1. ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2. மனிதா, தங்கள் மனம் போல் இறைவாக்கு சொல்லத் துணிகிற இஸ்ராயேலின் தீர்க்கதரிசிகளுக்கு நீ சொல்ல வேண்டியது இதுவே: ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்:
3. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: ஒரு காட்சியையும் காணாமல் தங்கள் மனத்தின் உற்சாகத்தையே நாடும் மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ கேடு!
4. இஸ்ராயேல், உன் தீக்கதரிசிகள் பாலைநிலைத்தில் வாழும் நரிகளுக்கு ஒப்பானவர்கள்.
5. ஆண்டவருடைய நாளில் போரில் நிலைநிற்கும் படி நீங்கள் பகைவனுக்கு எதிர்த்து நின்றதுமில்லை; இஸ்ராயேல் வீட்டார்க்காகச் சுவர் எழுப்பியதுமில்லை.
6. அவர்கள் போலிக் காட்சிகளைக் கண்டு பொய் வாக்குகளைச் சொன்னார்கள்; ஆண்டவர் தங்களை அனுப்பாதிருந்தாலும், 'ஆண்டவர் சொன்னார்' என்று சொல்லி, தாங்கள் உரைத்த வாக்கு நிறைவேறும் என்று சாதிக்கவும் முற்பட்டார்கள்.
7. நீங்கள் கண்டது போலிக் காட்சியே அல்லவா? நீங்கள் கூறியது பொய்வாக்கு அன்றோ? நாம் உங்களிடம் பேசாதிருக்க, நீங்கள் 'ஆண்டவர் சொன்னார்' என்று எவ்வாறு சொல்லலாம்?"
8. ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "நீங்கள் போலிக் காட்சிகளைக் கண்டு, பொய் வாக்கைச் சொல்லியபடியால், இதோ நாமே உங்களுக்கு எதிராய் வருகிறோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
9. போலிக் காட்சியைக் கண்டு, பொய் வாக்கைப் பிதற்றும் தீர்க்கதரிசிகளுக்கு எதிராக நமது கை ஒங்கும்; அவர்கள் நம் மக்களின் சங்கத்தில் இருக்க மாட்டார்கள்; இஸ்ராயேல் வீட்டாரின் அட்டவணையிலும் அவர்களுக்கு இடமிருக்காது; இஸ்ராயேல் நாட்டுக்குள் அவர்கள் நுழையவே மாட்டார்கள்; அப்போது நாமே ஆண்டவராகிய இறைவன் என்பதை அறிவீர்கள்.
10. சமாதானம் இல்லாதிருந்தும், 'சமாதானம் உண்டு' என்று சொல்லி நம் மக்களை அவர்கள் ஏமாற்றினார்கள்; நம் மக்கள் சுவரெழுப்பும் போது இவர்கள் உறுதியற்ற சாந்தை அதற்குப் பூசினார்கள்.
11. சாரமில்லாச் சாந்தைப் பூசுகிறவர்களிடம், 'அந்தச் சாந்து இடிந்து விழுந்துபோம்' என்று சொல்; ஏனெனில் அடாத மழை பெய்யும்; கல்மாரி மழை பெய்யச் செய்வோம்; கடும் புயல் காற்று எழும்பச் செய்வோம்.
12. அந்தச் சுவர் விழும் போது, 'நீங்கள் பூசிய சாந்து எங்கே?' என்று உங்களைக் கேட்க மாட்டார்களா?
13. ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நமது சீற்றத்தில் பெரும் புயல்காற்று எழும்பச் செய்வோம்; நமது கோபத்தில் வெள்ளப்பெருக்கை உண்டாக்கும் மழை பெய்யும்; நமது சினத்தில் அனைத்தையும் அழிக்கக்கூடிய பெருங்கற்கள் விழும்.
14. அப்பொழுது நீங்கள் சாரமில்லாச் சாந்தினால் பூசிய சுவர் இடிந்து தரைமட்டமாகும்; அதன் அடிப்படை பூமியினின்று வெளியாக்கப்படும்; சுவர் விழ, நீங்களும் அதனோடு விழுந்து மடிவீர்கள்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
15. சுவர் மேலும், அதில் சாரமற்ற சாந்தைப் பூசியவர்கள் மேலும் இவ்வாறு நமது கோபத்தைத் தீர்த்துக் கொண்டு, 'சுவருமில்லை, அதற்குச் சாந்து பூசியவர்களுமில்லை,
16. அதாவது யெருசலேமைக் குறித்து இறைவாக்குரைத்து, சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று காட்சி கண்டதாகச் சாதித்த தீர்க்கதரிசிகளுமில்லை' என்று உங்களுக்கு உரைப்போம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
17. "மனிதா, தங்கள் மனம் போலத் தீர்க்கதரிசனம் சொல்லும் உன் இனத்துப் பெண்களுக்கு விரோதமாய் உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு எதிராய் இறைவாக்குரை:
18. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: ஆன்மாக்களை வேட்டையாட வேண்டி எல்லாக் கைளிலும் காப்பு கட்டி, ஒவ்வொருவருடைய உயரத்திற்கும் ஏற்ப தலைகளுக்கு முக்காடு செய்யும் தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ கேடு! எம் மக்களின் ஆன்மாக்களை வேட்டையாடி, மற்றவர்களின் ஆன்மாக்களை உங்கள் பயன்கருதி நீங்கள் காத்துக்கொள்வீர்களோ?
19. பொய்களைக் கேட்டு நம்பும் எம் மக்களிடம் பொய்களைச் சொல்லி, சாகாமல் இருக்க வேண்டியவர்களைச் சாகடித்து, உயிரோடிருக்கத் தகாதவர்களை உயிரோடு காத்தீர்கள்; இவ்வாறு, கைப்பிடியளவு வாற்கோதுமைக்காகவும், ஒருசில அப்பத் துண்டுகளுக்காகவும் நம் மக்கள் நடுவில் நம்மைப் பரிசுத்தமற்றவராய் ஆக்கினீர்கள்.
20. ஆகையால் ஆண்டவராகிய இறைவன் சொல்லுகிறார்: இதோ, பறவைகளைப் போல் ஆன்மாக்களை வேட்டையாடிப் பிடிக்கும்படி நீங்கள் கைகளில் கட்டியிருக்கும் (மந்திரக்) காப்புகளுக்கு எதிராய் எழும்பி, அவற்றை உங்கள் கைகளிலிருந்து பிய்த்தெறிவோம்; நீங்கள் வேட்டை பிடித்திருக்கும் ஆன்மாக்களை (பறவைகளைப் போல்) விடுதலை செய்வோம்.
21. உங்கள் முக்காடுகளையும் நாம் கிழித்தெறிவோம்; உங்கள் கைகளினின்று நம் மக்களை விடுவிப்போம்; இனி அவர்கள் உங்களுக்கு இரையாக இருக்கமாட்டார்கள்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
22. நாம் புண்படுத்தாத நீதிமானின் உள்ளத்தை நீங்கள் வஞ்சகமாய்ப் புண்படுத்தினீர்கள்; தீயவனையோ, அவன் தன் தீய நெறியை விட்டுத் திரும்பி தன்னைக் காத்துக் கொள்ளாதவாறு ஊக்குவித்தீர்கள்;
23. ஆகையால் இனி நீங்கள் போலிக் காட்சிகளைக் காணவுமாட்டீர்கள்; சகுன சாத்திரம் சொல்லவும் போவதில்லை; உங்கள் கைகளினின்று நம் மக்களை நாம் விடுவிப்போம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்."