1. கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து உரிமை வாழ்வு நமக்கு அளித்தார். அதிலே நிலைத்திருங்கள். அடிமைத்தனத்தின் நுகத்தைத் திரும்பவும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
2. சின்னப்பனாகிய நான் உங்களுக்குச் சொல்வது: நீங்கள் விருத்தசேதனம் செய்து கொண்டால், கிறிஸ்துவினால் உங்களுக்குப் பயனே இல்லை.
3. விருத்தசேதனம் செய்து கொள்ளும் ஒவ்வொருவனுக்கும், மீளவும் நான் எச்சரித்து வலியுறுத்துவது. அவ்வாறு செய்பவன் யூதச் சட்டம் முழுவதையும் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டவன் ஆவான்.
4. அச்சட்டத்தால் இறைவனுக்கு ஏற்புடையவராகப் பார்க்கும் நீங்கள் கிறிஸ்துவுடன் உறவற்றுப் போய்விட்டீர்கள்; அருளாட்சியினின்று நிலைபெயர்த்துவிட்டீர்கள்.
5. நாமோ விசவாசத்தால் இறைவனுக்கு எற்புடையவராக்கப்படுவோம் என்னும் நம்பிக்கை நிறைவேறுமென ஆவலோடு காத்திருக்க ஆவியானவர் நம்மைத் தூண்டுகிறார்.
6. கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்கிறவர்களுக்கு விருத்தசேதனமும் பயனற்றது; விருத்தசேதனமின்மையும் பயனற்றது, ஒன்றும் செய்ய இயலாது. தேவைப்படுவது அன்பின் வழியாய்ச் செயலாற்றும் விசுவாசமே.
7. நீங்கள் நன்றாகத்தான் முன்னேறி வந்தீர்கள்; உண்மைக்குக் கீழ்ப்படியாதபடி உங்களைத் தடுத்தவன் யார்?
8. இவ்வாறு செய்ய நீங்கள் தூண்டப்பட்டது உங்களை அழைத்த இறைவனின் செயலால் அன்று.
9. சிறிதளவு புளிப்புமாவு, கலவை முழுவதையும் புளிக்கச் செய்கிறது.
10. வேறுபட்ட கொள்கை எதையும் ஏற்க மாட்டீர்கள் என்பது ஆண்டவருக்குள் உங்களைப்பற்றி எனக்குள்ள உறுதியான நம்பிக்கை. ஆனால் உங்கள் மனத்தைக் குழப்புகிறவன் யாராயிருந்தாலும், அவன் தண்டனைத் தீர்ப்பை அடைவான்.
11. சகோதரர்களே, விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டுமென நான் போதிப்பதாகச் சொல்லுகிறார்களே, அப்படியானால் நான் ஏன் இன்னும் துன்புறுத்தப்படவேண்டும்? நான் அவ்வாறு போதித்தால், சிலுவையால் வரும் இடறலுக்கு இடமே இல்லையே.
12. உங்கள் உள்ளங்களில் குழப்பம் உண்டாக்குகிறவர்கள் தங்களை அண்ணகராகவே ஆக்கிக்கொள்ளட்டுமே.
13. நீங்களோ, சகோதரர்களே, உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அந்த உரிமை, ஊனியல்பின் இச்சைகளுக்கு ஏற்ற வாய்ப்பாகும்படி விட்டுவிடாதீர்கள். மாறாக ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்.
14. உன்மீது நீ அன்பு காட்டுவது போல, உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவேறுகிறது.
15. ஆனால், நீங்கள் ஒருவரையொருவர் காட்டு விலங்குகளைப் போல் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால், எச்சரிக்கை! ஒருவரால் ஒருவர் அழிந்துபோவீர்கள்.
16. ஆகவே நான் சொல்வது: ஆவியின் ஏவுதலின்படி நடங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்றமாட்டீர்கள்.
17. அந்த இயல்பு இச்சிப்பது தேவ ஆவிக்கு முரணானது. தேவ ஆவி விரும்புவதோ அவ்வியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று முரணாய் உள்ளன; அதனால் தான் விருப்பமானதை உங்களால் செய்யமுடியாமல் இருக்கிறது.
18. நீங்கள் தேவ ஆவியினால் இயக்கப்பட்டால் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவர்களாய் இருக்க மாட்டீர்கள்.
19. ஊனியல்பின் செயல்கள் யாவர்க்கும் தெரிந்தவையே. அவை பின் வருமாறு: கெட்ட நடத்தை. அசுத்தம்,
20. காமவெறி, சிலைவழிபாடு, பில்லிசூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை,
21. சினம், கட்சி மனப்பான்மை பிரிவினை. பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை. இத்தகையவற்றில் ஈடுபடுவோர்க்குக் கடவுளின் அரசு உரிமையாகாது என்று நான் ஏற்கனவே சொன்னதை இப்போதும் சொல்லி எச்சரிக்கிறேன்.
22. ஆனால், தேவ ஆவி விளைவிக்கும் பலன்களாவன: அன்பு, மகிழ்ச்சி, அமைதி பொறுமை, பரிவு, நன்னயம், விசுவாசம், சாந்தம், தன்னடக்கம்.
23. இவையுள்ள இடத்தில் சட்டம் எத்தடையும் விதிப்பதற்கு இடமில்லை. .
24. கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள்.
25. ஆவியானவரே நமக்கு உயிர் ஊட்டுபவராயின், ஆவியானவர் காட்டும் நெறியிலேயே நடப்போமாக.
26. வீண் பெருமையைத் தேடாமலும், ஒருவர்க்கொருவர் எரிச்சல் ஊட்டாமலும், ஒருவரைப் பார்த்து ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக.