1. "நீங்கள் சீட்டுப்போட்டு நாட்டைப் பங்கிடும் போது, நாட்டில் ஒரு பங்கை முதற் கண் பிரித்து வையுங்கள்; இருபத்தையாயிரம் கோல் நீளமும் பதினாயிரம் கோல் அகலமும் இருக்கட்டும்; அது பரிசுத்தமான பங்கு; அதை ஆண்டவருக்கெனக் கொடுத்து விடுங்கள்; அந்தப் பரப்புள்ள இடம் முழுவதும் பரிசத்தமானதாய் இருக்கும்;
2. அதிலே பரிசுத்த இடத்துக்கென ஐந்நூறு கோல் சதுரமான நிலப்பரப்பு அளக்கப்படும்; அதைச் சுற்றிலும் ஐம்பது கோல் அளவுள்ள வெளியிடம் விடப்படும்.
3. இந்தக் கோலால் இருபத்தையாயிரம் கோல் நீளமும், பத்தாயிரம் கோல் அகலமுமுள்ள நிலப்பரப்பில் பரிசுத்த இடமும், திருத்தூயகமும் இருக்கும்.
4. நாட்டின் பரிசுத்த பங்காகிய அது, ஆண்டவரின் திருமுன் வந்து இறைவழிபாடு செய்யும் கோயில் அர்ச்சகர்களின் பங்காய் இருக்கும்; அதிலே அவர்களின் வீடுகளுக்குரிய இடமும், பரிசுத்த இடத்துக்கான நிலப்பகுதியும் இருக்கும்.
5. பின்னும் இருபத்தையாயிரம் கோல் நீளமும், பத்தாயிரங் கோல் அகலமுமான இடம் கோயிலில் பணிவிடை செய்யும் லேவியருக்குக் கொடுக்கப்படும்; அங்கே அவர்கள் தங்கள் வீடுகளை அமைத்துக் கொள்வார்கள்.
6. பரிசுத்த இடத்துக்கென்று ஒதுக்கப்பட்ட வெளியிடத்திற்கு எதிராக ஐயாயிரங் கோல் அகலமும், இருபத்தையாயிரம் கோல் நீளமும் அளந்து நகரத்துக்கென விடுவீர்கள்; இது இஸ்ராயேல் வீட்டாரனைவர்க்குமே சொந்தமாயிருக்கும்.
7. "பரிசுத்த இடத்துக்கும் நகரத்துக்கும் என ஒதுக்கப்பட்ட இடத்துக்கு இருபுறத்திலும் தலைவனின் பங்கு குறிக்கப்படவேண்டும்; அது கோயிலின் நிலத்துக்கும் நகரத்தின் நிலத்துக்கும் முன்னால் இருக்கும்; அது அவற்றிற்குக் கிழக்கிலும் மேற்கிலும் இருக்கும் நாட்டின் கிழக்கு எல்லை முதல் மேற்கு எல்லை வரை பரவியிருக்கும்; அவனது நிலம் ஒவ்வொரு கோத்திரப் பங்குகளின் நிலத்திற்கும் சமமாயிருக்க வேண்டும்.
8. இஸ்ராயேலில் காணிபூமி இருப்பதால், தலைவர்கள் இனி நம் மக்களை ஒடுக்கலாகாது; இஸ்ராயேல் மக்களுக்கு அவரவர் கோத்திரத்துக்குத் தக்கவாறு நாட்டிலே பங்கு விடவேண்டும்.
9. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேலின் தலைவர்களே, நீங்கள் செய்த அநீதிகள் போதும்; இனி நீங்கள் கொடுமையையும் கொள்ளையையும் ஒழித்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்; நம் மக்களுக்குச் சொந்தமான பூமியினின்று அவர்களைத் துரத்தாதேயுங்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
10. உண்மையான எடை காட்டும் தராசும், சரியான அளவுள்ள மரக்காலும் பாத்திரமும் உங்களுக்கு இருக்க வேண்டும்;
11. மரக்காலும் பாத்திரமும் ஒரே அளவுள்ளதாயிருக்க வேண்டும்; மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும், அளவு பாத்திரம் கலத்தில் பத்தில் ஒரு பங்கும் கொண்டவை; கலத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டே இவற்றின் அளவும் வரையறுக்கப்படும்.
12. ஷூக்கெல் என்பது இருபது கேரா; ஒரு மீனாவில் பதினைந்து அல்லது இருபது அல்லது இருபத்தைந்து ஷூக்கெல் இருக்கிறது.
