1. ஆண்டவரின் வாக்கு என்னிடம் உரைத்தது:
2. மனிதா, இஸ்ராயேல் நாட்டின் மலைகளுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி இறைவாக்குக் கூறு:
3. இஸ்ராயேல் நாட்டு மலைகளே, ஆண்டவராகிய இறைவன் வாக்கைக் கேளுங்கள். மலைகளுக்கும் குன்றுகளுக்கும் பாறைகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாமே உங்கள் மேல் வாளை வரச்செய்வோம், உயர்ந்த உங்கள் கொடுமுடிகளை அழிப்போம்.
4. உங்கள்மேல் கட்டப்பட்ட பீடங்களைப் பாழாக்குவோம்; கற்கூம்புகளை உடைத்தெறிவோம், உங்கள் நடுவில் கொலைசெய்யப்படுவோரை உங்கள் சிலைகளின் முன் எறிவோம்.
5. இஸ்ராயேல் மக்களுள் இறைந்தவர்களின் உடல்களை உங்கள் சிலைகளின் முன்பு போடுவோம்; அவர்களுடைய எலும்புகளை உங்கள் பீடங்களைச் சுற்றிலும் சிதறச் செய்வோம்.
6. நீங்கள் குடியிருக்கும் எல்லா நாடுகளிலும் நகரங்கள் பாழாகும்; சிலைகளுக்கென நீங்கள் எழுப்பிய கோயில்களும் பீடங்களும் பலிமேடைகளும் உங்கள் கற்கூம்புகளும் இடிந்து தகர்ந்து தரைமட்டமாகும்; உங்கள் வேலைப்பாடுகள் யாவும் தவிடுபொடியாகும்.
7. உங்கள் நடுவில் கொலை நடக்கும்; அப்போது நாமே உங்கள் ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
8. பல நாடுகளுக்கு நாம் உங்களைச் சிதறடிக்கும் போது பிற நாட்டவரின் வாளுக்குத் தப்பினவர்களை மீதியாக விட்டு வைப்போம்.
9. பிற நாட்டவரால் சிறைப்படுத்தப்பட்டு உங்களுள் உயிர் தப்பியவர்கள் நம்மை நினைத்துக்கொள்வார்கள்; ஏனெனில் நம்மை விட்டுச் சிலைகளைப் பின்தொடர்ந்து விபசாரம் செய்தவர்களின் கண்களும் இதயமும் வருந்தும்படி செய்தோம்; தாங்கள் செய்த எல்லா அக்கிரமங்களுக்காகவும், கட்டிக்கொண்ட பாவங்கள் யாவற்றுக்காகவும், மனம் வருந்தித் தங்களைத் தாங்களே வெறுப்பார்கள்.
10. இத்தீங்குகளை எல்லாம் செய்வோம் என ஆண்டவராகிய நாம் கூறியது பொய்யாகாது என்பதை அவர்கள் அபபொழுது அறிவார்கள்."
11. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "நீ உன் கையைத் தட்டி காலால் தரையை உதைத்துச் சொல்: 'அந்தோ! இஸ்ராயேல் வீட்டார் தாங்கள் செய்த எல்லா அக்கிரமங்களுக்காகவும் வாளாலும் பசியாலும் கொள்ளை நோயாலும் சாவார்கள்.
12. யெருசலேம் பட்டணத்திற்குத் தெலைவில் இருப்பவன் கொள்ளை நோய்க்கு இரையாவான்; அதனருகில் உள்ளவன் வாளால் சாவான்; முற்றுகையிடப்பட்ட ஏனையோர் பஞ்சத்தால் மடிவார்கள்; இவ்வாறு அவர்கள் மேலுள்ள நம் கோபம் தணியும்.
13. உங்கள் சிலைகளுக்கு நறுமணத் தூபங்காட்டிய இடங்களிலும், தழைத்து நிற்கும் எல்லாக் கருங்காலி மரத்தினடியிலும், அடர்ந்த தழையால் பச்சையாயிருக்கும் எல்லா மரத்தின் கீழும், மலைகளின் சிகரங்களிலும், உயர்ந்த மேடுகளிலும், பலி பீடங்களைச் சுற்றிலும், உங்கள் சிலைகளின் நடுவிலும் உங்களுள் கொலையுண்டவர்கள் சிதறிக் கிடக்கும் போது, நாமே உங்கள் ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
14. நாம் அவர்களுக்கு எதிராய் நம் கரத்தை நீட்டுவோம், தெப்லாத்தா என்னும் பாலை நிலம் முதல் அவர்கள் குடியிருக்கும் எல்லா இடங்களையும் நாட்டையும் பாழாக்குவோம். அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்."