1. இவ்வாறு விண்ணும் மண்ணும் அவற்றிற்கு அழகு தரும் யாவும் படைக்கப்பட்டு முடிந்தன.
2. கடவுள் தாம் ஏழாம் நாளிற்கு முன் செய்த வேலைகளையெல்லாம் முடித்து விட்டு ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார்.
3. மேலும் தாம் செய்ய நினைத்திருந்த வேலைகளையெல்லாம் செய்து விட்டு அந்நாளில் ஓய்வெடுத்தார். எனவே, அவ்வேழாம் நாளை ஆசிர்வதித்துப் பரிசுத்தமாக்கினார்.
4. இவையே விண்ணும் மண்ணும் படைக்கப் பெற்ற தொடக்கக்கால நிகழ்ச்சிகள் ஆகும்; அந்நாளில் ஆண்டவராகிய கடவுள் விண்ணையும் மண்ணையும் உண்டாக்கினார்.
5. இதற்கு முன் தரையில் இல்லாதிருந்த செடிகள் யாவற்றையும், இதற்கு முன் தரையில் வளர்ந்திராப் புற்பூண்டுகள் எல்லாவற்றையும் வயல் வெளிகளில் உண்டாக்கினார். உண்மையிலே அது வரை ஆண்டவராகிய கடவுள் பூமியின் மீது மழை பொழியச் செய்யவுமில்லை, நிலத்தை உழுவதற்கு ஒரு மனிதனும் இருந்ததுமில்லை.
6. ஆயினும், பூமியிலிருந்து தோன்றிய ஒரு நீருற்று பூமியெங்கும் பாய்ந்து கொண்டிருந்தது.
7. அப்படியிருக்க, ஆண்டவராகிய கடவுள் களிமண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே, மனிதன் உயிருள்ளவன் ஆனான்.
8. ஆண்டவராகிய கடவுள் ஆதியிலே ஓர் இன்ப வனத்தை நட்டிருந்தார். தாம் உருவாக்கின மனிதனை அதிலே வைத்தார்.
9. ஆண்டவராகிய கடவுள் அவ்வனத்திலே பார்வைக்கு அழகிய, நாவிற்கு இனிய கனிகள் கொண்டுள்ள பலவித மரங்களையும் மண்ணினின்று தோன்றச் செய்தார். மேலும், அந்த இன்ப வனத்தின் நடுவிலே வாழ்வளிக்கும் மரத்தையும், நன்மை தீமை அறியும் மரத்தையும் வளரச் செய்தார்.
10. அவ்வின்ப வனத்திற்குப் பாய ஒரு நதி அவ்வனத்திலிருந்தே புறப்பட்டு, அங்கிருந்து நான்கு தலையான ஆறுகளாகப் பிரிந்து போகிறது.
11. அவைகளில் ஒன்று பீசோன் என்பதாம். அது பொன் விளையும் பூமியாகிய எவிலாத் நாட்டையெல்லாம் சுற்றி ஓடுகிறது.
12. அந்நாட்டில் விளையும் பொன் மிகச் சுத்தமானது. அதுவுமின்றிக் குங்கிலியமும் ஒருவிதக் கோமேதக் கல்லும் அங்குக் கிடைக்கின்றன.
13. இரண்டாம் ஆற்றின் பெயர் யெகோன். இதுவே எத்தியோப்பிய நாடு முழுவதையும் சுற்றிச் செல்கிறது.
14. திகிரிஸ் என்பது மூன்றாம் ஆற்றின் பெயர். இது அசீரிய நாட்டை நோக்கிச் செல்கிறது. நான்காம் ஆற்றின் பெயர் யூஃப்ரத்தீஸ்.
15. ஆண்டவராகிய கடவுள் மனிதனை அழைத்து அவ்வின்ப வனத்தை உழுது பேணும்படி அவனை அங்கு விட்டு வைத்தார்.
16. அன்றியும் அவனை நோக்கிக் கட்டளையிட்டு, இவ்வின்ப வனத்திலுள்ள எல்லாவித மரங்களின் கனிகளையும் நீ உண்ணலாம்;
17. ஆனால், நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை உண்ணாதே; ஏனென்றால் அதை நீ உண்ணும் நாளிலே சாகவே சாவாய் என்று சொன்னார்.
18. மேலும், ஆண்டவராகிய கடவுள்: மனிதன் தனிமையாய் இருப்பது நன்றன்று; ஆதலால் அவனுக்குச் சரிநிகரான ஒரு துணைவியை அவனுக்கென உண்டாக்குவோம் என்றார்.
19. ஆண்டவராகிய கடவுள் பூமியின் எல்லா வித மிருகங்களையும் வானத்துப் பறவைகள் அனைத்தையும் மண்ணினின்று படைத்த பின்னர், அவற்றிற்கு ஆதாம் என்னென்ன பெயர் இடுவானென்று பார்க்க அவற்றையெல்லாம் அவனிடம் கூட்டி வந்தார். ஏனென்றால் அந்த உயிரினங்களுக்கு ஆதாம் எந்தப் பெயரிட்டானோ அதுவே அவற்றிற்குப் பெயராய் அமைந்தது.
20. அவ்வாறே ஆதாம் எல்லாக் கால்நடைகளுக்கும், வானத்துப் பறவைகளுக்கும், பூமியிலுள்ள எல்லா மிருகங்களுக்கும் தகுதியான பெயர்களை இட்டான். ஆனால் ஆதாமுக்கு ஒத்த துணை ஒன்றும் தென்படவில்லை.
21. அப்போது ஆண்டவராகிய கடவுள் ஆதாமுக்கு ஆழ்ந்த தூக்கம் வரச் செய்தார். அவன் அவ்வாறு தூங்கிக் கொண்டிருந்த போது கடவுள் அவனுடைய விலாவெலும்புகளில் ஒன்றை எடுத்து, அவ்வாறு எடுத்த இடத்தைச் சதையினால் மூடினார்.
22. பின்னர் ஆண்டவராகிய கடவுள் ஆதாமிடமிருந்து எடுத்த விலாவெலும்பை ஒரு பெண்ணாகச் செய்து, அந்தப் பெண்ணை ஆதாமிடம் அழைத்துக் கொண்டு வந்தார்.
23. ஆதாம்: இவள் என் எலும்புகளின் எலும்பும் மாமிசத்தின் மாமிசமுமாய் இருக்கிறாள்; இவள் மனிதனிடத்தினின்று எடுக்கப்பட்டவளாதலால் மனுசி எனப்படுவாள் என்றான்.
24. இதன் பொருட்டு மனிதன் தன் தந்தையையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடு ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே மாமிசமாய் இருப்பார்கள், (என்று சொன்னார்.)
25. ஆதாம், அவன் துணைவி ஆகிய இருவரும் நிருவாணமாய் இருந்தார்கள்; இருந்தும் அவர்கள் வெட்கம் என்பதை அறியாதிருந்தார்கள்.