1. அடிமைத்தனத்தினின்று திரும்பியிருந்த மக்கள் இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவருக்கு ஆலயம் கட்டி வந்ததை யூதா, பென்யமீன் குலத்தாரின் பகைவர் அறிய வந்தனர்.
2. எனவே அவர்கள், ஜெரோபாபேலிடமும் குலத்தலைவர்களிடமும் வந்து, "உங்களோடு சேர்ந்து நாங்களும் வேலை செய்வோம். ஏனெனில், நீங்கள் வழிபட்டுவரும் கடவுளையே நாங்களும் வழிபட்டு வருகிறோம். அசீரிய அரசன் ஆசோர் தத்தான் எங்களை இங்கு கொண்டு வந்த நாள் முதல், நாங்கள் அவருக்கே பலி செலுத்தி வருகிறோம்" என்று சொன்னார்கள்.
3. ஆனால் ஜெரோபாபேலும் யோசுவாவும் இஸ்ராயேலின் குலத்தலைவர்களான மற்றவர்களும் அவர்களைப் பார்த்து, "உங்களோடு சேர்ந்து நாங்கள் எங்கள் கடவுளுக்கு ஆலயம் கட்டுவது முறையன்று; மாறாக, பாரசீக அரசனான சீருஸ் கட்டளையிட்டுள்ளவாறு, நாங்கள் மட்டுமே எங்கள் கடவுளான ஆண்டவருக்கு ஆலயம் எழுப்புவோம்" என்று மறுமொழி கூறினர்.
4. ஆதலால், அந்நாட்டு மக்கள், யூதாவின் மக்கள் செய்து வந்த ஆலய வேலையைத் தடுக்கவும், அதற்கு இடையூறாய் நிற்கவும் தொடங்கினர்.
5. மேலும் இவர்கள், பாரசீக அரசன் சீருசின் ஆட்சிக்காலம் முழுவதும், பாரசீக அரசனான தாரியுஸ் ஆட்சிக்கு வருமளவும், அவர்களின் திட்டங்களைச் சீர்குலைக்கும் வண்ணம், சிலரைத் தூண்டிவிட்டு, அவர்களுக்குக் கையூட்டுக் கொடுத்து வந்தனர்.
6. அசுவேருஸ் அரியணை ஏறிய போது, யூதாவிலும் யெருசலேமிலும் குடியிருந்தவர்களுக்கு எதிராக அவர்கள் குற்றம் சாட்டினர்.
7. அரசன் அர்தக்சேர்செகின் ஆட்சியின் போது, பெசலாமும் மித்திரீ தாத்தும் தபெயேலும் இவர்களைச் சேர்ந்த மற்றவர்களும், பாரசீக அரசன் அர்தக்சேர்செசுக்கு ஒரு மனு எழுதினர். அது சீரியா மொழியிலும் சீரியா எழுத்திலும் எழுதப்பட்டிருந்தது.
8. ரேகும் பேயெல்தேயெமும், எழுத்தன் சம்சாயியும் யெருசலேமிலிருந்து அரசன் அர்தக்சேர்செசுக்குச் கீழ்கண்டவாறு ஒரு மனு எழுதினர்.
9. ரேகும் பேயெல்தேயெம், எழுத்தன் சம்சாயி, அவர்களைச் சேர்ந்தவர்களாகிய தீனெயர், அபற்சதாக்கேயர், தெற்பாலையர், அபற்சேயர், அர்க்கேவியர், பபிலோனியர், சூசங்கியர், தெகாவியர், எலாமியர் ஆகிய அனைவரும்,
10. மாட்சிமையும் மேன்மையும் பொருந்திய அசேனபார் கூட்டி வந்து, சமாரியாவின் நகரங்களிலும் நதியின் அக்கரையிலுள்ள மற்ற நாடுகளிலும் சமாதானத்தோடு குடியேறி வாழச்செய்திருந்த மற்ற மக்களுமே அம்மனுவை எழுதினர்.
11. அவர்கள் அர்தக்சேர்செஸ் மன்னனுக்கு எழுதி அனுப்பிய மனு வருமாறு: "அரசர் அர்தக்சேர்செஸ் அவர்களுக்கு நதிக்கு அக்கரையில் வாழும் உம் ஊழியர் நாங்கள் வாழ்த்துக் கூறுகிறோம்.
