1. மாலை வேளையில் ஆண்டவரின் தூதர் இருவர் சொதோமுக்கு வந்தனர். அப்பொழுது லோத் நகரின் தலை வாயிலில் உட்கார்ந்திருந்தான். அவன் அவர்களைக் கண்டவுடன் எழுந்து அவர்களுக்கு எதிர் கொண்டு சென்று முகம் குப்புறவிழுந்து வணக்கம் புரிந்தான்.
2. பிறகு: ஐயன்மீர், அருள் கூர்ந்து அடியேன் வீட்டுப் பக்கமாய் நீங்கள் வந்து இரவு தங்கி கால்களைக் கழுவி, காலையிலே புறப்பட்டு உங்கள் வழிப் பயணத்தைத் தொடரலாம், என்று உபசரிக்க, அவர்கள்: பரவாயில்லை; தெருவிலே இரவைக் கழிப்போம் என்று மறுமொழி சொன்னார்கள்.
3. அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுத் தன் வீட்டிற்கு வரும்படி செய்தான். ஆகவே, அவர்கள் திரும்பி அவனிடத்திற்கு வந்து உள்ளே சென்ற போது லோத் அவர்களுக்கு ஒரு விருந்து செய்து புளியாத அப்பம் சுட்டான். அவர்களும் சாப்பிட்டார்கள்.
4. பின் அவர்கள் துயில் கொள்ளுமுன் நகர வாயில்களில் சிறுவர் முதல் கிழவர் வரை நகரின் எல்லா ஆடவர்களும் ஒருங்கே வந்து வீட்டைச் சூழ்ந்து கொண்டு, லோத்தைக் கூப்பிட்டு:
5. இன்று மாலை உன்னிடத்தே வந்த ஆடவர் எங்கே? நாங்கள் அவர்களோடு சற்றுச் சரசமாடும்படி அவர்களை இங்கே கொண்டு வா என்றனர்.
6. லோத் வீட்டிற்கு வெளியே வந்து, தன் பின்னால் கதவைச் சாத்திக்கொண்டு: என் சகோதரரே, வேண்டாம்.
7. உங்களைக் கெஞ்சி மன்றாடுகிறேன்: அத்தகைய தீச்செயல் செய்ய வேண்டாம்,
8. இது வரை ஆண் தொடர்பு அறியாத புதல்வியர் இருவர் எனக்கு உண்டு. உங்கள் விருப்பப்படி அவர்களை அழிம்பு செய்வதாயினும் செய்யுங்கள்; இந்த ஆடவருக்கு மட்டும் ஒன்றும் செய்யாதீர்கள். ஏனென்றால், அவர்கள் என் வீட்டில் தங்க வந்திருக்கின்றார்கள் என்றான்.
9. அதற்கு அவர்கள்: நீ அப்பாலே போ என்றனர். மீண்டும் அவனை நோக்கி: இவ்விடத்திற்கு அந்நியனாய் வந்த நீ எங்களுக்கு நியாயம் கூறத் துணிந்ததென்ன? பொறு; அவர்களுக்குச் செய்வதை விட உனக்கு அதிகத் தீங்கு இழைப்போம் என்று சொல்லி, லோத்தைக் கொடுமையாய் நெருக்கிக் கதவை உடைக்க முயலுகையில்,
10. இதோ, (வீட்டினுள் இருந்த) அவ்வாடவர் கையை வெளியே நீட்டி லோத்தைப் பிடித்து உள்ளே இழுத்துக் கதவைப் பூட்டினர்.
11. பின் சிறுவர் முதல் பெரியோர் வரை வெளியே இருந்தவர்கள் அனைவரும் கண் பார்வை இழந்து போகும்படி செய்ததனால், அவர்கள் கதவைக் காணக் கூடாமல் போயிற்று.
12. மேலும் அவர்கள் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் உனக்கு உறவினர் யாரேனும் இருக்கிறார்களோ? மருமகனோ, புதல்வர்களோ, புதல்விகளோ- உன் உறவினர் யாவரையும் இவ்வூரிலிருந்து உன்னுடன் அழைத்துக் கொண்டு போ.
