1. அதன் பிறகு லேவி கோத்திரத்து மனிதன் ஒருவன் தனது கோத்திரத்துப் பெண்ணைக் கொண்டான்.
2. இவள் கருவுற்று ஒரு மகனைப் பெற்றாள். அவன் வடிவழகு உள்ளவனென்று கண்டு, அவனை மூன்று மாதமாய் ஒளித்து வைத்திருந்தாள்.
3. பிறகு குழந்தையை ஒளிக்க இயலாமையால், அவள் ஒரு நாணல் கூடையை எடுத்து, அதைக் களிமண்ணாலும் தாராலும் பூசி, அதனுள்ளே குழந்தையை வைத்து, ஆற்றங்கரைக் கோரைக்குள்ளே அதைப் போட்டுவிட்டாள்.
4. பிள்ளையின் சகோதரியோ என்ன நிகழுமோ என்று, தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
5. அப்பொழுது பாரவோனின் புதல்வி நீராட வந்து ஆற்றிலே இறங்கினாள். அவளுடைய பணிப் பெண்கள் கரையோரத்தில் உலாவிக் கொண்டிருந்தனர். அவள் கோரைகளுக்குள் கூடையைக் கண்டு, தன் பணிப்பெண்களுள் ஒருத்தியை அனுப்பி, அதைக் கொண்டு வரச்செய்தாள்.
6. அதைத் திறந்தபோது, அதனுள் அழுது கொண்டிருந்த ஒரு குழந்தையைக் கண்டாள். உடனே அதன் மீது இரக்கம் கொண்டாள். எபிரேயருடைய குழந்தைகளில் இது ஒன்றாகும் என்றாள்.
7. அந்நேரத்திலே குழந்தையின் சகோதரி அவளை நோக்கி: குழந்தைக்குப் பாலுட்டும்படி எபிரேயப் பெண்களில் ஒருத்தியை உம்மிடம் அழைத்துக் கொண்டு வரட்டுமா என்றாள்.
8. அவள்: ஆம், அழைத்து வா என்று பதில் கூறவே, சிறுமி போய்த் தன் தாயை அழைத்து வந்தாள்.
9. பாரவோன் புதல்வி அவளை நோக்கி: நீ இச்சிறுவனை எடுத்து எனக்காக வளர்த்திடுவாய். நான் உனக்குச் சம்பளம் கொடுப்பேன் என்று வாக்களித்தாள். அந்தப் பெண், சிறுவனை ஏற்றுக் கொண்டு வளர்த்தாள். பிறகு, பிள்ளை பெரிதான போது,
10. அதைப் பாரவோன் புதல்வியிடம் கொண்டுபோய் விட்டாள். இவளோ, அவனைச் சொந்தப் பிள்ளையாகச் சுவீகரித்துக் கொண்டு: அவனை நான் தண்ணீரினின்று எடுத்தேன் என்று கூறி, அவனுக்கு மோயீசன் என்று பெயரிட்டாள்.
11. மோயீசன் பெரியவனான காலத்தில் தன் சகோதரரிடம் போய், அவர்கள் கடும் துன்பம் அனுபவிப்பதையும், எபிரேயராகிய தன் சகோதரரில் ஒருவனை ஒர் எகிப்தியன் அடிப்பதையும் கண்டான்.
12. அவன் இங்கும் அங்கும் சுற்றிப் பார்த்து ஒருவரும் இல்லையென்று அறிந்து, எகிப்தியனை வெட்டி வீழ்த்தி மண்ணில் புதைத்துவிட்டான்.
13. அவன் மறுநாளும் வெளியே போகையில் எபிரேய மனிதர் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவன் அநியாயம் செய்தவனை நோக்கி: நீ உன் அயலானை அடிப்பதென்ன என்று கேட்டான்.
14. அதற்கு அவன்: எங்களுக்கு உன்னைத் தலைவனாகவும் நடுவராகவும் நியமித்தவன் யார்? நேற்று நீ எகிப்தியனைக் கொன்றது போல் என்னையும் கொன்று விட நினைக்கிறாயோ என்று பதில் சொன்னான். அதைக் கேட்ட மோயீசன்: அச்செய்தி எவ்வாறு வெளிப்பட்டது என்று அச்சம் கொண்டான்.
15. பாரவோனும் இச்செய்தியைக் கேட்டு அறியவே, மோயீசனைக் கொலை செய்ய வழி தேடினான். இவனோ, அவன் முன்னிலையினின்று ஓடிப் போய், மதியான் நாட்டிலே தங்கி, ஒரு கிணற்றருகே உட்கார்ந்தான்.
16. மதியான் நாட்டுக் குருவுக்கு ஏழு புதல்வியர் இருந்தனர். அவர்கள் தண்ணீர் முகந்து வந்து, தொட்டிகளை நிரப்பி, தங்கள் தந்தையின் மந்தைகட்குத் தண்ணீர் காட்டவிருக்கையில்,
17. ஆயர்கள் திடீரென வந்து அவர்களைத் துரத்தினர். மோயீசனோ, எழுந்து சென்று பெண்களுக்குத் துணைநின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
18. அவர்கள் தங்கள் தந்தையாகிய இராகுவேலிடம் திரும்பி வந்த போது, அவன்: நீங்கள் இவ்வளவு விரைவில் வந்ததென்ன என்று கேட்டான்.
19. அவர்கள்: எகிப்தியன் ஒருவன் எங்களை ஆயர்கள் கையினின்று காப்பாற்றினான். மேலும், அவன் எங்களுடன் தண்ணீர் முகந்து நம் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான் என்றனர்.
20. அதற்கு அவர்: அம்மனிதன் எங்கே இருக்கிறான்? அவனை நீங்கள் விட்டு வந்ததென்ன? உணவு உண்ண அவனை அழைத்து வாருங்கள் என்றார்.
21. மோயீசன் வந்து, தான் அவரோடு தங்கியிருப்பதாக உறுதி கூறினான்; பின்னர் அவர் மகள் செப்பொறாளை மணந்து கொண்டான்.
22. இவள் அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள். மோயீசன்: நான் வெளிநாட்டில் அந்நியனாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனை யேற்சம் என்று அழைத்தான். பிறகு அவள் மற்றொரு மகனைப் பெற்றாள். அவன்: உண்மையாகவே என் தந்தையின் கடவுள் எனக்கு உதவி புரிந்து என்னைப் பாரவோன் கையினின்று காப்பாற்றினர் என்று சொல்லி, அவனுக்கு எலியேசேர் என்று பெயரிட்டான்.
23. நெடுநாள் சென்றபின், எகிப்து மன்னன் இறந்தான். இஸ்ராயேல் மக்கள், வேலைகளின் பொருட்டுத் துயரப்பட்டுப் பெரும் கூக்குரலிட்டனர். அவர்கள் முறைப்பாடு, அவர்கள் வேலை செய்த இடத்தினின்று இறைவனுக்கு எட்டியது.
24. கடவுள் அவர்களுடைய புலம்பலைக் கேட்டு, தாம் ஆபிராகம், ஈசாக், யாக்கோபு என்பவர்களுடன் செய்திருந்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
25. பின் ஆண்டவர் இஸ்ராயேல் மக்களைக் கண்ணோக்கினார். அவர்கள் நிலையும் அவர் அறிந்திருந்தார்.