1. ஈசாக் முதியவனானதனால் அவன் கண்கள் கெட்டுப் பார்வை அற்றுப் போயின. ஒரு நாள் அவன் தன் மூத்த மகன் எசாயூவைக் கூப்பிட்டு, என் மகனே, என்று அழைக்க எசாயூ: இதோ வருகிறேன், என்று பதில் கூறினான்.
2. தந்தை அவனை நோக்கி: நானோ கிழவன். என் மரணம் எப்பொழுது வருமென்று அறிந்திலேன்.
3. ஆகையால், உன் ஆயுதங்களாகிய அம்புக் கூட்டையும் வில்லையும் எடுத்துக் கொண்டு வெளியே சென்று, வேட்டையில் அகப்பட்டதைக் (கொண்டுவந்து) எனக்கு விருப்பமான சமையலை நீ அறிந்துள்ளபடி சமைத்து,
4. நான் உண்ணும்படியும், சாகுமுன் முழு அன்புடன் உன்னை ஆசிர்வதிக்கவும், (அதை) என்னிடம் கொண்டு வா என்றான்.
5. இரேபேக்காள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். எசாயூ தந்தையின் கட்டளையை நிறைவேற்றும்படி காட்டிற்குப் புறப்பட்டுப் போனவுடனே, அவன் தன் மகன் யாக்கோபை நோக்கி:
6. உன் தந்தை, உன் தமையன் எசாயூவுக்குச் சொன்னதை நான் கேட்டேன். அது என்னவெனில்:
7. நீ போய் வேட்டையாடி, வேட்டையில் கிடைத்ததைச் சமைத்துக் கொண்டு வந்தால், நான் அதை உண்டு, எனக்குச் சாவு வருமுன் ஆண்டவர் திரு முன் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றார்.
8. ஆதலால், மகனே, என் சொல்லைக் கேள்.
9. நீ ஆட்டு மந்தைக்கு ஓடிப் போய் இரண்டு நல்ல வெள்ளாட்டுக் குட்டிகளைக் கொண்டுவா. நான் அவற்றை உன் தந்தை விரும்பக் கூடிய சுவையுள்ள கறிவகைகளாகச் சமைப்பேன்.
10. நீ அவற்றை அவருக்குக் கொடுப்பாய். உண்டு முடித்த பின், சாகுமுன் அவர் உன்னை ஆசிர்வதிக்கக் கடவார் என்று சொன்னாள்.
11. அவளுக்கு மறுமொழியாக அவன்: என் தமையனாகிய எசாயூ உரோமமுள்ள உடலுடையவன் என்று அறிவீர்.
12. ஒரு வேளை என் தந்தை என்னைத் தடவிப் பார்த்து அதைக் கண்டு பிடித்துக் கொள்வாராயின், அவரை நான் ஏமாற்றத் துணிந்தேனென்று நினைப்பாரே; அப்படியானால், என்மேல் ஆசீரையல்ல சாபத்தையே நான் வருவித்துக் கொள்வேனென்று அஞ்சுகிறேன் என்றான்.
13. தாய் அவனை நோக்கி: அந்தச் சாபம் என்மேல் வரட்டும், மகனே, என் பேச்சை மட்டும் தட்டாமல் நீ போய், நான் சொல்லியவற்றைக் கொண்டுவா என்றாள்.
14. அவன் போய், அவற்றைக் கொணர்ந்து தாயிடம் கொடுக்க, அவள் அவன் தந்தைக்கு விருப்பமான சுவையுள்ள கறிவகைகளைத் தயார் செய்தாள்.
15. பின் வீட்டிலே தன்னிடம் இருந்த எசாயூவின் உடைகளில் மிக நல்லவற்றை எடுத்து அவனுக்கு அணிவித்து,
16. அவன் கைகளிலும் உரோமமற்ற கழுத்திலும் வெள்ளாட்டுத் தோலைக் கட்டி,
17. கறி வகைகளையும், தான் சுட்ட அப்பங்களையும் அவனிடம் கொடுத்தாள்.
18. அவன் அவற்றைக் கொண்டு போய்: அப்பா! என்று அழைத்தான். அதற்கு ஈசாக்: காது கேட்கிறது, மகனே, நீ யார் என்று கேட்க,
19. யாக்கோபு: நான் உமது மூத்த மகனாகிய எசாயூ தான். நீர் எனக்குக் கட்டளையிட்டபடி செய்துள்ளேன். எழுந்து உட்கார்ந்து என் வேட்டைப் (பொருளை) உண்ணும் என்றான்.