13. "நீங்கள் செலுத்த வேண்டிய காணிக்கைகள் இதுவே: ஒரு கலம் கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொரு பங்கையும், ஒரு கலம் வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொரு பங்கையும் எடுத்துப் படைக்க வேண்டும்.
14. எண்ணெயின் அளவு ஓர் அளவு பாத்திரமாகும்; அளவு பாத்திரத்தின் கொள்ளளவு ஒரு கலம் பிடிக்கும் குடத்தில் பத்தில் ஒரு பங்கு.
15. இஸ்ராயேலர் தங்கள் பரிகாரத்துக்காகத் தகனப்பலியோ சாதாரண பலியோ சமாதானப் பலியோ செலுத்த வேண்டுமானால், இருநூறு ஆடுகள் கொண்ட மந்தையில் ஓர் ஆட்டுக் கடாவை ஒப்புக்கொடுப்பார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
16. நாட்டு மக்கள் யாவரும் இஸ்ராயேலின் தலைவனுக்கு இந்தச் சந்திப்புத் தரக்கடவார்கள்.
17. ஆனால் இஸ்ராயேல் வீட்டாரின் கடன் திருநாட்களிலும், மாதப் பிறப்பு ஆகிய பண்டிகைகளிலும், ஓய்வு நாட்களிலும், மற்றுமுள்ள இஸ்ராயேலின் திருவிழாக்களிலும் தலைவனே அவர்கள் செலுத்த வேண்டிய சாதாரண பலிகளையும் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளான்; அவன் இஸ்ராயேல் இனத்தார்க்காகப் பாவப் பரிகாரப் பலியும் தகனப் பலியும் சமாதானப் பலியும் பரிகாரத்துக்கென ஒப்புக் கொடுக்க வேண்டும்.
18. "ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: முதல் மாதத்தில் முதல் நாள், நீ பழுதற்ற ஒரு காளையை தெரிந்தெடுத்துக் கொண்டு வந்து, பரிசுத்த இடத்தைத் தூய்மைப் படுத்த வேண்டும்;
19. பாவப் பரிகாரப் பலியான மிருகத்தின் இரத்தத்தில் அர்ச்சகர் கொஞ்சம் எடுத்துக் கோயிலின் கதவு நிலைகளிலும், பலி பீடத்து நீள் விளிம்பின் நான்கு கோடிகளிலும், உட்பிராகாரத்தின் கதவு நிலைகளிலும் பூசக்கடவார்.
20. அறியாமையால் தவறு செய்தவர்களுக்காகவும், தப்பறையில் விழுந்து குற்றம் புரிந்தவர்களுக்காகவும் பரிகாரமாக மேற்சொன்னவாறு மாதத்தின் ஏழாம் நாளிலும் செய்து, கோயிலைத் தூய்மைப் படுத்துவாய்.
21. முதல் மாதத்தின் பதினான்காம் நாள் பாஸ்கா என்னும் திருவிழா கொண்டாடப்படும்; ஏழு நாட்கள் புளிக்காத அப்பங்களைப் புசிக்க வேண்டும்.
22. அந்நாளில் தலைவன் தனக்காகவும், நாட்டு மக்கள் எல்லாருக்காகவும், ஒரு காளையைப் பரிகாரப் பலியாகப் படைப்பான்.
23. விழா ஏழு நாட்கள் நீடிக்கும்; அந்த ஏழு நாளும் அவன் நாடோறும் ஆண்டவருக்குத் தகனப் பலியாகப் பழுதற்ற ஏழு காளைகளையும், மாசில்லாத ஏழு ஆட்டுக்கடாக்களையும் படைக்கக்கடவான்; மேலும் நாடோறும் பாவப் பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் தருவான்.
24. அன்றியும் உணவுப் பலியாக, ஒவ்வொரு காளையுடன் ஒரு மரக்கால் மாவும், ஒவ்வொரு மரக்கால் மாவுடன் ஒரு படி எண்ணையும் ஒப்புக் கொடுக்கக் கடவான்.
25. "ஏழாம் மாதத்தின் பதினைந்தாம் நாள் தொடங்கும் பண்டிகையிலும் அவ்வாறே அவன் ஏழு நாட்களும் பாவப் பரிகாரப்பலியும் தகனப்பலியும் உணவுப்பலியும் தரவேண்டும்.