1. பின்னர் அவர் கீழ்த்திசையை நோக்கியுள்ள தூயகத்தின் புறவாயிலுக்கு என்னைத் திரும்பவும் கூட்டி வந்தார்; அந்த வாயில் பூட்டப்பட்டிருந்தது.
2. அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி, "இந்த வாயிலின் கதவு மூடப்பட்டே இருக்கும்; திறக்கப்படாது; யாரும் இதன் வழியாய் உள்ளே நுழையக்கூடாது; ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் இதன் வழியாய் உள்ளே சென்றார்; ஆகவே இது மூடப்பட்டே இருக்கும்;
3. தலைவன் மட்டும் ஆண்டவரின் திருமுன்னிலையில் அப்பம் உண்பதற்காக அங்கே வந்து உட்காரலாம்; அவன் கூட மண்டபத்தின் வாயில் வழியாய் உள்ளே வந்து, அவ்வழியாகவே வெளியேற வேண்டும்" என்று சொன்னார்.
4. பின்பு அவர் வடக்கு வாயில் வழியாய் என்னைத் திருக்கோயிலின் முன்னிடத்திற்குக் கூட்டிவந்தார்; கண் திறந்து பார்த்தேன்; ஆண்டவருடைய மகிமை ஆண்டவரின் திருக்கோயிலை நிரப்பிற்று; அதைக் கண்டு நான் தரையில் குப்புற விழுந்தேன்.
5. அப்போது ஆண்டவர் எனக்குக் கூறினார்: "மனிதா, ஆண்டவரின் திருக்கோயிலைப்பற்றிய எல்லா ஒழுங்குமுறைமைகளையும் சட்டங்களையும் உனக்குச் சொல்லப் போகிறோம், கூர்ந்து கவனி; கண்ணால் நன்றாகப் பார்; காதால் கவனமாய்க் கேள். கோயிலுக்குள் நுழையக் கூடியவர்களையும், தூயகத்தில் நுழையத் தகாதவர்களையும் நன்றாய்க் கவனி.
6. பிறகு கலகக்காரராகிய இஸ்ராயேல் வீட்டாருக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் வீட்டாரே, போதும்; நீங்கள் செய்து வந்த அருவருப்பான செயல்களை எல்லாம் விடுங்கள்;
7. நீங்கள் நமக்குக் காணிக்கை அப்பங்களும் கொழுப்பும் இரத்தமும் ஒப்புக் கொடுக்கும் போது, உள்ளத்திலும் உடலிலும் விருத்தசேதனம் செய்யப்படாத அந்நியர்களை, நமது தூயகத்திற்கு வந்து அதை அவசங்கைப்படுத்த அழைப்பித்தீர்கள்; உங்கள் பாதகங்களால் நம் உடன்படிக்கையை முறித்தீர்கள்.
8. மேலும் நம் பரிசுத்த பொருட்களை நீங்கள் காத்துக் கண்காணிக்காமல், அந்தப் பொறுப்பை அந்நியர்களுக்குக் கொடுத்து, நமது தூயகத்தில் காவல் செய்யக் சொன்னீர்கள்.
9. ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் மக்கள் நடுவில் வாழ்கின்ற அந்நியர்களிலோ, வேறெந்த அந்நியர்களிலோ உள்ளத்திலும் உடலிலும் விருத்தசேதனம் செய்து கொள்ளாத எவனும் நமது தூயகத்துள் நுழையக் கூடாது.
10. "ஆனால், இஸ்ராயேல் வழி தவறிய போது, நம்மை விட்டு அகன்று, வழி தவறித் தங்கள் சிலைகளைப் பின்பற்றிய லேவியர்களும் தண்டனை பெறுவார்கள்.
11. ஆயினும், அவர்கள் திருக்கோயில் வாயில்களைக் காப்பதும், வாயிற்படியில் நிற்பதும், தகனப் பலிகளுக்குரிய மிருகங்களையும், மக்களுக்காகத் தரப்படும் பலி மிருகங்களையும் வெட்டுவதும், மக்களுக்கு முன்பாக நின்று அவர்களுக்குப் பணிசெய்வதுமாகிய அலுவல்களைச் செய்யும் ஊழியர்களாய் நமது தூயகத்தில் இருப்பார்கள்.
12. அவர்கள் சிலைகளுக்கு முன்பாக நின்று, மக்களுக்கு வேலைக்காரர்களாய் இருந்து, இஸ்ராயேல் வீட்டார் அக்கிரமத்தில் விழக் காரணமாய் இருந்ததால், அவர்கள் தண்டனை பெறுவார்கள் என்று அவர்களுக்கு எதிராய் ஆணையிட்டோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
13. அப்படிப்பட்டவர்கள் நமது திருமுன்னிலையில் அர்ச்சகரின் பணியைச் செய்யவும், நமக்கருகில் வரவும், மிகவும் பரிசுத்தமான இடத்திற்கு அருகிலுள்ள இடங்களில் நுழையவும் கூடாது; அவர்கள் தங்கள் வெட்கத்தையும், தாங்கள் செய்த அக்கிரமத்தின் சுமையையும் தாங்குவார்கள்.
14. ஆயினும் கோயிலில் செய்யவேண்டிய வேலைகளையும் அலுவல்களையும், வாயிற்படி காவலையும் செய்யுமாறு அவர்களை ஏற்படுத்துவோம்.
