1. அப்பொழுது அவர் என்னைக் கோயிலின் வாயிலுக்குத் திரும்பக் கூட்டி வந்தார்; இதோ, வாயிற்படியின் கீழிருந்து தண்ணீர் ஊற்றெடுத்துக் கிழக்கே ஓடிக்கொண்டிருந்தது; (ஏனெனில் கோயிலின் முகப்பு கிழக்கு நோக்கியிருந்தது). அந்தத் தண்ணீர் கோயிலுக்குத் தென்புறமாய்ப் பலிபீடத்திற்குத் தெற்கே பாய்ந்தது.
2. பின்னர் அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் வெளியே கொண்டு போய், கிழக்கே நோக்கியிருக்கும் வெளி வாயில் வரை என்னைச் சுற்றி நடத்திக் கொண்டு வந்தார்; ஆங்கே, தண்ணீர் தென்புறத்தில் ஓடிக் கொண்டிருந்தது.
3. அவர் தமது கையில் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்குப் பக்கமாய் நடந்து ஆயிரம் முழம் அளந்தார்; பிறகு என்னைத் தண்ணீர் வழியாய் நடத்திச் சென்றார்; தண்ணீர் கணுக்கால் அளவு இருந்தது.
4. மறுபடியும் அவர் ஆயிரம் முழம் அளந்தார்; பிறகு தண்ணீரைக் கடக்கும்படி எனக்குச் சொன்னார்; அங்குத் தண்ணீர் முழங்கால் அளவு ஓடிற்று.
5. மீண்டும் அவர் ஆயிரம் முழம் அளந்தார்; தண்ணீரைக் கடக்கும்படி கூறினார்; அங்கே தண்ணீர் இடுப்பளவு இருந்தது; இன்னும் ஆயிரம் முழம் அளந்தார்; அங்கே என்னால் கடக்க முடியாத பெரு வெள்ளமாய் இருந்தது; ஏனெனில் வெள்ளம் பெருகி இருந்தது; நீந்திப்போகுமளவுக்கு வெள்ளம் ஓடிற்று; ஆனால் யாரும் அதை நடந்து கடக்க முடியாது.
6. அவர் என்னை நோக்கி, "மனிதா, இதைக் கண்டாயா?" என்றார்; பின் ஆற்றங்கரையோரமாய் என்னைத் திரும்ப நடத்திச் சென்றார்.
7. நான் திரும்பிப் போன போது, ஆற்றின் இரு கரைகளிலும் மிகத் திரளான மரங்களைக் கண்டேன்;
8. அவர் என்னை நோக்கி, "இந்தத் தண்ணீர் கிழக்குப் பகுதி நோக்கிப் பாய்ந்து, அராபா சமவெளிக்கு ஓடிச்சேரும்; கடலிலுள்ள நீரோடு இது போய்க் கலக்கும்போது, தண்ணீர் நல்ல தண்ணீராகத் தெளியும்.
9. இந்த ஆறு எங்கெல்லாம் பாய்கிறதோ அங்கெல்லாம் ஊர்வன யாவும் பிழைத்திருக்கும்; அங்கே திரளான மீன்கள் இருக்கும்; ஏனெனில் கடல் நீர் தெளிந்து நல்ல நீராகும்படியே இந்த நீர் அங்கே பாய்கிறது; ஆகவே இந்த ஆறு ஓடிப்பாயும் இடங்களில் எல்லாம் உயிர்கள் வாழும்.
10. இந்த ஆற்றிலே செம்படவர் வந்து மீன் பிடிப்பார்கள்; என்காதி என்னும் ஊர் துவக்கி என்காலீம் என்னும் ஊர் வரையில் வலைகள் உலர்த்தப்படும் இடமாயிருக்கும்; பெருங்கடலிலுள்ளவற்றைப் போலப் பற்பல வகையான மீன்கள் இந்தத் தண்ணீரில் இருக்கும்.
11. ஆயினும் அதைச் சார்ந்த உளையான பள்ளங்களிலும், சதுப்புப் பகுதிகளிலும் தண்ணீர் தெளியாது; ஏனெனில் அங்கே உப்பளங்கள் கட்டப்படும்.