13. எனென்றால், நாங்கள் இந்த ஊரை அழிக்கப் போகிறோம். அவர்களுடைய (பாவங்களின்) ஆரவாரம் ஆண்டவர் திரு முன் பெருகிப் போயிற்று. இவர்களை அழிக்கும்படி அவர் எங்களை அனுப்பியிருக்கிறார் என்றனர்.
14. உடனே லோத் வெளியே போய்த் தன் புதல்விகளை மணந்து கொள்ளவிருந்த தன் மருமக்களோடு பேசி: ஆண்டவர் இந்த இடத்தை அழிக்கப் போகிறார். ஆதலால், நீங்கள் எழுந்திருங்கள்; இவ்விடத்தை விட்டுப் புறப்படுங்கள் என்றான். ஆனால் லோத் தங்களைக் கேலி செய்வது போல் (அது) அவர்களுக்குத் தோன்றியது.
15. பொழுது விடியும் வேளையில் ஆண்டவரின் தூதர்கள் அவனை அவசரப்படுத்தி: நீ எழுந்திரு. உன் மனைவியையும் உன் இரு புதல்விகளையும் கூட்டிக் கொண்டு போ. இல்லையேல், இந் நகரின் அக்கிரமத் (தண்டனையிலே) நீயும் அகப்பட்டு அழிவாய் என்றார்கள்.
16. அவன் தயங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு, அவர்கள் அவனையும் அவன் மனைவியையும் இரு புதல்விகளையும் கையால் பிடித்தார்கள். ஏனென்றால், ஆண்டவர் லோத்தின் மீது இரக்கம் வைத்திருந்தார்.
17. அவர்கள் அவனைக் கூட்டிக்கொண்டுபோய் நகருக்கு வெளியே விட்டார்கள். அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் உயிர் காக்க ஓடிப்போ. திரும்பிப் பார்க்காதே. சுற்றுப் புறத்தில் தங்காதே. நகரோடு கூட நீயும் அழியாதபடிக்கு மலையில் சரணடையக்கடவாய் என்றார்கள்.
18. லோத் அவர்களை நோக்கி: ஆண்டவரே, ஒரு வார்த்தை சொல்கிறேன், கேளும்.
19. அடியேன் உம் முன்னிலையில் அருள் அடைந்தேனே; என் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு நீர் அளவில்லாத தயவு புரிந்தீரே; ஆனால், மலைக்கு ஓடிப்போக என்னால் இயலாது. போனாலும், தீங்கு என்னை அங்கே தொடருமாயின் செத்துப் போவேனே!
20. அதோ, அந்தச் சிற்றூர் தெரிகிறதே, அது அருகிலிருப்பதனால் எளிதாய் அங்கே போய்ச் சேரலாம். சேர்ந்ததால் என் உயிர் பிழைக்கும். அது சிறிய ஊரல்லவா? அவ்விடத்தில் சாவுக்குத் தப்பிப் பிழைப்பேனன்றோ என்றான்.
21. அதற்கு அவர்: நல்லது, அப்படியே ஆகட்டும். இக்காரியத்திலும் உனக்குக் கருணை புரிந்தோம். நீ சொன்ன ஊரை நாம் அழிக்க மாட்டோம்.
22. நீ அங்கே விரைந்தோடித் தப்பித்துக்கொள். எனென்றால், நீ அவ்விடம் சேருமட்டும் நாம் ஒன்றும் செய்யக் கூடாதிருக்கிறது என்றார். இதனால் அந்த நகரத்துக்கச் செகோர் என்னும் பெயர் வழங்கிற்று.
23. லோத் செகோருக்குள் புகுந்தபோது பூமியின் மேல் சூரியன் உதித்தது.
24. அப்பொழுது ஆண்டவர் வானத்திலிருந்து சொதோம் கோமோரா நகரங்களின் மேல் தெய்வீக கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார்;
25. அந் நகரங்களையும், அவற்றைச் சுற்றிலுமுள்ள ஊர் முழுவதையும், அவற்றின் எல்லாக் குடிகளையும், நிலத்தின் எல்லாப் பயிர்களையும் அழித்தார்.