15. "ஆனால், இஸ்ராயேல் வீட்டார் நம்மை விட்டு வழி தவறிப் போன போது நமது தூயகத்துக்கடுத்த சடங்குகளைச் சரியாய்க் கடைப்பிடித்த சாதோக்கின் மக்களாகிய அர்ச்சகர்களும், லேவியருமே நமது திருமுன் வந்து தங்கள் அலுவலைச் செய்வார்கள்; அவர்களே நமது திருமுன் நின்று பலி மிருகங்களின் கொழுப்பையும் இரத்தத்தையும் நமக்கு ஒப்புக்கொடுப்பார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
16. அவர்கள் தான் நமது பரிசுத்த இடத்தில் நுழைவார்கள்; அவர்கள் தான் நமக்கு ஊழியம் செய்ய நம் பீடத்தின் அருகே வந்து செய்ய வேண்டிய சடங்குகளை நிறைவேற்றுவார்கள்.
17. அவர்கள் உட்பிராகாரத்தின் வாயிலுக்குள் நுழையும் போது, மெல்லிய சணல் நூலால் நெய்யப்பட்ட ஆடைகளை உடுத்திக் கொள்வார்கள்; அவர்கள் உட்பிராகாரத்தின் வாயில்களிலும், உட்புறத்திலும் ஊழியம் செய்கையில் ஆட்டு மயிரால் செய்யப்பட்ட ஆடையொன்றும் அணியக் கூடாது;
18. அவர்கள் தலையில் சணல் நூல் தலைப்பாகைகளும், இடுப்பில் சணல் நூல் ஆடையும் அணிவார்கள்; வேர்வை உண்டாக்கக் கூடியது எதையும் இடையில் உடுத்தக் கூடாது.
19. மக்களிருக்கும் வெளிப்பிராகாரத்துக்கு வருமுன், அவர்கள் வழிபாட்டுக்கு உடுத்தியிருந்த ஆடைகளைக் கழற்றிக் கோயிலின் அறையில் வைத்து விட்டு, வேறு ஆடைகளை அனிந்து கொள்ள வேண்டும்; தங்கள் உடை வழியே பரிசுத்தத்தைப் பொது மக்களிடையே கொண்டு வரலாகாது.
20. அவர்கள் தங்கள் தலையை மழிக்கவோ தலை மயிரை நீளமாய் வளர்க்கவோ வேண்டாம்; அடிக்கடி தலை மயிரைக் கத்தரிக்கட்டும்.
21. உட்பிராகாரத்தில் நுழையும் நாட்களில் அர்ச்சகன் மது அருந்தக் கூடாது;
22. அர்ச்சகர்கள் கைம்பெண்ணையோ தள்ளப்பட்டவளையோ மணக்கக் கூடாது; இஸ்ராயேல் இனத்தவளான கன்னிப் பெண்ணையே மணக்க வேண்டும்; ஆனாலும் முன்பு அர்ச்சகனின் மனைவியாய் இருந்த கைம்பெண்ணை மணப்பதற்குத் தடையில்லை.
23. அவர்கள் பரிசுத்தமானவற்றையும் பரிசுத்தமல்லாதவற்றையும், தீட்டுள்ளவற்றையும் தீட்டில்லாதவற்றையும் நம் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்து, வேறுபாட்டைக் காட்ட வேண்டும்.
24. வழக்குகள் வந்தால், நம் சட்டங்களுக்கேற்ப நீதி செலுத்தவும் தீர்ப்புச் சொல்லவும் ஆயத்தமாய் இருப்பார்கள்; நம் திருநாட்களில் எல்லாம் நம் கட்டளைகளையும் கற்பனைகளையும் கடைப்பிடிப்பார்கள்; நமது ஒய்வு நாளைப் பரிசுத்தமாய் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
25. செத்தவரை அணுகிப் போய்த் தங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது; ஆயினும், தந்தையோ தாயோ மகனோ மகளோ சகோதரனோ, மணமாகாத சகோதரியோ இறந்து போனால் அவர்களின் உடலருகில் போகலாம்.
26. அவர்களுள் யாராவது தீட்டுப்பட்டால், ஏழு நாட்களுக்குப் பிறகு சுத்தமாவான்; ஏழு நாட்களுக்குப்பின்,
27. அவன் கோயிலில் வழிபாடு செய்யும்படி உட்பிராகாரத்துக்குள் நுழைகிற அன்றைக்குத் தனக்காகப் பாவப் பரிகாரப் பலி செலுத்த வேண்டும், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
28. அவர்களுக்குச் சொத்துரிமை ஏதும் இல்லை; நாமே அவர்களின் சொத்துரிமை; அவர்களுக்கு இஸ்ராயேலில் யாதொரு உடைமையும் தராதீர்கள்; நாமே அவர்களின் உடைமை.
29. பாவப் பரிகாரப்பலி, குற்றப் பரிகாரப்பலி இறைச்சியை அவர்களே புசிப்பார்கள்; அன்றியும் இஸ்ராயேலில் நேர்ச்சையாய் ஒப்புக் கொடுக்கும் காணிக்கைகளெல்லாம் அவர்களுக்கே உரியவை.
30. நீங்கள் ஒப்புக்கொடுக்கும் எல்லா மிருகங்களின் முதற் பேறும், காணிக்கையாக ஒப்புக் கொடுப்பவற்றுள் முதற் பாகம் எல்லாம் அர்ச்சகர்களுக்கே சொந்தமாகும்; வீட்டில் நீங்கள் புசிப்பவற்றில் முதல் பாகத்தை அவர்களுக்குக் கொடுங்கள்; அப்போது ஆசீர்வாதம் உங்கள் வீட்டின் மேல் இருக்கும்.
31. பறவைகளிலும் மிருகங்களிலும் தானாய்ச் செத்ததையோ, மிருகங்கள் பீறியதால் செத்ததையோ அர்ச்சகர் உண்ணலாகாது.