12. அரசர் அறியவேண்டியதாவது: உம்மிடமிருந்து எங்களிடம் வந்துள்ள யூதர்கள், கலகம் மிகுந்த, தீங்கு நிறைந்த நகரான யெருசலேமில் கூடி, அதன் மதில்களைத் திரும்பக் கட்டி வருகிறார்கள்.
13. இவ்வாறு, இந்நகரும் அதன் மதில்களும் கட்டப்படுமானால், அவர்கள் இனி உமக்குத் திறை செலுத்தமாட்டார்கள்; வரி, தீர்வை முதலியவற்றையும் கொடுக்கமாட்டார்கள். அதனால், அரசருக்குரிய வருமானம் குறையும் என்பதையும் அரசருக்கு அறிவிக்க விரும்புகின்றோம்.
14. நாங்களோ உமது அரண்மனையில் உண்ட உப்பை நினைவில் கொண்டிருப்பதாலும், அரசருக்குத் தீங்கு இழைப்பது பெருங்குற்றம் என்று எண்ணுவதாலும், நாங்கள் இம்மனுமூலம் அரசருக்கு இதைத் தெரியப் படுத்தியிருக்கின்றோம்.
15. எனவே, உம்முடைய முன்னோரின் வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால், இந்நகர் அரசர்களுக்கும் நாடுகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய, கலகக்கார நகர் என்றும், அதில் தொன்றுதொட்டுப் போர்கள் நிகழ்ந்து வந்துள்ளன என்றும், அதன்பொருட்டே அது அழிவுற்றது என்றும் அதில் படித்து அறியலாம்.
16. ஆகையால், இந்நகர் எழுப்பப்பட்டு, அதன் மதில்கள் கட்டப்படுமாயின், நதிக்கு அக்கரையில் உள்ள நாடுகள் உமக்குச் சொந்தமாகா என்பதை அரசருக்குத் தெரிவிக்கின்றோம்".
17. அப்பொழுது, ரேகும் பேயெல்தேயெம், எழுத்தன் சம்சாயி ஆகியோருக்கும், சமாரியாவில் வாழ்ந்து வந்த இவர்கள் கூட்டத்தாருக்கும், நதிக்கு அக்கரையில் வாழ்ந்து வந்த மற்றவர்களுக்கும், வணக்கமும் சமாதானமும் கூறி, அரசன் எழுதி அனுப்பிய மறுமொழியாவது:
18. நீங்கள் அனுப்பிய மனு எம் முன்னிலையில் தெளிவாய் வாசிக்கப்பட்டது.
19. எனவே, (வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்க்கும்படி) கட்டளையிட்டோம். அப்பொழுது தொன்றுதொட்டு அந்நகர் அரசர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து வந்துள்ளது என்றும், அதிலே குழுப்பங்களும் போர்களும் இருந்து வந்துள்ளன என்றும் அறிய வந்தோம்.
20. மேலும் யெருசலேமில் மிக்க ஆற்றல் படைத்த அரசர்கள் இருந்திருக்கின்றனர்; இவர்கள் நதிக்கு அக்கரையிலுள்ள நாடுகளை எல்லாம் அடிமைப்படுத்தி, அவற்றினின்று திறை, வரி, தீர்வை முதலியவற்றை வாங்கிக் கொண்டிருந்தனர் என்றும் தெரிகிறது.
21. எனவே, இப்போது நமது முடிவைக் கேளுங்கள்: எம்மிடமிருந்து மறுகட்டளை பிறக்கும் வரை அந்த மனிதர்கள் அந்நகரைக் கட்டி எழுப்பாதபடி அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்.
22. இக்கட்டளையை நிறைவேற்றுவதில் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. இல்லாவிட்டால், அரசர்களுக்கு எதிராகத் தீய சக்திகள் சிறிது சிறிதாக வளரும்."
23. அர்தக்சேர்செஸ் அரசனின் கட்டளையானது ரேகும் பேயெல்தேயெம், எழுத்தன் சம்சாயி ஆகியோருக்கும் இவர்களுடைய கூட்டத்தாருக்கும் முன்பாக வாசிக்கப்பட்டது. அவர்கள் யெருசலேமிலிருந்த யூதர்களிடம் விரைந்து சென்று, தங்கள் ஆயுத பலத்தால் அவர்கள் வேலை செய்யாதபடி தடுத்தனர்.
24. எனவே, யெருசலேமில் கடவுளின் ஆலயவேலை தடைபட்டது. பாரசீக அரசன் தாரியுஸ் ஆட்சியின் இரண்டாம் ஆண்டு வரை இந்நிலை நீடித்தது.