20. ஈசாக் மறுபடியும் தன் மகனை நோக்கி: மகனே, இது உனக்கு இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி அகப்பட்டது என, அவன்: ஆண்டவர் அருளால் நான் விரும்பியது உடனே எனக்குக் கிடைத்தது என்று மறுமொழி சொன்னான்.
21. ஈசாக்: மகனே, கிட்ட வா, நீ என் மகன் எசாயூ தானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப் பார்த்தே உறுதி கொள்வேன் என்றான்.
22. யாக்கோபு தந்தை அருகில் வந்தான். ஈசாக் அவனைத் தடவிப் பார்த்து: குரல் யாக்கோபின் குரல்; கைகளோ எசாயூவின் கைகள் என்று சொல்லி,
23. (ஆட்டு) மயிர்களால் மூடியிருந்த அவனுடைய கைகள் மூத்தவனுடைய கைகளைப் போன்று தோன்றினதால், அவன் இன்னானென்று அறியாமல் அவனை ஆசீர்வதித்து:
24. நீ என் மகன் எசாயூ தானா என்று வினவ. அவன்: நான் தான் எனப் பதில் கூறினான்.
25. அப்பொழுது ஈசாக்: நீ பிடித்த வேட்டையைச் சமைத்திருக்கிறாயே, அதைக் கொண்டு வா, மகனே! அதன் பின்னே நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றான். அப்படியே முன் வைக்கப்பட்ட கறியை உண்டான். உண்டு முடித்த பின், (யாக்கோபு) தன் தந்தைக்குத் திராட்சை இரசமும் கொணர்ந்து கொடுத்தான். அதைக் குடித்து முடித்ததும், (ஈசாக்) மகனை நோக்கி:
26. மகனே, என் கிட்ட வந்து என்னை முத்தம் செய் என்றான்.
27. அவன் கிட்டப் போய் அவனை முத்தமிட, ஈசாக் அவனது ஆடைகளின் நறுமணத்தை முகர்ந்து: இதோ, என் மகன் விடுகின்ற மணம் ஆண்டவர் ஆசீர்வதித்த விளை நிலத்தின் வாசனை போல் இருக்கின்றதே!
28. கடவுள் கருணை புரிந்து உனக்கு வானத்துப் பனியையும், பூமியின் செழுமையையும், மிகுந்த தானியத்தையும், திராட்சை இரசத்தையும் தந்தருள்வாராக.
29. நாடுகள் உனக்குப் பணிபுரியவும், மக்கள் உன்னை வணங்கவும் கடவர். நீ உன் சகோதரர்களுக்குத் தலைவனாய் இரு. உன் தாயாருடைய மக்களும் உனக்குமுன் பணியக் கடவார்கள். உன்னைச் சபிப்பவன் சபிக்கப்பட்டவனாகவும், உன்னை ஆசீர்வதிப்பவன் ஆசிகளால் நிறைந்தவனாகவும் இருக்கக்கடவான் என்று ஆசீர்வதித்தான்.
30. ஈசாக் இவ்வார்த்தைகளைச் சொல்லி முடிக்குமுன்பே யாக்கோபு வெளியே போனான்.
31. போனவுடனே எசாயூ வந்து, தான் சமைத்திருந்த வேட்டைப் பொருட்களைத் தந்தைக்கு முன் வைத்து: அப்பா, எழுந்திரும். உமது மகனுடைய வேட்டைப் பொருட்களை உண்ணும். பிறகு என்னை ஆசிர்வதியும் என்றான்.
32. ஈசாக் அவனை நோக்கி: என்ன! நீ யார்? என, அவன்: நான் உம்முடைய மூத்த மகனாகிய எசாயூ என்றான்.
33. ஈசாக் மிகவும் வியப்புற்று, அதிக ஆச்சரியம் அடைந்தவனாய் அப்படியானால் வேட்டையாடிச் சமைத்தவற்றை என்னிடம் கொண்டு வந்தவன் யார்? நீ வருமுன் அவை எல்லாவற்றையும் நான் உண்டு, அவனை ஆசிர்வதித்தேன். அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே இருப்பான் என்றான்.
