1. பின்னர் அவர் என் காதுகளில் உரக்கக் கூவி, "நகரத்தின் கொலைஞர்களே, இங்கே வாருங்கள், உங்கள் கையில் கொலைக் கருவியை ஏந்திவாருங்கள்" என்று சொன்னார்.
2. இதோ, ஆறு கொலைஞர்கள் தத்தம் கைகளில் கொலைக் கருவியைப் பிடித்துக் கொண்டு, வடதிசையை நோக்கியிருக்கும் உயர்ந்த வாயிலின் வழியாய் வந்தார்கள்; அவர்களோடு கூடச் சணல் நூலாடையணிந்து, எழுதும் மைக்கூட்டை இடையில் வைத்திருந்த மனிதன் ஒருவன் இருந்தான்; இவர்கள் உள்ளே வந்து வெண்கலப் பீடத்தின் அருகில் நின்றார்கள்.
3. அப்பொழுது, இஸ்ராயேலின் ஆண்டவருடைய மகிமை கெருபீன் மேலிருந்து எழும்பி வீட்டின் வாயிற்படிக்கு வந்து நின்றது; சணல் நூலாடையணிந்து, இடையில் மைக்கூடு வைத்திருந்த மனிதனை ஆண்டவர் அழைத்தார்.
4. ஆண்டவர் அவனிடம், "நீ நகரமெல்லாம்- யெருசலேம் பட்டணம் முழுவதும் சுற்றி வந்து, அங்குச் செய்யப்படுகிற எல்லா அக்கிரமங்களுக்காகவும் வருந்திப் பெருமூச்சு விடுகிறவர்களின் நெற்றியில் அடையாளம் இடு" என்றார்.
5. நான் கேட்டுக் கொண்டிருக்கும் போதே மற்றவர்களிடம்: "நீங்கள் இவன் பின்னாலேயே பட்டணமெங்கும் போய் வெட்டுங்கள்; ஒருவரையும் தப்ப விடாதீர்கள்; மனமிரங்க வேண்டாம்.
6. கிழவர்களையும் இளைஞர்களையும் இளம் பெண்களையும் குழந்தைகளையும் பெண்களையும் கொன்று வீழ்த்துங்கள். ஆனால் எச்சசரிக்கை! நெற்றியில் அடையாளத்தைத் தாங்கியுள்ளவர்களைத் தொடாதீர்கள்; நமது பரிசுத்த இடத்திலிருந்தே இவ்வேலையைத் தொடங்குங்கள்" என்றார். அவ்வாறே அவர்கள் கோயிலுக்கு முன் இருந்த கிழவர்களை முதலில் வெட்டத் தொடங்கினார்கள்.
7. பின்பு அவர் அவர்களை நோக்கி, "கொலையுண்டவர்களின் உடலால் முற்றத்தை நிரப்பிக் கோயிலை அசுத்தப்படுத்துங்கள், புறப்பட்டுப் போய், பட்டணத்திலுள்ளவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.
8. எல்லாரையும் வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்த போது, நான் மட்டும் தனியாய் இருந்தேன்; அப்போது நான் முகங்குப்புற விழுந்து உரத்த குரலில், "ஐயோ, ஆண்டவராகிய இறைவா! உமது கோபத்தை யெருசலேமில் நிறைவேற்றி இஸ்ராயேலில் மீதியாய் விடப்பட்ட எல்லாரையுங் கூட அழிப்பீரோ?" என்று கத்தினேன்.
9. அவர் என்னைப்பார்த்து, "இஸ்ராயேல், யூதா வீட்டாரின் அக்கிரமம் நிரம்ப மிகுந்துவிட்டது; நாடு இரத்தப் பழியால் நிறைந்துள்ளது; பட்டணத்தில் அநீதி நிரம்பியுள்ளது; ஏனெனில் அவர்கள் 'ஆண்டவர் எங்களைக் காண்கிறார் அல்லர், ஆண்டவர் நாட்டினைக் கைவிட்டு விட்டார்' என்று சொல்லத் துணிந்தார்கள் அன்றோ!
10. ஆகையால் நமது கண் அவர்கள் மேல் இரக்கம் காட்டாது; நாம் அவர்கள் மீது தயை கூர மாட்டோம்: ஆனால் அவர்களுடைய செயல்களின் பலனை அவர்கள் தலை மேல் வரச் செய்வோம்" என்றார்.
11. அப்பொழுது, இதோ சணல் நூலாடை அணிந்து, இடையில் மைக்கூடு வைத்திருந்த மனிதன் வந்து, "நீர் எனக்குக் கட்டனையிட்டவாறே செய்து முடித்தேன்" என்றான்.