1. மீண்டும் பெசெலேயல் சேத்தீம் மரத்தால் பெட்டகத்தையும் செய்தான். அதன் நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாம்.
2. அதனை உள்ளும் புறமும் பசும் பொன்னால் மூடி, சுற்றிலும் அதற்குத் தங்கத்திறணையை அமைத்து,
3. அதன் நான்கு மூலைகளுக்கும் நான்கு பொன் வளையங்களை வார்த்து, பக்கத்திற்கு இரண்டாக அவற்றை இருபக்கங்களிலும் பொருத்தி,
4. சேத்தீம் மரத்தினால் தண்டுகளைச் செய்து தங்கத்தால் மூடி,
5. பெட்டகத்தைத் தூக்கிக்கொண்டு செல்வதற்காக அதன் பக்கங்களிலுள்ள வளையங்களில் அவைகளை நுழைத்தான்.
6. மூலத்தானம் எனப்படும் இரக்கத்தின் அரியணையையும் பசும் பொன்னால் செய்தான். அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருந்தது.
7. தங்கத் தகட்டினால் இரண்டு கொரூபிம்களையும் செய்து, இரக்கத்தின் அரியணைக்கு இரு புறத்திலும் வைத்தான்.
8. இரக்கத்தின் அரியணையினுடைய இரு பக்கத்து ஓரங்களிலும் வைக்கப்பட்ட
9. அக்கெரூபிம்கள் தங்கள் இறக்கைகளை உயர விரித்து இரக்கத்தின் அரியணையை நிழலிட்டவைகளாய், ஒன்றுக் கொன்று எதிர்முகமுள்ளவைகளாய், அதை நோக்கிக்கொண்டிருந்தன.
10. அவன் மேசையையும் சேத்தீம் மரத்தால் செய்தான். அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருந்தது.
11. அதைப் பசும் பொன்னால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பு அமைத்து,
12. அதைச் சுற்றிலும் நான்கு விரற்கிடையான ஒரு திரணையையும் அதன்மேல் வேறொரு திரணையையும் அமைத்தான்.
13. நான்கு பொன் வளையங்களையும் வார்த்து, அவற்றை மேசையின் நான்கு காலுக்கிருக்கும் நான்கு மூலைகளிலும்,
14. திரணைக்கருகில் பொருத்தி மேசையைத் தூக்கும்படி தண்டுகளை அவற்றில் நுழைத்தான்.
15. இந்தத் தண்டுகளையும் சேத்தீம் மரத்தால் செய்து, பொன் தகட்டால் மூடி,
16. மேசையில் பற்பல விதமாய் உபயோகப்படும் பணிமுட்டுக்களையும் தட்டுக்களையும் குப்பிகளையும் தூபக் கலசங்களையும், பான பலிப் பாத்திரங்களையும் பசும்பொன்னால் செய்தான்.
17. அவன் பசும் பொன்னைத் தகடாக்கிக் குத்துவிளக்கையும் செய்தான். அதன் தண்டினின்று கிளைகளும், மொக்குகளும், குமிழ்களும், லீலிமலர்களும், புறப்பட்டிருந்தன.
18. அதாவது; பக்கத்திற்கு மூன்றாக இருபக்கமும் ஆறு கிளைகள் இருந்தன.
19. ஒரு கிளையில் வாதுமைக் கொட்டைபோன்ற மூன்று மொக்குகளும் குமிழ்களும் லீலிமலர்களும் இருந்தன. மறுகிளையிலும் வாதுமைக் கொட்டைபோன்ற மூன்று மொக்குகளும் குமிழ்களும் லீலிமலர்களும் இருந்தமையால், குத்துவிளக்குத் தண்டினின்று புறப்பட்ட ஆறு கிளைகளிலும் ஒரேவித வேலைப்பாடு அமைந்திருந்தது.
20. விளக்குத் தண்டில் வாதுமைக் கொட்டைபோன்ற நான்கு மொக்குகளும் குமிழ்களும் லீலிமலர்களும் இருந்தன.
21. இரண்டு கிளைகளின் கீழே மூன்று இடங்களில் குமிழ்கள் இருந்தன. ஆகையால், ஒரே தண்டினின்று ஆறு கிளைகளும் புறப்பட்டன.
22. குமிழ்கள் கிளைகள் எல்லாம் பசும் பொன்னால் ஒரே அடிப்பு வேலையாய்ச் செய்யப்பட்டிருந்தன.
23. மேலும், பசும் பொன்னால் ஏழு அகல்களையும், கரிந்ததிரியை வெட்டக் கத்திரிகளையும், எரிந்த திரியை வைக்கத் தட்டுக்களையும் செய்தான்.
24. குத்துவிளக்கும், அதன் எல்லாக் கருவிகளும், தட்டுமுட்டுக்களும் ஒரு தாலந்து நிறையுள்ள பொன்னால் ஆனவை.
25. பரிமள வகைகளின் பீடத்தையும் சேத்தீம் மரத்தால் செய்தான். அது நீளத்திலும் அகலத்திலும் ஒரு முழச் சதுரமாகவும், இரண்டு முழ உயரமுள்ளதாகவும் இருந்தது. அதன் மூலைகளிலே நான்கு கொம்புகள் புறப்பட்டன. அவன் அதையும், அதன் சல்லடையையும், அதன் சுற்றுப் புறங்களையும்,
26. அதன் கொம்புகளையும் பசும் பொன்னால் செய்து,
27. அதைச் சுற்றிலும் பொன்னாலான திரணையை அமைத்து, திரணைக்குக் கீழுள்ள பக்கங்களிலே பீடத்தைத் தூக்கிச்செல்லப் பயன்படும் தண்டுகளை நுழைக்கும்படியான இரண்டு பொன் வளையங்களையும் அமைத்தான்.
28. அத்தண்டுகளையும் சேத்தீம் மரத்தாற் செய்து, அவைகளைப் பொன் தகட்டினாலே மூடினான்.
29. அபிசேகத் தைலத்துக்கு எண்ணெயையும், மிகப் பரிசுத்த நறுமணப்பொருள்களைக் கூட்டிப் பரிமளத்தையும் தைலக்காரர் செய்முறைப்படி செய்து அமைத்தான்.