1. அக்காலத்தில் நிகழ்ந்ததாவது: சென்னார் அரசன் அமிரப்பேல், போந்த் அரசன் அரியோக், எலாமித்தாரின் அரசன் கொதொர்ல கோமொர், கோயிம் அரசன் தாதால் (ஆகிய) இவர்கள் எல்லாரும் சொதோமின் அரசனான பாரா,
2. கொமோர் அரசனான பெற்சா அதம அரசனான சென்னாபு, செபொயீம் அரசனான செமெபேர், பாலாவின் அரசனான செகோர் ஆகியோரை எதிர்த்துப் போர் புரிந்தனர்.
3. இன்று உப்புக் கடலாயிருக்கும் அப்பகுதி, முன்பு ஆரணியப் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது. அவ்விடத்தில் இந்த அரசர்களெல்லாம் ஒன்று கூடினர்.
4. ஏனென்றால், இவர்கள் பன்னிரண்டு ஆண்டுக்காலமாகக் கொதொர்ல கோமோருக்கு அடங்கி நடந்த பின்னர், பதின்மூன்றாம் ஆண்டில் அவனை விட்டு விலகினர்.
5. ஆதலால் கொதொர்ல கோமோர் பதினான்காம் ஆண்டில் தன்னைச் சேர்ந்த அரசர்களுடன் வந்து, அஸ்தரோட்கர்ணாயீமில் இருந்த இராப்பாயீத்தரையும், அவர்களோடு சுசீத்தரையும், சாவேகரியத்தாயீமில் இருந்த ஏமீத்தரையும் தோற்கடித்து,
6. செயீர் என்ற மலைகளில் இருந்த கோறையர்களையும் பாலை நிலத்திலுள்ள பாரன் சமவெளி வரை முறியடித்தான்.
7. மேலும் அவர்கள் திரும்பி காதேஸ் என்னும் பெயர் கொண்ட மிஸ்பாத் ஊருணிவரை வந்து, அமலேசித்தார் குடியிருந்த நாடு முழுவதையும், அச்சோந்தமாரில் குடியிருந்த அமோறையருடைய நாட்டையும் பாழாக்கினர்.
8. அப்போது சொதோம், கொமோரா, அதம, சொபோயீம் முதலியவற்றின் அரசர்களும், செகோர் என்னும் பெயர் கொண்ட பாலாவின் அரசனும் புறப்பட்டு, ஆரணியம் என்று சொல்லப்படும் பள்ளளத்தாக்கில் அவர்களை எதிர்த்துப் போராடினர்.
9. அதாவது, எலாமித்தாரின் அரசனான கொதொர்ல கோமோர், கோயிமின் அரசனான தாதால், சென்னார் அரசனான அமிரப்பேல், போந்த் அரசனான அரியோக் ஆகிய இந்நான்கு அரசர்களோடும் அந்த ஐந்து அரசர்கள் போர் புரிந்தனர்.
10. ஆரணியம் என்னும் பள்ளத்தாக்கிலே நிலக்கீல் ஊறும் கிணறுகள் பல இருந்தன. சொதோம், கொமோரா அரசர்கள் புற முதுகு காட்டி ஓடி அவற்றினுள் விழுந்தனர். மற்றவர்கள் மலைக்கு ஓடிப் போயினர்.
11. அப்போது (வெற்றியடைந்த அரசர்கள்) சொதோம், கொமோரா நகர மக்களின் சொத்துக்கள் முழுவதையும் உணவுப் பொருட்கள் எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு போனார்கள்.
12. அத்துடன் சொதொமில் வாழ்ந்தவனும் ஆபிராமின் சகோதரன் மகனுமாகிய லோத்தையும் அவன் சொத்துக்களையும் கைப்பற்றிப் போனார்கள்.
13. தப்பி ஓடிப் போயிருந்த ஒருவன், எபிரோயனான ஆபிராமிடம் வந்து அந்தச் செய்தியை அறிவித்தான். அப்பொழுது (ஆபிராம்) தன்னோடு உடன்படிக்கை செய்திருந்த எஸ்கோலுக்கும் ஆனேருக்கும் சகோதரனான மம்பிரேயின் பள்ளத்தாக்கில் குடியிருந்தான்.
14. தன் சகோதரன் லோத் பிடிபட்ட செய்தியைக் கேட்டறிந்தவுடனே, ஆபிராம் தன் வீட்டில் பிறந்த ஊழியர்களுள் போருக்குத் தகுதியான முந்நூற்றுப் பதினெட்டு பேர்களைக் கூட்டிக் கொண்டு, டான் என்னும் ஊர்வரைப் (பகைவரைப்) பின்தொடர்ந்து போனான்.
15. மேலும் தன் துணைவர்களை இரண்டு அணிகளாகப் பிரித்து, இரவு வேளையில் அவர்கள் மேல் பாய்ந்து வெட்டி, தமாசுக்கு இடப்பக்கத்திலுள்ள ஓபாவரை அவர்களைத் துரத்தியடித்தான்.
16. அப்படி (ஆபிராம்) அவர்களின் எல்லாப் பொருட்களையும், தன் சகோதரனான லோத்தையும் அவன் சொத்துக்களையும் பெண்களையும் மக்களையும் திருப்பிக் கொண்டு வந்தான்.
17. பின் அவன் பொதொர்ல கோமோரையும், அரசக் கணவாய் என்னப்பட்ட சாவே பள்ளத்தாக்கின் அரசர்களையும் முறியடித்துத் திரும்புகையில், சொதோம் அரசன் அவனைச் சந்திக்கச் சென்றான்.
18. மேலும், சாலேமின் அரசனும் உன்னத கடவுளின் குருவுமாய் இருந்த மெல்கிசெதேக், அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் கைகளில் ஏந்தி வந்து, அவனை ஆசீர்வதித்து:
19. விண்ணையும் மண்ணையும் படைத்த உன்னத கடவுளால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படக் கடவானாக.
20. உன்னை ஆதரித்து, உன் பகைவர்களை உன் கையில் ஒப்படைத்த உன்னத கடவுள் வாழ்த்தப்படுவாராக (என்றார்). அவருக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கு கொடுத்தான்.
21. பின் சொதோம் அரசன் ஆபிராமை நோக்கி: நீர் மனிதர்களை மட்டும் எனக்குத் தாரும்; மற்ற பொருட்களையெல்லாம் நீர் எடுத்துக் கொள்ளும் என்றார்.
22. அதற்கு அவன்: இதோ, விண்ணையும் மண்ணையும் ஆளும் அதி உன்னத கடவுளாயிருக்கிற ஆண்டவருக்கு முன் என் கையை உயர்த்தி,
23. ஆபிராமைச் செல்வனாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு, நான் ஒரு பாவு நூலாகிலும், செருப்பின் வாரையாகிலும், உமக்குண்டான பொருட்களில் யாதொன்றையாகிலும் எடுத்துக் கொள்ளமாட்டேன்.
24. என் இளைஞர் உண்டதையும், என்னுடன் வந்த ஆனேர், எஸ்கோல், மம்பிறே ஆகியோரின் பங்கையும் தவிர, (நான் யாதொன்றையும் எடுத்துக் கொள்ளேன்). இவர்கள் தத்தம் பங்கை எடுத்துக்கொள்வார்கள் என்றான்.