11. இப்படியிருக்க ஒரு நாள், சூசை, செய்ய வேண்டிய சிலவேளைகளை முன்னிட்டுத் தனியே வீட்டுக்குள் இருக்கையில்,
12. அவள் அவன் ஆடையின் ஓரத்தைப் பற்றி இழுத்து: என்னோடு படு என்றாள். அவன் அவள் கையிலே தன் மேலாடையை விட்டு விட்டு வெளியே ஓடிப் போனான்.
13. அவன் ஆடை தன் கையிலே இருக்கிறதென்றும் அவள் தன்னை அசட்டை செய்தானென்றும் அவள் கண்டு, தன் வீட்டாரைக் கூப்பிட்டு:
14. (என் கணவர்) நம்மை அவமானப்படுத்துவதற்காகவோ அந்த எபிரேய மனிதனை வீட்டிற்குக் கொண்டு வந்தார்? இதோ, (சூசை) என்னோடு படுப்பதற்காக என் அறைக்குள் நுழைந்தான்.
15. ஆனால், நான் கூச்சலிட்டதைக் கேட்டு, அவன் தன் ஆடையை என் கையில் விட்டு விட்டு வெளியே ஓடிப் போய் விட்டான் என்றாள்.
16. பின் அவள், தான் சொல்லுவது உண்மை என்று எண்பிக்க அந்த ஆடையைத் தன்னிடம் வைத்திருந்து தன் கணவன் வீட்டுக்குத் திரும்பி வந்த போது அதை அவனுக்குக் காட்டி:
17. நீர் கொண்டு வந்த எபிரேய வேலைக்காரன் என்னோடு சரசம் பண்ணும்படி என்னிடத்திற்கு வந்தான்.
18. அப்போது நான் கூச்சலிட்டதைக் கேட்டதும், அவன் தன் ஆடையை என் கையிலே விட்டு விட்டு வெளியே ஓடிப்போனான் என்று முறையிட்டாள்.
19. அறிவற்ற அந்தத் தலைவன் மனைவி சொல்லிய சொற்களை உண்மையென்று உடனே நம்பி, கடுஞ் சினம் கொண்டு,
20. அரச கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் எந்தச் சிறையில் விலங்கு பூண்டிருந்தார்களோ, அதிலே சூசையை ஒப்புவித்தான். அவன் அதனில் அடைக்கப்பட்டான்.
21. கடவுளோ, சூசையோடு இருந்து, அவன் மீது இரக்கம் கொண்டு, சிறைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.
22. இவன் சிறைச்சாலையில் கட்டுண்டிருந்த யாவரையும் அவன் கையிலே ஒப்புவித்தான் அங்கே அவன் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் சூசையே செய்து வந்தான்.
23. சூசையின் பொறுப்பில் எல்லாவற்றையும் ஒப்புவித்த பின், சிறைத் தலைவன் யாதொன்றையும் குறித்துக் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், கடவுள் சூசையோடு இருந்து, அவன் செய்வதையெல்லாம் நடத்தி வருகிறாரென்று கண்டுணர்ந்தான்.