1. மீண்டும் இஸ்ராயேல் மக்களாகிய சபையாரெல்லாரும் கூடியிருக்கையிலே மோயீசன் அவர்களை நோக்கி: ஆண்டவர் செய்யக் கட்டளையிட்டவையாவன:
2. நீங்கள் ஆறு நாள் வேலை செய்வீர்கள். ஏழாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான நாளாகும். அது ஆண்டவருடைய ஒய்வு நாளாகிய சாபத்; அன்று வேலை செய்பவன் கொலை செய்யப்படுவான்.
3. ஒய்வு நாளிலே உங்கள் உறைவிடங்கள் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீர்கள் என்றார்.
4. மேலும் மோயீசன் இஸ்ராயேல் மக்களாகிய சபையாரெல்லாரையும் நோக்கி: ஆண்டவர் திருவாக்கருளித் தெரிவித்த கட்டளையாவது:
5. (உங்கள் நிலங்களில் விளைந்த) முதற் பலன்களை ஆண்டவருக்காக உங்களிடம் தனிப்பட வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை ஒவ்வொருவனும் வலிய நிறைமனத்துடன் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவான். (அவை எவையென்றால்) பொன் வெள்ளி வெண்கலங்கள்,
6. நீலநிறம், கருஞ்சிவப்பு நிறம், இருமுறை சாயந் தோய்த்த இரத்த நிறம் கொண்ட நூல்கள், மெல்லிய சணல் நூல்,
7. வெள்ளாட்டு மயிர், சிவப்புச் சாயந் தோய்ந்த ஆட்டுக் கிடாய்த் தோல்கள், சேத்தீம் மரங்கள்,
8. விளக்குகளை ஏற்றுவதற்கு எண்ணெய், தைலம் கூட்டுவதற்கு எண்ணெய், மிக்க நறுமணமுள்ள வாசனைப் பொருட்கள்,
9. ( குருவின் ) எப்போத் என்னும் மேலாடையிலும் மார்ப் பதக்கத்திலும் பதிக்கத்தக்க கோமேதக்கற்கள், இரத்தினம் முதலியன.
10. உங்களில் திறமையுள்ளவன் வந்து ஆண்டவர் கட்டளையிட்ட வேலைகளைச் செய்யக்கடவான்.
11. அவையாவன ( ஆசாரக் ) கூடாரம், அதன் மேற்கட்டு, மேல்மூடிகள், வளையங்கள், தண்டுகள், பலகைகள், தூண்கள், இவற்றின் பாதங்கள்,
12. பெட்டகம், தண்டுகள், அதன் இரக்கத்தின் அரியணை, அதன் முன் தொங்கும் திரை,
13. மேசை, அதன் தண்டுகள், பாத்திரங்கள், காணிக்கை அப்பங்கள்,
14. விளக்குகளைத் தாங்கும் விளக்குத் தண்டு, அதன் கருவிகள்,
15. வெளிச்சத்திற்கு எண்ணைய், வாசனைப் பொருட்களின் பீடம், அதன் தண்டுகள், அபிசேகத் தைலம், தூபப் பொருட்கள், கூடார வாயிலுக்குத் தொங்கு திரைகள்.
16. தகனப் பலிப்பீடம், அதன் வெண்கலச் சல்லடை, அதன் தண்டுகள், பணிமுட்டுக்கள் தொட்டி, அதன் பாதம்,
17. பிராகாரத்தில் இருக்கும் தொங்கு திரைகள், அவைகளின் தூண்கள், பாதங்கள், மண்டப வாயிலின் மூடுதிரை,
18. கூடாரத்திற்கும் மண்டபத்திற்கும் சம்பந்தப்பட்ட கயிறுகள்,
19. குருவாகிய ஆரோனும் அவன் புதல்வர்களும் நமக்குக் குருத்துவ அலுவலைச் செய்வதற்குரிய ஆடை அணிகள், பரிசுத்த இடத்து ஊழியத்தில் உபயோகப் படும் உடைகள் ஆகிய இவைகளேயாம் என்றார்.