26. அப்பொழுது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். உடனே உப்புச் சிலையாக மாறினாள்.
27. ஆபிரகாம் காலையில் எழுந்திருந்து, தாம் ஏற்கனவே ஆண்டவர் முன்னிலையில் நின்று கொண்டிருந்த இடத்திற்குப் போய்,
28. சொதோம் கொமோரா நகரங்கள் இருந்த திசையையும் அவைகளுக்குச் சுற்றிலுமுள்ள நாட்டையும் நோக்கிப் பார்த்த போது, சூளையில் எழும்பும் புகை போலப் பூமியிலிருந்து தீப்பொறி கிளம்பக் கண்டார்.
29. ஆனால், அந்நாட்டின் நகரங்களை அழித்தபோது, கடவுள் ஆபிரகாமின் பொருட்டு, லோத் குடியிருந்த நகரின் அழிவிலிருந்து அவனைக் காப்பாற்றினார்.
30. லோத் சொகோரினின்று மலைமேல் ஏறி அங்குத் தங்கினான். அவனோடு அவன் இரு புதல்விகளும் சென்றிருந்தனர். (ஏனென்றால், அவன் செகோரில் குடியிருக்க அஞ்சினான்.) அவ்விடத்தில் அவனோடுகூட அவன் இரு புதல்விகளும் ஒரு குகையில் வாழ்ந்து வந்தனர்.
31. அப்படியிருக்க, மூத்த புதல்வி தன் சகோதரியை நோக்கி: நம் தந்தை வயது சென்றவர். உலகமெங்கும் நடக்கிற முறைமையின்படி நம்மை மணந்து கொள்ளப் பூமியில் ஆடவன் ஒருவனும் இல்லை.
32. தந்தை வழியாவது நமக்குச் சந்ததி உண்டாகும்படி அவருக்கு மதுபானம் கொடுத்து அவரோடு படுப்போம், வா என்றாள்.
33. அவ்வாறே அவ்விரவில் அவர்கள் தங்கள் தந்தைக்கு மயக்க மூட்டும் பானம் கொடுத்தனர். பிறகு மூத்ததவள் உள்ளே புகுந்து தன் தந்தையோடு படுத்தாள். ஆனால், அவள் வந்து தன்னுடன் படுத்தும் பின் எழுந்து போனதும் அவனக்குத் தெரியாது.
34. மறுநாள் மூத்தவள் இளையவளை நோக்கி: இதோ, நேற்றிரவு நான் தந்தையோடு படுத்தேன். இன்றிரவும் அவருக்கு மதுவைக் கொடுப்போமாக. நம் தந்தை வழியாவது நமக்குச் சந்ததி உண்டாகும் வண்ணம், நீ போய் அவரோடு படுப்பாய் என்றாள்.
35. அப்படியே அன்றிரவும் தங்கள் தந்தைக்கு மதுபானம் குடிக்கக் கொடுத்தார்கள். இளைய புதல்வி அவரோடு படுத்தாள். இம்முறையும் அவள் படுத்ததையும் எழுந்து போனதையும் அவன் உணரவேயில்லை.
36. இவ்வாறு லோத்தின் புதல்விகள் இருவரும் தங்கள் தந்தையாலேயே கருத்தரித்தனர்.
37. பின் மூத்தவள் ஒரு புதல்வனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்னும் பெயரிட்டாள். அவன் இன்று வரை இருக்கிற மோவாப்பித்தாரக்குத் தந்தையானான்.
38. இளையவளும் ஒரு புதல்வனைப் பெற்று: இவன் என் இனத்தின் புதல்வன் என்று சொல்லி, அவனுக்கு ஆமோன் என்னும் பெயரைச் சூட்டினாள். அவன் இன்று வரை இருக்கிற ஆமோனித்தாருக்கு மூதாதை ஆனான்.