34. எசாயூ தந்தையின் வார்த்தைகளைக் கேட்டு, கோப வெறி கொண்டு அலறினான்; பின் ஏங்கித் தயங்கி: அப்பா, என்னையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்றாள்.
35. அதற்கு அவன்: உன் தம்பி கபடமாய் வந்து உனக்கு உரித்தான ஆசீரைப் பெற்றுச் சென்று விட்டானே என்று சொன்னான்.
36. அதைக் கேட்ட எசாயூ யாக்கோபு என்னும் பெயர் அவனுக்குப் பொருத்தமே. ஏனென்றால், அவன் இரு முறை என்னை வஞ்சித்துள்ளான். மூத்த மகனுக்குரிய என் உரிமையைப் பறித்துக் கொண்டான். இப்பொழுது எனக்கு உரிய ஆசீரையும் கவர்ந்து விட்டான் என்று சொல்லி, திரும்பவும் தந்தையை நோக்கி: நீர் எனக்காக வேறு ஓர் ஆசிர் வைத்துக் கொள்ளவில்லையோ என்று கேட்டான்.
37. அதற்கு, ஈசாக்: நான் அவனை உனக்குத் தலைவனாக ஏற்படுத்தியுள்ளேன். அவன் சகோதரர் யாவரையும் அவனுக்கு அடிமைப்படுத்தியுள்ளேன். அவனைத் தானியத்தினாலும் திராட்சை இரசத்தினாலும் நிரப்பியுள்ளேன். அவை தவிர என் மகனே, நான் உனக்குச் செய்யத் தக்கது என்ன என, எசாயூ அவனை நோக்கி:
38. அப்பா, உம்மிடம் ஒரே ஆசீர்தானோ இருக்கிறது? என்னையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன் என்றான்; இதனைச் சொல்லி அலறிப் பதறி அழுதான்.
39. ஈசாக் மனமுருகி: உன் ஆசீர் பூமியின் செழுமையிலும் வானத்திலிருந்து பெய்யும் பனியிலும் இருக்கும்.
40. நீ உன் வாளினாலே வாழ்க்கை நடத்தி உன் தம்பிக்குப் பணிபுரிவாய். ஆனால் ஒரு காலம் வரும். (அப்பொழுது) நீ அவனுடைய அதிகாரத்தின் நுகத்தடியை உன் கழுத்தினின்று உதறித் தள்ளி விடுவாய் என்றான்.
41. யாக்கோபு தந்தையின் ஆசிரைப் பெற்றிருந்ததினால் (அதுமுதல்) எசாயூ அவன் மீது தீராப் பகை வைத்திருந்தான். என் தந்தைக்காகத் துக்கிக்கும் நாள் வரும்; அப்போது நான் என் தம்பி யாக்கோபைக் கொன்று விடுவேன் என்று தன் உள்ளத்தில் உறுதி பூண்டான்.
42. இவை இரெபேக்காளுக்கு அறிவிக்கப்பட்டவுடனே, அவள் தன் மகன் யாக்கோபை அழைத்து: இதோ, உன் தமையன் எசாயூ உன்னைக் கொல்வதாக மிரட்டிப் பேசினான்.
43. ஆகையால், மகனே, நீ என் வார்த்தையைக் கேட்டு எழுந்திருந்து, ஆரான் ஊருக்கு என் தமையனாகிய லாபானிடம் ஓடிப்போய்,
44. உன் அண்ணணுடைய கோபம் தணியும் வரை சில நாள் அவனிடம் இருக்கக்கடவாய்.
45. தனக்கு விரோதமாய் நீ செய்ததை அவன் மறந்து கோபம் தீர்ந்த பின் நான் உனக்குச் சொல்லியனுப்பி, உன்னை அங்கிருந்து இவ்விடத்திற்கு அழைத்துக் கொள்வேன். நான் ஒரே நாளில் என் இரு புதல்வர்களையும் ஏன் இழந்து போக வேண்டும் என்றாள்.
46. பின் இரெபேக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் புதல்வியர் பொருட்டு என் வாழ்வே எனக்குச் சலிப்பாயிருக்கிறது. யாக்கோபும் இந்நாட்டுப் பெண்ணைக் கொண்டானாயின், உயிர் வாழ்ந்தும் பயனென்ன என்று சொன்னாள்.