20. அப்பொழுது இஸ்ராயேல் மக்களின் சபையார் எல்லாரும் மோயீசனை விட்டுப் புறப்பட்டுப் போய்,
21. சாட்சியக் கூடாரத்தின் வேலையைச் செய்து முடிப்பதற்கும், அதன் திருவூழியத்திற்குத் தேவையான பரிசுத்த உடைகளைத் தயாரிப்பதற்கும் வேண்டிய காணிக்கைகளைப் பக்தியோடும் மனநிறைவோடும் ஆண்டவருக்குக் கொண்டு வந்தார்கள்.
22. மகளிர், ஆடவர் யாவரும் காப்பு, காதணி, மோதிரம், கைக்கடகம் முதலியவற்றை ஒப்புக்கொடுத்தனர். அவற்றிலிருந்த பொன் உடைமைகளையெல்லாம் ஆண்டவருக்குக் காணிக்கையாய்ப் பாதுகாத்தனர்.
23. நீலநிறம் கருஞ்சிவப்புநிறம், இருமுறை சாயந் தோய்த்த இரத்தநிறம், கொண்ட நூல்கள், மெல்லிய சணல் நூல்கள், வெள்ளாட்டு உரோமம், சிவப்புச்சாயம் தேய்த்த ஆட்டுக் கிடாய்த் தோல்கள்,
24. வெள்ளி, வெண்கலம், பலவித வேலைக்கேற்ற சேத்தீம் மரம் முதலியவற்றை வைத்திருந்தவன் ஆண்டவருக்கு அவற்றை ஒப்புக் கொடுத்தான்.
25. அன்றியும், திறமை உடைய பெண்களும் தாங்களே நெய்திருந்த நீலம், கருஞ்சிவப்பு, இரத்தநிறம் கொண்ட திரைகள் மெல்லிய சணற்புடவைகள்,
26. வெள்ளாட்டு உரோமம் முதலியவற்றை மனநிறைவோடு கொண்டுவந்தனர்.
27. மக்கள் தலைவர்கள் மார்ப்பதக்கத்தில் பதிக்கவேண்டிய கோமேதகம் முதலிய இரத்தினங்களையும்,
28. பரிமள வகைகளையும், விளக்குகளுக்கும் தைலக்கூட்டுதலுக்கும் நறுமணவகைத் தூபத்துக்கும் எண்ணெயையும் தந்தனர்.
29. மகளிர் ஆடவர் எல்லாரும், ஆண்டவர் மோயீசன் மூலமாகக் கட்டளையிட்டிருந்த வேலைகள் நிறைவேறும் பொருட்டுப் பக்தியுள்ள மனத்தோடு அன்பளிப்புக்கள் கொண்டுவந்தனர். இஸ்ராயேல் மக்கள் அனைவரும் மன உற்சாகத்துடன் காணிக்கைகளை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தனர்.
30. அப்போது மோயீசன் இஸ்ராயேல் மக்களை நோக்கி: இதோ ஆண்டவர் யூதா கோத்திரத்திலே கூறு என்பவனுடைய மகனான ஊரியின் மகன் பெசெலேயலை அவன் பெயர் சொல்லி அழைத்து,
31. அவனை இறை ஆவியினாலும் ஞானத்தினாலும் விவேகத்தினாலும், அறிவுக் கூர்மையினாலும், கல்வி, கலை முதலிய எல்லாவற்றினாலும் நிரப்பி,
32. பொன், வெள்ளி வெண்கல வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து முடிக்கவும்,
33. இரத்தினங்களை வெட்டிப் பதிக்கவும் தச்சுளியால் செய்யக் கூடுமான வியப்புக்குரிய வேலைகளைச் செய்யவும்,
34. அவனுக்கு வரம் தந்தருளினார். அன்றியும், தான் கோத்திரத்திலே அக்கிசமேக்கின் மகனான ஒலியாப் என்பவனையும் (ஆண்டவர் அழைத்திருந்தார்)
35. மரத்திலே சித்திர வேலைகளையும், புதுவகைத் திரைகளையும், நீலநிறம், கருஞ்சிவப்பு நிறம், இருமுறை சாயம் தோய்த்த இரத்த நிறம் கொண்ட நூல், மெல்லிய சணல் நூல் இவைகளைக் கொண்டு பலவகை நிறமுள்ள வியப்பூட்டும் பின்னல் வேலை, நெசவு வேலை, புதிதான வினோத வேலை முதலியன வெல்லாம் செய்து முடிப்பதற்கு இருவருக்கும் திறமையைத் தந்தருளினார் என்று சொன்னார்