1. நீயோ இஸ்ராயேலின் தலைவர்களைப் பற்றிப் புலம்பு.
2. அவர்களுக்குச் சொல்: சிங்கங்கள் நடுவில் உன் தாய் ஒரு பெண் சிங்கமாய் விளங்கினாள். இளஞ் சிங்கங்கள் நடுவில் படுத்துறங்கித் தன் குட்டிகளுக்குப் பாலூட்டினாள்.
3. அவன் தன் குட்டிகளுள் ஒன்றை வளர்க்கவே, அது இளஞ்சிங்கமாய் வளர்ந்து இரை தேடப் பழகி, மனிதரைச் சாப்பிடத் தொடங்கிற்று.
4. புறவினத்தார் இதைக் கேள்வியுற்று அதனைத் தங்கள் படுகுழியில் வீழ்த்தி, சங்கிலியால் கட்டி எகிப்துக்குக் கொண்டு போயினர்.
5. தன் எண்ணம் சிதைந்தது என்றும், நம்பிக்கை வீணாயிற்று என்றும் தாய்ச் சிங்கம் கண்டு, தன் குட்டிகளுள் வேறொன்றை எடுத்து வளர்த்து இளஞ் சிங்கமாக்கிற்று.
6. இதுவும் சிங்கங்கள் நடுவிலே நடமாடி, இளஞ் சிங்கமாகி இரை தேடப் பழகி, மனிதரைச் சாப்பிடத் தொடங்கிற்று.
7. அவர்கள் கோட்டைகளைத் தாக்கி, பட்டணங்களைப் பாழாக்கிற்று; அது சீற்றத்தோடு கர்ச்சிக்கும் போது நாடும், நாட்டிலுள்ள யாவும் நடுங்கின.
8. அண்டை நாடுகள் ஒன்று கூடி , எல்லாப் பக்கமும் சூழ்ந்து வந்து தங்கள் வலையை அதன் மேல் வீசி, தங்கள் படுகுழியில் அதனை வீழ்த்தினார்கள்.
9. சங்கிலியால் அதைக் கட்டிக் கூட்டிலடைத்து, பபிலோன் அரசனிடம் கொண்டு போனார்கள். அதன் குரல் (கர்ச்சனை) இஸ்ராயேல் மலைகளில் கேட்காதிருக்கும்படி அச்சிங்கத்தைச் சிறைக்கூடத்தில் அடைத்தார்கள்.
10. உன் தாய் திராட்சைத் தோட்டத்தில் நீரருகில் நடப்பட்ட ஒரு செழிப்பான திராட்சைக் கொடி போல் இருந்தாள். நீர் வளத்தின் காரணத்தால் கிளைகளும் கனிகளுமாய்த் தழைத்திருந்தாள்.
11. அதன் மிக உறுதியான கிளை அரச செங்கோலாயிற்று; அடர்ந்த கிளைகள் நடுவே அது உயர்ந்தோங்கிற்று; திரளான கிளைகளால் உயர்ந்து தென்பட்டது.
12. ஆனால் அத் திராட்சைக் கொடி ஆத்திரத்தோடு பிடுங்கப்பட்டு மண்ணிலே எறியப்பட்டது; கீழைக் காற்றினால் காய்ந்து போனது, அதன் கனிகள் பறிக்கப்பட்டன; அதன் உறுதியான கிளை உலர்ந்து போனது, நெருப்பால் சுட்டெரிக்கப்பட்டது.
13. இப்போது, நீரற்ற பாலைநிலத்தில் வளமற்ற வனாந்தரத்தில் பிடுங்கி நடப்பட்டுள்ளது.
14. அதன் உயர்ந்த கிளையினின்று நெருப்பு கிளம்பி, கிளைகளையும் கனிகளையும் சுட்டெரித்தது; இனி அதில் உறுதியான கிளையில்லை, அரசனுக்குச் செங்கோலில்லை. இதுவே புலம்பல், புலம்பலாக பயன்படும் பாடல்.