12. வெள்ளத்தின் ஓரமாய், அதன் இருபுறத்துக் கரைகளிலும் எல்லா வகையான பழ மரங்களும் வளரும்; அவற்றின் இலைகள் உதிர்ந்துபோகா; கனிகள் அற்றுப்போகா; அவற்றுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த இடத்திலிருந்து புறப்பட்டு வருவதால், அம்மரங்கள் மாதந்தோறும் புதிய கனிகளைக் கொடுக்கும்; அவற்றின் பழங்கள் உணவாகவும், இலைகள் மருந்தாகவும் பயன்படும்."
13. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "நீங்கள் இஸ்ராயேலின் பன்னிரு கோத்திரங்களின் எண்ணிக்கைக்கேற்ப இந்த நாட்டைப் பிரிந்து உரிமையாக்கிக் கொள்வதற்கான எல்லைகள் இவையே: யோசேப்புக்கு இரண்டு பங்கு உண்டு.
14. உங்கள் தந்தையர்க்குக் கொடுப்பதாக நாம் ஆணையிட்டு வாக்களித்த நாடு இதுவே; இது உங்களுக்கு உரிமைச் சொத்தாய்க் கிடைக்கும்; நீங்கள் இதனைச் சரிபங்காகப் பிரித்து உரிமையாக்கிக் கொள்வீர்கள்.
15. நாட்டின் எல்லைகளாவன: வடக்கே பெருங்கடல் துவக்கி எத்தாலோன் வழியாய்ச் சேதாதா ஊருக்கு வரும் வரைக்கும்,
16. ஏமாத், பெரோத்தா, தமஸ்குவின் எல்லைக்கும் ஏமாத் எல்லைக்கும் இடைப்பட்ட சபாரீம், ஆவுரானின் எல்லைக்கடுத்த திக்கோனின் வரைக்குமாகும்.
17. அவ்வாறே கடலிலிருந்து ஏனோன் வரை- இது தமஸ்குவின் எல்லையில் உள்ளது- அதன் எல்லை உள்ளது; ஏமாத்தே வடக்கு எல்லையாகும்; இதுவே வடபாகம்.
18. கிழக்கு மாநிலமானது ஆவுரான் நடுவிலிருந்தும் தமஸ்கு நடுவிலிருந்தும் காலாத் நடுவிலிருந்தும் இஸ்ராயேல் நாட்டினின்றும் புறப்பட்டுக் கிழக்குக் கடலில் கலக்கும் யோர்தான் நதி வரையில் பரவியிருக்கும்; கீழ்க்கடலோரத்தையும் சேர்த்து அளந்து கொள்ளுங்கள்.
19. தெற்கு மாநிலமானது: ஒரு பக்கத்தில் தாமாரிலிருந்து சச்சரவு நீர் எனப் பொருள்படும் காதேஸ் என்னும் இடம் வரையிலும், மறுபக்கத்தில் எகிப்து நதி முதல் பெருங்கடல் வரையிலும் பரவியிருக்கும்; இதுவே தென்பகுதி.
20. மேற்கு மாநிலமானது: பெருங்கடல் துவக்கி நேர் வழியாய் ஏமாத்துக்குச் சேருமட்டும் இடைப்பட்ட நிலமாகும்; இதுவே மேற்குப் பகுதி.
21. இஸ்ராயேல் கோத்திரங்களின் எண்ணிக்கைக்கேற்ப இந்த நாட்டை உங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வீர்கள்.
22. உங்களுக்கும், உங்கள் நடுவில் குடியேறி மனைவி மக்களோடு வாழும் அந்நியர்களுக்கும் இந்த நாட்டை உரிமைச் சொத்தாகப் பிரித்துக்கொள்வீர்கள்; அவர்களை, பிறப்பால் இஸ்ராயேல் இனத்தவராய் இருப்பவர்களுக்கு நிகராகக் கருதுங்கள்; இஸ்ராயேல் கோத்திரங்களின் நடுவில் உங்களோடு சொத்துரிமை பாராட்டும் பங்காளிகளாய் இருப்பார்கள்.
23. அந்நியன் எந்தக் கோத்திரத்தாரோடு வாழ்கிறானோ, அந்தக் கோத்திரத்தின் பாகத்தில் அவனுக்குப் பங்கு கொடுக்கக் கடவீர்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.